மீட்புப் பணியில் ராணுவம்: வெள்ளத்தில் சிக்கிய 13 ஆயிரம் பேர் மீட்பு (Photo) - Sri Lanka Muslim

மீட்புப் பணியில் ராணுவம்: வெள்ளத்தில் சிக்கிய 13 ஆயிரம் பேர் மீட்பு (Photo)

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

 

காஞ்சிபுரம் நவ. 18–

பலத்த மழையின் காரணமாக, தாம்பரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 12,995 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று காஞ்சிபுரம் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பாளர் கே.ராஜாராமன் கூறினார்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்புக் கண்காணிப்பாளர்களாக 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஜெயலலிதா அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, அவர்கள் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையை அடுத்த தாம்பரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற வெள்ள மீட்புப் பணிகள் குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான சிறப்புக் கண்காணிப்பாளர் ராஜாராமன் கூறியதாவது: தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சி.டி.ஓ. காலனி, ஸ்ரீசாய் காலனி, சமத்துவ பெரியார் நகர், அன்னை அஞ்சுகம் நகர், முடிச்சூர், வரதராஜபுரம், மகாலட்சுமி நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வீடுகளில் இருந்தவர்கள் வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

இதையடுத்து, அவர்களை மீட்பதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட நான்கு குழுக்கள் மூலம் வெள்ளப் பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. மீட்புப் பணிகளில் 6 கடலோரப் பாதுகாப்புப் படை, விமானப் படை, ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. வெள்ளத்தில் உயிர் தப்பி வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் 4 ஆயிரம் உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைவரும் மீட்கப்பட்டு, 99 சதவீத மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 23 பேர் சாவு: இந்தப் பகுதிகளில் தேங்கி இருக்கும் வெள்ளநீர் 3 நாள்களுக்குள் வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி, மழைநீர், கழிவுநீர்த் தேக்கத்தால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கை, இதர கட்டமைப்பு, போக்குவரத்து பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளோம்.

துவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.கஜலட்சுமி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கே.பணீந்தர ரெட்டி, மீன்வளத் துறை செயலர் எஸ்.விஜயகுமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் ஜி.பிரகாஷ், மண்டல நிர்வாக இயக்குநர் என்.எஸ்.பிரேமா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பணியில் 673 பேர்: தேசிய இடர்பாடுகள் மீட்புப் படை, மாநில இடர்ப்பாடுகள் மீட்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, இந்திய ராணுவ மீட்புத் துறை, கடற்படை, மீன்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு அமைப்புகளைச் சேர்ந்த 673 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைவரது ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 130 படகுகள் பயன்படுத்தப்பட்டன.

சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் 15 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகள் நீரில் மூழ்கியதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேற்கு தாம்பரம் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கி விட்டன. ராணுவ வீரர்கள் படகு, ஹெலிகாப்டர் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர்.

flo.jpg2.jpg3.jpg4 flo.jpg2.jpg3 flo.jpg2 flo

Web Design by Srilanka Muslims Web Team