மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னனியின் நிலைப்பாடு என்ன..? - Sri Lanka Muslim

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னனியின் நிலைப்பாடு என்ன..?

Contributors
author image

Editorial Team

“எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் களமிறங்குவதற்கு எதிர்ப்பார்ப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் நேற்று (31) காலை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றிருந்த வேலுகுமாரிடம், “மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நடத்தி முடிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அதற்கான சட்ட ரீதியான தடைகளை தகர்ப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன. எனவே, குறித்த தேர்தலை எதிர்கொள்வதற்கு உங்கள் கட்சி – கூட்டணி தயாரா?” – என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “தேர்தல் என்பது ஜனநாயகத்தின் – மக்கள் ஆட்சியின் பிரதான அங்கம். வாக்களிப்பு என்பது மக்களுக்கான உரிமை. அந்த வகையில் எந்நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட விரும்புபவர்கள், எதிர்ப்பார்ப்பவர்களிடம் இருந்து எமது கண்டி மாவட்ட கட்சி அலுவலகம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில் எமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் கிடைத்த பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பொருத்தமான, தகுதியான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். வெற்றிகரமாக தேர்தலை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயார்படுத்தப்படுவார்கள்” என்றார்.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடுமா அல்லது ஐக்கிய மக்கள் சக்தியாகவா களமிறங்கும்? என எழுப்பட்ட மற்றுமொரு கேள்விக்கு,

“அரசியல் சூழ்நிலை – களநிலைவரம் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றோம். தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னர், எமது கட்சி, கூட்டணியின் உயர்பீடம்கூடி – மக்கள் பக்கம்நின்று உரிய முடிவை எடுக்கும்” எனவும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team