மிக மோசமான வெளிநாட்டுக்கொள்கைகளை நோக்கி அரசாங்கம் நகர்ந்துள்ளது - எரான் விக்ரமரத்ன - Sri Lanka Muslim

மிக மோசமான வெளிநாட்டுக்கொள்கைகளை நோக்கி அரசாங்கம் நகர்ந்துள்ளது – எரான் விக்ரமரத்ன

Contributors

நா.தனுஜா)

மிகவும் சொற்பளவான நட்பு நாடுகளையே இலங்கை தக்கவைத்துள்ளது என்பதை அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தொடர்பில் முன்வைக்கப்பட்ட புதிய பிரேரணைக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் வெளிப்படுத்தியுள்ளன என்று தெரிவித்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, மிகமோசமான பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து தற்போது மோசமான வெளிநாட்டுக்கொள்கைகளை நோக்கி அரசாங்கம் நகர்ந்திருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள எரான் விக்ரமரத்னவின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை அரசாங்கம் தற்போது ஒரு நெருக்கடியிலிருந்து மற்றுமொரு நெருக்கடிக்கு உட்பட்டிருக்கிறது.

மிகமோசமான பொருளாதார நிர்வாகம், கொவிட் – 19 கட்டுப்படுத்துவதில் கையாளப்பட்ட மோசமான உத்திகள் ஆகியவற்றிலிருந்து இப்போது பேரழிவுதரும் வெளிநாட்டுக் கொள்கைகளை நோக்கி அரசாங்கம் நகர்ந்திருக்கின்றது.

போர் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில், இப்போதுதான் வெளிநாட்டுக்கொள்கை மிகவும் மோசமான மட்டத்தில் பேணப்படுகின்றது என்று கூறமுடியும்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் மாத்திரமன்றி கடந்த 16 மாதகாலத்தில் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைச் சரிசெய்வதற்கு அதிக முக்கியத்துவமளிக்கும் விதமாகவே புதிய பிரேரணை அமைந்துள்ளது.

கொள்கைகளை வகுப்பதற்கான பொறுப்பிற்குப் பொருத்தமற்ற நபர்களை நியமித்ததன் விளைவாக, கொள்கை அடிப்படையில் அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளது.

சுகாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞான ரீதியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாலேயே கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கையாளப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோன்று வெளியுறவுக்கொள்கைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமே இராஜதந்திர ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்நிலையில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் ஏற்படக்கூடிய சவால்களையும் பாதகமான தாக்கங்களையும் எதிர்கொள்வதற்கும் அவற்றைக் குறைத்துக்கொள்வதற்கும் அவசியமான புதிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும்.

அதேவேளை இலங்கை குறித்த கடந்தகால அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் சர்வதேச சமூகத்தின் கரிசனைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலான உள்ளகப்பொறிமுறைகளை அமுல்படுத்துவது அவசியமாகும்.

நல்லிணக்க செயன்முறையைப் பொறுத்தவரையில் கடந்தகால சம்பவங்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதென்பது மிகவும் முக்கியமானதாகும். நாட்டுமக்கள் மீதான அக்கறையுடன் முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு செயற்திறனான நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதற்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நாம் தயாராக இருக்கின்றோம் என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team