மாகாண கல்விப் பணிப்பாளரே ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பீரா? » Sri Lanka Muslim

மாகாண கல்விப் பணிப்பாளரே ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பீரா?

oluvil

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்


தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவுக்கான தேர்தலை நடத்தாமல் செய்த சூழ்ச்சி வெளிவந்ததுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த 27.03.2018 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு விண்ணப்ப முடிவுத் திகதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்வுக்குழுவினைப் பல்கலைக்கழகத்தின் பேரவை சிபாரிசு செய்திருந்தது.

இதற்கான தேர்தல் திகதி இம்மாதம் 07 ஆம் திகதி எனவும் தீர்மானிக்கப் பட்டிருந்தது. இவ்விண்ணப்பத்தைக் கோருவதில் தற்போதைய உபவேந்தர் பல இழுத்தடிப்புக்களைச் செய்தமை, பேரவைக் கூட்டத்தை இடைநடுவில் வேண்டுமென்றே நிறுத்திவிட்டுச் சென்றமை போன்ற விளையாட்டுக்கள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விடயம். தானும் இம்முறை இத்தேர்தலில் குதிப்பதாக இருந்ததால் உண்மையில் இவர் இது சம்பந்தமான தீர்மானங்களில் தலையீடு செய்திருக்கக் கூடாது ஆனால் அவ்வாறு தர்மத்தை மீறி அவ்வாறு செய்திருந்தமையும் அனைவரும் அறிந்த விடயம்.

மேலும் பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பைக் காரணமாக வைத்து இப்பல்கலைக் கழகத்திற்கு வந்;திருந்த உபவேந்தர் விண்ணப்பம் உள்ளடங்கலான எந்தவித கடிதங்களையும் எடுக்கச் செல்லக்கூடாதென இவரது சார்பானவர்கள் இறுக்கமான கட்டளைகளைப் பிறப்பித்திருந்ததும் (ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்கூட தங்களது பட்டமளிப்பு விழாவைப் பிற்போட்டிருந்த வேளையில் இவர் பட்டமளிப்பு விழாவை கல்விசாரா ஊழியர்களின் பின்கதவு உதவியூடாக நடாத்தியமையும்) குறிப்பிடத்தக்கது. இவையனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து இம்மாதம் 07ஆம் திகதி உபவேந்தர் தெரிவுக்கான தேர்தல் இடம்பெறவிருந்த வேளையில் புதிதாக ஒரு புரளி கிளப்பப்பட்டது.

கந்தளாய் அத்தாரிக் கணிஷ்ட பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் ஜவாஹிர் என்பவர் தான் 26.03.2018 ஆம் திகதி உபவேந்தர் பதவிக்கான விண்ணப்பத்தை கையளிப்பதற்காக தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு வந்ததாகவும் அங்கு பிரதான நுழைவாயிலில் கடமையாற்றிக் கொண்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் இங்குள்ள அலுவலகங்கள் மூடியிருப்பதாகச் சொன்னதாகவும் அவர் திரும்பிச் சென்றதாகவும் பின்னர் அவர் மீண்டும் 27.03.2018 ஆம் திகதி வந்ததாகவும் பிற்பகல் சுமார் 2.50 மணியளவில் பதிவாளர் காரியாலயத்திற்குச் சென்றதாகவும் அந்த அலுவலகம் மூடியிருந்ததாகவும் பலமுறை பதிவாளரின் அலுவலகத் தொலைபேசிக்கு அழைத்ததாகவும் அதில் எவரும் பதிலளிக்கவில்லையெனவும் மீண்டும் அவர் அருகிலுள்ள தபாற்கந்தோருக்கு 3.00 மணியளவில் சென்று தன்னுடைய விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலில் அனுப்புவற்காகச் சென்றபோது அங்குள்ளவர்கள் அதைப் பொறுப்பெடுக்க முடியாதென்று கூறியதாகவும் தனக்கு உபவேந்தர் பதவிக்கான விண்ணப்பத்தைக் கையளிக்க முடியாமல் போனதாவும் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி ஒரு பித்தலாட்டத்திற்கான முறைப்பாடொன்றைப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருந்தார். மேலும் உபவேந்தர் தெரிவில் கலந்து கொள்வதற்காகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்தவரின் கைத்தொலைபேசிக்கும் அழைப்பை விடுத்து இந்த முறைப்பாட்டைக் கூறியிருந்தார்.

