மாகாண சபை தேர்தல் முறைமை எந்த சூழ்நிலையிலும் இல்லாமல் செய்யப்படுவதை அனுமதிக்கவே முடியாது - முன்னாள் அமைச்சர் ஹசன் அலி..! - Sri Lanka Muslim

மாகாண சபை தேர்தல் முறைமை எந்த சூழ்நிலையிலும் இல்லாமல் செய்யப்படுவதை அனுமதிக்கவே முடியாது – முன்னாள் அமைச்சர் ஹசன் அலி..!

Contributors

மாகாண சபை தேர்தல் முறைமை எந்தவொரு சூழ்நிலைகளிலும் இல்லாமல் செய்யப்படுவது அனுமதிக்கப்பட முடியாது, இது தொடர்பான தீர்மானங்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரே நாளில் பொதுஜன வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு அவற்றின் முடிவுகளுக்கு அமைய எடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போஷாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

தேர்தல் மறுசீரமைப்பு குழுவுக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தீர்வு யோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை நிந்தவூர் இல்லத்தில் சந்தித்து பேசியபோது ஹசன் அலி மேலும் தெரிவித்தவை வ்வருமாறு

மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் அனைத்தும்  விகிதாசார தேர்தல் முறைமையிலேயே தொடர்ந்தும் இடம்பெறுதல் வேண்டும். பன்முக சமூகங்களினதும் அபிலாஷைகளை உள்வாங்குவதற்காக விகிதாசார தேர்தல் முறைமையை வலுப்படுத்த முடியும்,

இதே போலவேதான் தற்போதைய விகிதாசார தேர்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட முடியும்.அதே நேரத்தில் தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமையில் இருக்க கூடிய பிழைகளை இல்லாமல் செய்தல் என்கிற போர்வையில் தேர்தல்கள் பிற்போடப்படுவதை அனுமதிக்கவே முடியாது.

அடுத்த தேர்தல்களுக்கான திகதி உரிய சபைகளின் முதலாவது அமர்வின்போது கட்டாயம் பிரகடனப்படுத்தப்படுதல் வேண்டும். 
தேர்தல் முறைமையில் ஏதேனும் மாற்றங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவை எதிர்கால தேர்தல்களில் மாத்திரமே அமுல்படுத்தப்பட வேண்டும்.

தெரிவான மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விபரங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றபோதோ அல்லது அதற்கு முன்னரோ அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். எந்தவொரு மட்டுப்பாடுகளும் இல்லாமல் இந்நாட்டு பிரஜைகள் எவரும் தகவல் அறியும் சட்டத்துக்கு கீழ் இவ்விபரங்களை பெற முடிதல் வேண்டும்.

கட்சியின் கொள்கை, கோட்பாடு, மக்கள் நலன் போன்ற விடயங்கள் சார்ந்து  அரசாங்க தரப்புக்கு அல்லது எதிரணிக்கு கட்சி ஒன்றின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற அனுமதிக்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட கட்சி தாவல்கள் முற்று முழுதாக தடை செய்யப்பட வேண்டும் என்று நாம் ஊக்குவிக்கின்றோம்.

தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு அடிப்படை கல்வி தகைமைகள் வரையறுக்கப்படல் வேண்டும். இது தேர்தல் சட்டத்தில் உள்ளடக்கப்படுதலும் வேண்டும். பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதிகளி எண்ணிக்கையை ஊக்குவிக்க வேட்பு மனுக்களிலேயே உரிய விகிதம் கட்டாயம் பிரதிபலிக்கப்படல் வேண்டும்.

சிறுபான்மைகளுக்கான தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை அவர்களுடைய தேசிய மட்டத்திலான சதவீதத்துக்கு அமைய உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதே நேரம் வடக்கு, கிழக்கு, மத்திய மலைநாடு ஆகியவற்றில் வாழ்கின்ற மக்களுக்கான தேர்தல் தொகுதிகள் அவர்களுடைய இன சதவீதத்துக்கு ஏற்ப அவரவர் பிரதிநிதிகளை தெரிவு செய்ய கூடிய வகையில் உருவாக்கப்படல் வேண்டும்.

இதற்கு அமைய திகமடுல்ல தேர்தல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும். கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகள் இதில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய தேர்தல் மாவட்டம் ஒன்று உருவாக்கப்படுதல் வேண்டும். இவ்வாறான கட்டமைப்பு யாழ். மாவட்டத்திலும், வன்னியிலும் உள்ளது. யாழ். மாவட்டம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி என இரண்டு தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. வன்னி மாவட்டம் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் என்று மூன்று தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் இவ்விதம் இரண்டாக பிரிக்கப்படுவதன் மூலமே தேர்தல்களில் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் வெற்றி பெற கூடியதாக இருக்கும். மேலும் அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்கப்பட வேண்டும், சம்மாந்துறை நகர சபை தரம் உயர்த்தப்பட வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூருக்கு பிரதேச சபையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை மத்திக்கு பிரதேச சபையும் உருவாக்கப்பட வேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team