மீண்டும் இலங்கைக்கு GSP+ சலுகை ...! » Sri Lanka Muslim

மீண்டும் இலங்கைக்கு GSP+ சலுகை …!

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இலங்கை ஏற்கனவே இழந்திருந்த GSP+ சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய வர்த்தக ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிறந்த மாற்றங்களை பாராட்டி அந்த செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கான ஒத்துழைப்பாக இந்த வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய வர்த்தக ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மேற்கொண்டுவரும் சிறந்த வெளிநாட்டு கொள்கையே இந்த சாதகமான நிலை உருவாக காரணமென பொருளாதார மற்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி அவர்கள் அண்மையில் ஜேர்மனிக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜேர்மன் தலைவர் ஆஞ்சலா மேர்கல் அம்மையாரிடம், GSP+ வரிச்சலுகையை மீண்டும் வழங்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்கமைய அந்த வரிச்சலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க தலையீடு செய்வதாக ஜேர்மன் தலைவர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் மேற்கொண்ட அனைத்து உத்தியோகபூர்வ விஜயங்களின் போதும் ஐரோப்பிய அரச தலைவர்களை சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பாக அவர்களது கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி கோட்பாடுகளை பாதுகாத்து பேண்தகு பொருளாதார அபிவிருத்திக்காக மேற்கொள்ளும் பயணத்துக்கு வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக மேற்படி தலைவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தனர்.

அந்த சாதகமான பிரதிபலிப்புக்கமைய GSP+ சலுகை நிரந்தரமாக இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் அண்மையில் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டுடன் GSP+ சலுகை மீண்டும் கிடைப்பதன் ஊடாக நாட்டின் ஆடைத்தொழிற்துறையில் புதிய உத்வேகம் ஏற்படுவதுடன் அதன் மூலம் எமது ஏற்றுமதி வருமானம் வளர்ச்சியடைவதுடன் ஆடைத்தொழிற்துறை ஊழியர்களுக்கும் பல சலுகைகள் கிடைக்கும்.

Web Design by The Design Lanka