அதிபர்பணி செய்பவராயிருந்தாலும் தவறு செய்பவன் தடயம் விட்டுச் செல்வான் என்று நீதித்துறை சொல்வது பொய்த்திடுமா? இவரது முறைப்பாட்டுடன் தொடர்புபடுத்திப் பின்வரும் சந்தேகங்கள்; எழுந்துள்ளன.

இவர் ஒரு அரச அலுவலகர். இன்னுமொரு பதவிக்கு விண்ணப்பிக்கும் போது தன்னுடைய திணைக்களத் தலைவரூடாக விண்ணப்பித்திருக்க வேண்டும் என்பது இவருக்கு தெரியாதா?

அவ்வாறு விண்ணப்பித்துவிட்டு முற்பிரதியொன்றைக் கையளிப்பதற்காக வந்திருந்தால் இதுவரைக்கும் அந்த உண்மையான விண்ணப்பம் எங்கே? இவரது கல்விக்காரியாலயத்தில் செய்;யப்பட்ட தேடுதலின்படி இவர் அவ்வாறான எந்த விண்ணப்பமும் செய்திருக்கவில்லை.

கடந்த மாதம் 26.03.2018 அன்று அவர் ஒலுவிலுக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் தனது பாடசாலையில் வரவுக்கான கையொப்பமுமிட்டுள்ளார். இது எப்படி சாத்தியம்? அவ்வாறு கையொப்பமிட்டுவிட்டு எவருக்கும் சொல்லாமல் இங்கு வந்திருந்தால் அது Vacation of Post ஆகக் கருதப்பட மாட்டாதா?இவர் மீண்டும் 27.03.2018 ஆம் திகதி இங்கு வந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் இவர் இத்தினத்தில் தேசிய கல்வி நிறுவகத்திற்கு தனது கல்வி முதுமானிப் பட்டமளிப்புக்கான (இப்பட்டமளிப்பு 28.03.2018 ஆம் திகதி இடம்பெற்றது) அங்கியைப் பெற்றுக் கொள்வதற்காகத் தானே சென்று அங்கியைப் பெற்றுவிட்டு இத்தினத்தில் அங்கே கையொப்பமுமிட்டுள்ளார்.

அப்படியாயின் இவர் இதே தினத்தில் எவ்வாறு ஒலுவிலில் நின்றதாகவும் பதிவாளர் காரியாலயத்திற்குச் சென்றதாகவும் தபாற்கந்தோருக்குச் சென்றதாகவும் கூறியிருக்கின்றார்?மேலும் 26.03.2018 ஆம் திகதியோ அல்லது 27.03.2018 ஆம் திகதியோ அவ்வாறு எவரும் வந்திருக்கவில்லை என்றும் குறிப்பாக உபவேந்தர் விண்ணப்பத்தைக் கையளிப்பதற்காக எவரும் இங்கு வந்திருக்கவில்லை என்றும் இந்த நாட்களில் கடமையிலிருந்த இப்பல்கலைக் கழகத்தின் பாதுகாப்புப் பிரிவினர் எழுத்து மூலம் அறிவித்திருக்கும் வேளையில் உள்வந்து செல்வோரைப் பதியும் புத்தகத்திலும் அவ்வாறானதொரு பதிவு எதுவும் இல்லை. மேலும் இவர் வந்து போனதாகக் கூறும் நேரத்திற்கான சீசீடீவீ கமராவின் பதிவுகளிலும் அவ்வாறானதொரு பதிவுகள் எதுவும் இல்லை.

