மாகாண சபைத் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெறப்போவதாக தகவல்! - Sri Lanka Muslim

மாகாண சபைத் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெறப்போவதாக தகவல்!

Contributors

மாகாண சபைத் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெறப்போவதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று திங்கட்கிழமை ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடந்தது.

மாகாண, உள்ளூராட்சிகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனினால் கடந்த அமைச்சரவை சந்திப்பின்போது, மாகாண சபைத் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் யோசனையை சமர்பித்திருந்தார்.

அதற்கெதிராக, அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, உதய பிரபாத் கம்மன்பில, டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டனர்.

கட்சித்தலைவர்கள் மாநாட்டை நடத்தி இதுபற்றி இறுதிமுடிவை எடுக்கும்படி அப்போது ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டதற்கு அமைவாகவே மேற்படி இன்று சந்திப்பு நடந்துள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை. அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடந்த இச்சந்திப்பில் ஏனைய அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் முறை மாற்றத்தை அமைச்சர்கள் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

குறிப்பாக ஒரு தொகுதியில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்கின்ற பிரிவை கடுமையாக எதிர்த்து கருத்து வெளியிட்டிருக்கின்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.

இவ்வாறு அமைச்சர்கள் பலரும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டுள்ளனர்.

அதன் காரணமாக உத்தேச யோசனையை அரசாங்கம் வாபஸ் பெறும் என்றே அரச மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team