மியன்மாரில் பேரழிவை தவிர்க்க ஐ.நா. பாதுகாப்பு சபையில் மன்றாட்டம் - சீனா, ரஷ்யா, இந்தியா, வியட்நாம் முட்டுக்கட்டை - Sri Lanka Muslim

மியன்மாரில் பேரழிவை தவிர்க்க ஐ.நா. பாதுகாப்பு சபையில் மன்றாட்டம் – சீனா, ரஷ்யா, இந்தியா, வியட்நாம் முட்டுக்கட்டை

Contributors

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அங்கு இரத்தம் சிந்தப்படும் நெருக்கடி குறித்து மியன்மாருக்கான ஐ.நா சிறப்புத் தூதுவர் கிறிஸ்டின் ஸ்கெர்னர் பர்க்னர், பாதுகாப்புச் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச் சபையின் மூடிய அறையில் கடந்த புதனன்று உரையாற்றிய ஸ்கெர்னர் பர்க்னர், பெப்ரவரி 1 ஆம் திகதி அதிகாரத்தை கைப்பற்றிய இராணுவத்திற்கு நாட்டை கையாள முடியாதிருப்பதாகவும் களநிலவரம் மேலும் மோசமடைவதாகவும் எச்சரித்துள்ளார்.

“மியன்மார் மக்களுக்கு என்ன சரியோ அதனை செய்வது மற்றும் ஆசியாவின் மையப்பகுதியில் பேரழிவை தவிர்க்க கூட்டு நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு இருக்கின்ற அனைத்து சாதகங்கள் பற்றியும் அவதானம் செலுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரத்தம் சிந்தப்படும் நிகழ்வுகளின் போக்கை மாற்றுவதற்கு முக்கிய நடவடிக்கைகளை இந்தச் சபை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்கெர்னர் பர்க்னர் கேட்டுக் கொண்டார்.

மியன்மாரில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் நியூயோர்க்கில் ஐ.நா கூட்டத்தை நடத்த பிரிட்டன் கோரிக்கை விடுத்திருந்தது.

மியன்மாரில் இதுவரை குறைந்தது 521 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு கடந்த சனிக்கிழமை மாத்திரம் 141 பேர் கொல்லப்பட்டனர்.

மறுபுரம் முன்னரங்குப் பகுதிகளில் சிறுபான்மை கிளர்ச்சியாளர்கள் மற்றும் இராணுவத்திற்கு இடையிலான மோதலும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பாதுகாப்புத் தேடி மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

“இராணுவத்தின் இந்த கடுமையான நடவடிக்கைகளை முழுமையாக ஏற்க முடியாது. சர்வதேச சமூகத்திடம் இருந்து கண்டிப்பான செய்தி வழக்கப்பட வேண்டும்” என்று ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதுவர் பார்பரா வூட்வேர்ட் பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சர்வதேசம் பதில் அளிக்கும் வகையில் பாதுகாப்புச் சபை பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்புச் சபை இதுவரை மியன்மாரில் இடம்பெறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து இரு அறிக்கைகளை வெளியிட்டபோதும், சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் வியட்நாமின் எதிர்ப்புக் காரணமாக இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை கண்டிக்கும் சொற்பதம் நீக்கப்பட்டதோடு அந்நாட்டின் மீது மேலும் நடவடிக்கை எடுப்பது தடுக்கப்பட்டது.

இதன்போது மியன்மார் இராணுவத் தலைவர்கள் மீதான தடை முயற்சியை சீனா நிராகரித்தது. இந்த நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று ஐ.நாவுக்கான சீனத் தூதுவர் இந்த அவசரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team