மேலும், அவ்வாறு வந்திருப்பின் பல்கலைக் கழகத்தினால் நியமிக்கப்பட்ட நபரின் கையடக்கத் தொலைபேசியின் இலக்கத்தைப் பெற்ற இவர் (இந்த நபரின் பெயர் இவருக்கு எப்படிக் கிடைத்தது? அவரின் கையடக்கத் தொலைபேசியின் இலக்கம் எப்படிக் கிடைத்தது?) பதிவாளர் காரியாலயத்தின் இலக்கத்தைப் பெற்ற இவர் ஏன் பதிவாளரின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை எடுக்கவில்லை?

இவரது மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றவுடன் இப்பல்கலைக்கழக உபவேந்தர் அந்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து உடனடியாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்? (இங்குள்ள பல்கலைக்கழகத்தின் ஆரம்ப காலத்திலிருந்து கடமையாற்றி வருகின்ற மிகவும் திறமைவாய்ந்த விரிவுரையாளர்கள் பேராசியரியர் பதவிக்கு விண்ணப்பித்து அதற்கான மதிப்Pடுகளின் முடிவுகள் பெறப்பட்டு சுமார் ஒரு வருடமாகியிருந்தும் அவர்களுக்கு அப்பதவிகளை வழங்குவதற்கான தேர்வுக்குழுவை (Selection Committee) இதுவரை போடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் (ஏனெனில் அவர்களுக்குப் பேராசிரியர் பதவி கிடைத்தால் தனது உபவேந்தர் பதவிக்கு போட்டி மேலும் அதிகரிக்கும் என்று குறுகிய எண்ணம்) உபவேந்தர் நியமனத்திற்கான சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தெரிவு செய்யப்படுகின்ற முதல் மூவரின் பெயர்களைப் பல்கலைக்கழகத்தின் பேரவைக்குத்தான் அதிகாரம் உண்டு. ஆகவே உபவேந்தர் பேரவைக்குத்தான் அறிவித்திருக்க வேண்டும் ஆனால் ஏன் அதற்கு மாறாக ஆணைக்குழுவிற்கு அனுப்பி இதனைக் குழப்பினார்.

காரணம், தற்போதுள்ள பேரவையின் காலம் இம்மாதம் 19 ஆம் திகதியுடன் முடிவுறுவதால் புதிதாக வரும் பேரவையை ஆதிக்கஞ்செலுத்தி மீண்டும் உபவேந்தராக வரலாம் என்ற சிறு பிள்ளைத் தனமாகவே இங்குள்ளவர்கள் கருதுகின்றனர். தற்போதுள்ள பேரவைதான் இவரை உபவேந்தராகக் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தெரிவு செய்திருந்தது. ஆனால் இப்பேரவையின் காலம் முடிவடைந்த பின்னர் தேர்தல் நடாத்த வேண்டுமென்ற இவர் அனைத்துக் கைங்கரியங்களையும் செய்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? (இது தொடர்பான மிக விரிவான தெளிவுபடுத்தல் ஸ்ரீலங்கா முஸ்லிம் இணையத்தளத்திற்கு வெகுவிரைவில் அனுப்பி வைக்கப்படும்).

இது இவ்வாறிருக்க, இந்தப் பித்தலாட்டத்திற்குக் காரணமாயிருந்து இப்பல்ககலைக் கழகத்தையும், மானியங்கள் ஆணைக்குழுவினையும், அரசாங்கத்தையும் ஏமாற்றிய இந்த அதிபருக்கெதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் வேளையில் இவருக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் கல்வி அமைச்சையும், மாகாணக் கல்விப் பணிப்பாளரையும் எழுத்து மூலம் வேண்டியிருக்கின்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

(இக்கட்டுரை தொடர்பில் மறுப்புக்கள் இருக்குமாயின் அது பிரசுரம் செய்யப்படும்)

Web Design by The Design Lanka