மஹேலவின் சதத்துடன் வலுவான நிலையில் இலங்கை அணி - Sri Lanka Muslim

மஹேலவின் சதத்துடன் வலுவான நிலையில் இலங்கை அணி

Contributors

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் சதத்துடன் வலுவான நிலையில் உள்ளதோடு 153 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

 

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் அரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

 

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டுபாயில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அந்த வகையில் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 63.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

 

குராம் மன்சூர் அதிகூடுதலாக 73 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அஹமட் செயிட் 3, முஹமட் ஹாபிஸ்21, யுனிஸ்கான் 13, மிஸ்பா உல் ஹக் 1 என சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினர்.

 
இலங்கை அணியில் நுவான் பிரதீப் மற்றும் ரங்கண ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்ற சுரங்க லக்மால் மற்றும் சமிந்த ஹேரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சிற்காக கருணாரத்ன மற்றும் கௌசல் சில்வா ஆகியோர் களமிறங்கினர். இதன் போது திமுது கருணாரத்ன 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நேற்றைய ஆட்டமுடிவின் போது இலங்கை 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை 57 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு களத்தில் கௌசல் சில்வா 12 ஓட்டங்களுடனும் சங்கக்கார 12 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

 
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியில் களத்திலிருந்த சங்கக்கார 26 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப அடுத்த வந்த சந்திமாலும் 12 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.

 

இந்நிலையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த கௌசல் சில்வாவுடன் மஹேல ஜயவர்தன கைகோர்த்தார். இருவரும் நிதானமாக அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது கௌசல் சில்வா 5 ஓட்டங்களால் டெஸ்ட் அரங்கில் தனது கன்னிச் சதத்தை தவறவிட்டார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கௌசல் சில்வா 221 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 95 ஓட்டங்களை பெற்றிருந்த போது முஹமட் ஹாபிசின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.

 
இதனையடுத்து மஹேலவுடன் மெத்தியூஸ் கைகோர்க்க சொற்ப நேரத்தில் மஹேல சதத்தை கடந்தார். 215 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக சதத்தை பூர்த்தி செய்த அவர் டெஸ்ட் அரங்கில் தனது 32 ஆவது சதத்தை கடந்தார். இச் சதத்தைஇ பிறந்துள்ள தனது குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக ஆடுகளத்திலிருந்து மகிழ்ச்சியுடன் சைகை மூலம் வெளிப்படுத்தினார்.

 
இதனையடுத்து இன்றைய ஆட்டம் நிறைவுக்கு வர மெத்தியூஸ் 42 ஓட்டங்களுடனும் மஹேல 106 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.(vk)

Web Design by Srilanka Muslims Web Team