முக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல - சோனியா காந்தி - Sri Lanka Muslim

முக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல – சோனியா காந்தி

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

 

புதுடெல்லி, நவ. 3-

நாட்டில் பெருகி வரும் ‘சகிப்பின்மை’க்கு எதிராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க சோனியா, ராகுல் தலைமையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி காங்கிரஸார் பேரணி நடத்தினர். முக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்த பின் சோனியா காந்தி கூறியுள்ளார்.

நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாத நிலைமை நிலவுவதாகக் கூறி, ஜனாதிபதி மாளிகை நோக்கி டெல்லியில் காங்கிரஸ் பேரணி நடத்தியது. கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் பாராளுமன்றத்தில் இருந்து காங்கிரசார் அணிவகுத்து சென்றனர்.அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி சட்டசபை முன்னாள் சபாநாயகர் மணிந்தர் சிங் திர் தலைமையில் விஜய் சவுக்கில் இருந்து சீக்கியர்கள் போட்டி பேரணி நடத்தினர்.

அவர்கள் 1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையின்போது சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரியும், காங்கிரசுக்கு எதிராகவும் கோஷங்களை முழங்கினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை திரும்பப்பெறவும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து செல்ல முடியாத வகையில், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்திலிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியை வழிநடத்திச் சென்ற சோனியா, பிறகு மனு ஒன்றை அவரிடம் அளித்தார். அதில் பிரிவினையை ஏற்படுத்தும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளைத் தடுக்க குடியரசுத் தலைவர் தலையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். “சமூக மற்றும் மத ரீதியான் பதற்ற சூழலை உருவாக்கும் கபட பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. சமூகத்தைத் துண்டாடும் குறிக்கோளுடனும் நல்லிணக்கத்தை தொந்தரவு செய்யும் விதமாகவும் இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

மேலும், சகிப்பின்மை நிலை குறித்து ஜனாதிபதி பிரணாப் தெரிவித்த கருத்துக்களுக்கு நன்றியை தெரிவித்தனர். காங்கிரஸார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, “ஜனாதிபதி சகிப்பின்மை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார். அவரது மவுனம் இத்தகைய செயல்பாடுகளை ஆதரிப்பதாகவே தெரிகிறது.

தொடர்ச்சியாக அவரது அமைச்சரவை சகாக்கள் வெறுப்புப் பேச்சையும், சமூகப் பிளவையும் பரவலடையச் செய்யுமாறு செயல்பட்டு வருகின்றனர் என்பது பிரதமரின் மவுனத்தை விடவும் மோசமானது. அச்சம், சகிப்பின்மை, ஆகிய சூழல்கள் வளர்ச்சியடைந்து வருவதன் மீதான கவலைகளை குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் முன் வைத்தது” என்றார் சோனியார்.

ராகுல் காந்தி கூறும்போது, “நாட்டில் மக்கள் கொல்லப்பட்டாலும் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். குடியரசுத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் கவலை தெரிவித்தாலும் அரசுக்கு கவலை இல்லை. நாட்டில் எதுவும் தவறாக நடக்கவில்லை என பிரதமரும் நிதி மந்திரியும் நம்புகிறார்கள். மோடி நம்பிக்கொண்டிருக்கும் சித்தாந்தம் தவறானது. தனி நபர் சுதந்திரத்திற்கு எதிரானவராக அவர் உள்ளார்” என்றார்.சுமார் 125 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team