மாடறுப்புத் தடையால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமுகம் மாத்திரமல்ல, அதனை அரசு விரைவில் விளங்கிக் கொள்ளும்..! - Sri Lanka Muslim

மாடறுப்புத் தடையால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமுகம் மாத்திரமல்ல, அதனை அரசு விரைவில் விளங்கிக் கொள்ளும்..!

Contributors
author image

Editorial Team

இந்த அரசு கொண்டுவரத் துடிக்கும் மாடறுப்புத் தடையால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமுகம் மாத்திரமல்ல. இந்நாட்டில் வாழும் சகல சமுகத்தினரும் தான் பாதிக்கப் படப்போகின்றார்கள் என்பதை அரசு விளங்கிக் கொள்ளும் நாள் வெகுவிரைவில் வரும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்நாட்டில் மாட்டிறைச்சியை முஸ்லிம் சமுகம் மட்டும் தான் சாப்பிடுகின்றது. இதனைத் தடை செய்வதன் மூலம் முஸ்லிம் சமுகத்திற்கு பாடம் புகட்டலாம் என்ற மாயையை பெரும்பான்மை சமுகத்திற்குக் காட்டுவதற்காகவே அரசு மாடறுப்புத் தடையைக் கொண்டு வர முழுமுயற்சி எடுத்து வருகின்றது.

மாட்டிறைச்சியை இந்நாட்டில் யார் யாரெல்லாம் சாப்பிடுகின்றார்கள் என்ற விடயம் மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்குத் தெரியும். மாட்டிறைச்சி விற்பனையாளர்களின் புள்ளிவிபரங்களின் படி பார்த்தால் இலங்கையில் எல்லாச் சமுகத்தினரும் கனிசமான அளவு மாட்டிறைச்சியைச் சாப்பிடுகின்றார்கள்.

இதனைவிட இந்நாட்டில் அதிகளவு மாடு வளர்ப்போர் சிங்கள மக்கள் தான். பால் கறக்க முடியாத மற்றும் தேவைக்கு மேலதிகமாக உள்ள மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யும் வாழ்வாதார நடவடிக்கைகளை இம்மக்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். மாடறுப்புத் தடையால் பெரிதும் பாதிக்கப் படப்போவது அவர்கள் தான்.

முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் ஏற்கனவே அவர்கள் மாட்டிறைச்சி உண்பதைக் குறைத்து விட்டார்கள். இதனைவிட மாடுகளுக்கு காலத்துக் காலம் ஏற்படும் நோய்களினால் மாட்டிறைச்சி எல்லாக்காலமும் கிடைப்பதுமில்லை. இதனால் வேறு உணவுகளை உண்டும் அவர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள்.

மாட்டிறைச்சி இல்லை என்பதற்காக முஸ்லிம் மக்கள் யாரும் பட்டினி கிடக்கவும் மாட்டார்கள். இறந்து போகவும் மாட்டார்கள் என்பதை அரசுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் இந்தத் தொழிலை நம்பி இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்க அரசு நடவடிக்கை எடுப்பதுதான்.

மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் தடை செய்வதென்பது இந்த அரசுக்கு கைவந்த கலை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்தெல்லாம் இந்த அரசுக்கு கவலையில்லை. மஞ்சள் இறக்குமதித் தடை, அசேதன உரம் தடை, உழுந்து போன்ற தானியங்கள் இறக்குமதித் தடை போன்றன மாற்று ஏற்பாடு இல்லாமல் இந்த அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள்.

இதனால் பொதுமக்கள் அடைந்த பாதிப்புகள் குறித்து அரசு கவனம் செலுத்தியிருந்தால் மாடறுப்புத் தடையால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கும். எனினும் அவ்வாறான மாற்று ஏற்பாடுகள் குறித்த எந்த அறிவித்தலையும் அரசு இதுவரை விடுக்க வில்லை.

எனவே மாடறுப்புத் தடை பற்றி கவனம் செலுத்தும் அரசு இந்தத் தொழிலோடு நேரடியாக மற்றும் மறைமுகமாக சம்பந்தப்படும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இம்ரான் எம்.பி தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team