மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் மறுப்பு - Sri Lanka Muslim

மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் மறுப்பு

Contributors

-மொஹொமட் ஆஸிக்

ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மாட்டிறைச்சிக் கடைகளுக்கு 2014ஆம் ஆண்டில் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நிறுத்துவதற்கு இன்று (27) இடம்பெற்ற பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன் தலைவர் ஆனந்த ஜயவிலால் தலமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த தனுஷ்க மல்வௌ மும்மொழிந்த இப்பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியைச் சேர்ந்த சஞ்ஜீவ குருந்துவத்த வழிமொழிந்ததை அடுத்து அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய தனுஷ்க மல்வௌ, ‘ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைப் பிரிவு சிங்கள பௌத்த மக்கள் அதிகம் வாழும் பிரதேசமாகும். இங்கு மாட்டிறைச்சி கடைகள் இருப்பது பௌத்த மதத்தை அவமதிப்பதாக மக்கள் கருதுகின்றனர். எனவே 2014ஆம் ஆண்டிலிருந்து மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை நிறுத்துமாறு வேண்டுகின்றேன்’ என்றார்.

இதனை வழிமொழிந்த பிரதேச சபை உறுப்பினர் சஞ்சீவ குருந்துவத்த, ‘கடந்த காலத்தில் எமது பிரதேச சபை எல்லைக்குள் மாடுகள் அறுப்பதை தடை செய்தாலும் சட்டவிரோதமான முறையில் பல பகுதிகளிலிருந்தும் மாடுகள் அறுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன’ என்றார்.

அத்துடன், ‘நாங்கள் மாடுகள் அறுப்பதை தடை செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய் உள்ளது. எனவே இந்த பிரேரணையின் படி மாட்டிறைச்சிக் கடைகளையும் மூடி விடுவது சிறந்ததாகும்’ என்றார். இதனையடுத்து, இப்பிரேரணை எந்தவித எதிர்ப்புகளும் இன்றி  நிறைவேற்றப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team