மியான்மரில் இருந்து பங்களாதேஷுக்கு சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது - 70 பேர் மரணம் - Sri Lanka Muslim

மியான்மரில் இருந்து பங்களாதேஷுக்கு சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது – 70 பேர் மரணம்

Contributors

மியான்மரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில், நீரில் மூழ்கி 62 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு நேற்று 70 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று வங்காள விரிகுடா கடலில் சென்றது. மியான்மரில் உள்ள ஓன் தாவ் கி என்ற கிராமத்தில் இருந்து காலை 3 மணிக்கு கிளம்பிய அந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 70 பேர் வரை இருந்துள்ளனர். சில ஆண்டுகளாக அங்கு நடைபெற்று வரும் மதக் கலவரம் காரணமாக ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி அருகில் இருக்கும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதேபோல் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலரும், உறவினர்களும், கிராமத்தினரும் என பலர் நேற்று படகில் சென்றுள்ளனர். அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியதாலும், தற்போது மழை காலம் என்பதால் கடுமையான காற்று வீசியதாலும் வங்காள விரிகுடா கடல் நடுவே சென்று கொண்டிருந்த போது படகு எதிர்பாராத விதமாக சேதம் அடைந்தது. இதனால் படகில் கடல்நீர் புகுந்தது. பாரம் தாங்காமல் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த குழந்தைகள் உள்பட 70 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

இதில் இன்று காலை குழந்தைகள் உள்பட 8 பேரை மீட்டதாக மியான்மர் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி பலியாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த வாரம் சுமார் 1500 பேர் இதே போல் மியான்மரை விட்டு வெளியேறி உள்ளனர்.

மியான்மரில் நடைபெறும் வன்முறைகளுக்கு பயந்து கடந்த 18 மாதத்தில் மட்டும் 2.5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மியான்மரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team