மாங்குளத்தில் பயணிகள் ஒய்வகம், கைவினை பொருள் விற்பனை நிலையத்திற்கு அடிக்கல் - Sri Lanka Muslim

மாங்குளத்தில் பயணிகள் ஒய்வகம், கைவினை பொருள் விற்பனை நிலையத்திற்கு அடிக்கல்

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனையுடன் ஏ9 மாங்குளம் பகுதியில் பயணிகள் ஒய்வகம் மற்றும் கைவினை பொருள் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மாங்குளம் பகுதியில் மேற்படி நிகழ்வு  (09) இடம்பெற்றுள்ளது.

முன்பதாக பிரதான வாயிலில் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டிடம் அமையப் பெறவுள்ள பகுதிக்கு அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.

 

அங்கு மத வழிபாடுகளைத் தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
அடுத்து அங்கு சிறப்பாக அமைக்கப்பட்ட நிகழ்விடத்தில் வன்னிவள சுயஅபிவிருத்தி நிறுவனத்தின் தலைவி திருமதி யோகராணி அழகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சுவிஸ் தொழிலாளர் நிலையத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டானியல் புறோங்கன், முல்லைத்தீவு மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சிறிரங்கன், மாங்குளம் பங்குத்தந்தை வண.பிதா ஜேம்ஸ் பத்திநாதர், பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினர் உரையாற்றினார்.

 

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, யு.எஸ்.எயிட் நிறுவனம் மற்றும் சுவிஸ் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் 16 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் பயணிகள் ஒய்வகம் மற்றும் கைவினைப் பொருள் விற்பனை நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

 

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள இந்நிலையத்தில் பனை சார்ந்த கைவினை கைப்பணிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் அதேவேளை, அவை விற்பனைக்காகவும் வைக்கப்படவுள்ளதுடன், இந்நிலையத்தின் ஊடாக கைவினை கைப்பணியாளர்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் பட்சத்தில் மாங்குளம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளினது தொழிற்துறை சார்ந்தோரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக நிர்மாணிக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

 

இதனிடையே, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பனை சார்ந்த உற்பத்திகளையும் அமைச்சர் உள்ளடங்கிய அதிதிகள் பார்வையிட்டதுடன், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிலையத்தின் மாதிரி தொடர்பிலும் துறைசார்ந்தோருடனும் கலந்துரையாடிக் கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சரின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஜெயராஜ், மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.

 

DAKLAS1

 

DAKLAS1.jpg2

Web Design by Srilanka Muslims Web Team