மில்லியனை கோடியாக்கி சம்மாந்துறை மக்களை மடையனாக்க மு.கா முயற்சிக்கின்றதா? » Sri Lanka Muslim

மில்லியனை கோடியாக்கி சம்மாந்துறை மக்களை மடையனாக்க மு.கா முயற்சிக்கின்றதா?

27781944_946107122223747_1253054355_n

Contributors
author image

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

 

மு.காவானது கடந்த 17 வருட காலத்துக்கும் மேலாக அம்பாறை மாவட்ட ஆதிக்கத்தை, தன் கீழ் வைத்துள்ளது. இவர்கள் இக் காலப்பகுதியில் மக்களுக்கு பயன்படும் வகையில் பெரிதாக எதனையும் செய்யாது, தற்போது மக்களிடம் வந்து, அதனை செய்கிறோம், இதனை செய்கிறோமென கூறி வருகிறார்கள்.

அதில் சம்மாந்துறைக்கு ஆயிரம் மில்லியன் ரூபாய் அபிவிருத்தியை செய்யப்போவதாக கூறி வருகிறார்கள். இதனை நேற்றைய நேத்ரா தொலைக்காட்சியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெளிவாக  குறிப்பிடுகிறார். இவர்கள் இவ்வளவு நாளும், இவ்வாறான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருந்தால், இப்போது சொல்வதையும் நம்பலாம். இவர்கள் வாயால் வடை சுடுபவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.

மு.காவின் சம்மாந்துறை தேர்தல் நடவடிக்கை குழுவானது, நாளை இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு ஒரு துண்டும் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரம் மிக வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அத் துண்டுப்பிரசுரத்தில் 1000 கோடி ரூபாய் செலவில் சம்மாந்துறை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 இது உண்மையில் ஆயிரம் மில்லியன் ரூபாயாகும். ஆயிரம் கோடிக்கும் ஆயிரம் மில்லியனுக்கும் இடையில் பத்து மடங்கு வேறுபாடுள்ளது. இவர்களுக்கு கோடிக்கும் மில்லியனுக்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா அல்லது சம்மாந்துறை மக்களை மடையனாக்கும் முயற்சியா? ஒரு துண்டுப் பிரசுரத்தை பல தடவைகள் சரி பார்த்தே வெளியிடுவார்கள். அதன் போது, இதனை ஒருவராவது நிச்சயம் கண்டு பிடித்திருப்பார்கள். இவ்விதத்தில் சிந்திக்கும் போது, சம்மாந்துறை மக்களை கோடியென கூறி, வாய் பிளக்கச் செய்யும் செயற்பாடாகவே நோக்க முடிகிறது.

இப்போதெல்லாம் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். மு.காவின் இவ்வாறான ஏமாற்று அரசியல் செய்யும் காலம் மலையேறிவிட்டது. இது தவறுதலாக போடப்பட்டுவிட்டதென கூறி, நியாயப்படுத்த முனையலாம். ஒரு துண்டுப் பிரச்சுரத்தை, சரியான பெறுமானத்தை இட்டு வெளியிட முடியாதவர்கள், பெறுமானம் தெரியாதவர்களிடம், எப்படி பிரதேச சபை ஆட்சியை வழங்க முடியும்? குறித்த செயல் மூலம் மு.கா எவ்வளவு ரூபாய் பெறுமதியான சேவை செய்யவுள்ளது என்பது அங்குள்ளவர்களுக்கு தெரியாது என்பது புலனாகின்றது. இது தான், அவர்களது சேவையின் செப்பமாகும். சிந்திப்போம்.. வாக்களிப்போம்…

27781944_946107122223747_1253054355_n

Web Design by The Design Lanka