முசலி முஸ்லிம் மக்களின் இதயங்களில் வாழும் அமைச்சர் ராஜித » Sri Lanka Muslim

முசலி முஸ்லிம் மக்களின் இதயங்களில் வாழும் அமைச்சர் ராஜித

rajitha

Contributors
author image

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)

நல்லாட்சியின் சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமாகிய வைத்தியர் ராஜித சேனாரத்ன அவர்கள் மூவின மக்களாலும் மதிக்கப்படவேண்டிய,நேசிக்கப்படவேண்டிய வேண்டியவராகவும்,நேர்மை நியாயம் என்பவற்றின் உறைவிடமாகவும் திகழ்கிறார். மகிந்த அரசில் இருந்து வெளியேறிய துணிச்சல்மிக்க மூவரில் இவரும் ஒருவர். இவர் எதிர்காலத்தில் ஜனாதிபதி,பிரதமர் போன்ற உயர்பதவிகளை அடைவார்.

அலுத்கம இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உறுதுணையாக இவர் நின்றதுடன் ,முந்நாள் ஜனாதிபதியை அவரின் ஆட்சியில் நடந்த அநியாயத்தை,அட்டுழியத்தை சுட்டிக்காட்டியது மட்டுமன்றி அவரைப் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று உண்மை நிலைமையை உணரச்செய்தார்.

அன்று மறிச்சுக்கட்டிக்கு பலசேனா சென்று அங்குள்ள மீள்குடியேற்றக் கிராமத்திற்கு தொந்தரவு கொடுத்தபோது அமைச்சர் ராஜித அம்மக்களுக்காக பலமாக உரக்கக் குரல்கொடுத்தார்.அக்குடியேற்றம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் குடியேற்றம்போல சட்டரீதியானது என்றார்.

மீண்டும் மதவாதிகள், ஹிரு டி.வி என்பன கொண்டுவந்த புனைகதைகளால் முசலிப்பிரதேச மக்கள் அனைவரும் பெரிதும் மனவுளைச்சலுக்கு உட்பட்டுள்ளனர். அரச அதிகாரிகளான மாவட்டச்செயலாளர்,பிரதேச செயலாளர் போன்றோரின் கருத்துப்படி வில்பத்தில் 1 அங்குலக்காணியும் அழிக்கப்படவில்லை என்பது நிதர்சனமானது.இக்கருத்துக்கு வலுச்சேர்க்குமுகமாக அமைச்சர் ராஜிதவின் கருத்தும் அமைந்திருந்தது.

நிலைமை இப்படியிருக்க வில்பத்து வனம் தொடர்பான புதிய வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும். வில்பத்தின் பாப்பளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போலுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, கொண்டச்சி, அகத்திமுறிப்பு, பொற்கேணி, பிச்சைவாணிபன் குளம் போன்ற கிராம மக்கள் தமது கிராமம் பறிபோய்விடுமோ என்னும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நல்மனம் கொண்ட அமைச்சர் ஊடக மாநாட்டைக் கூட்டி வில்பத்து அழிக்கப்படவில்லை. அமைச்சர் றிசாத் பதியுதீன் 1990 ஏற்பட்ட புலிகளின் இனச்சுத்தீகரிப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் அம்மக்களை மீளக்குடியேற்றப் பாடுபடுகிறார் இதில் எவ்விதத் தவறுமில்லை.அம்மக்கள் எம்நாட்டு மக்கள் அவர்கட்கு உதவ வேண்டியது அரசின் கடமை என்றார்.

 முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் ,வஞ்சிக்கப்பட்ட வடபுல முஸ்லிம் மக்களுக்காகவும், அமைச்சர் றிசாதுக்காகவும் ஆதரவாக ஒரு காத்திரமான அறிக்கையை விடமுடியாமல் போனது ஏன் ? முஸ்லிம் அரசியல்வாதிகளுக்காக கொழும்பில் நடந்த மீடியா போரம் நடாத்திய மாநாட்டிலும் இவர் கலந்துகொள்ளவில்லை.

இவற்றைப்பார்க்கும் போது வில்பத்து விடயத்தை வைத்து அரசைவிட்டும் அரசியலை விட்டும் அமைச்சர் றிசாதை விரட்டியடிக்கலாம் என மனப்பால் குடிப்பது போல தோன்றுகிறது.இது ஒருபோதும் நடைபெறாது.மாறாக அவரின் செல்வாக்கு தேசியரீதியில் நிலைக்குத்தாக உயர்ந்து செல்கிறது.

அமைச்சர், அரசைவிட்டு சிலர் எதிர்பார்த்து இருப்பது போல ஒருபோதும் வெளியேறமாட்டார்.இது அவர் உருவாக்கிய அரசு ஏன் வெளியேற வேண்டும். மஹிந்த அரசில் இவர் இறுதிவரை பயந்து தொங்கிக் கொண்டிருக்கவில்லை. அமைச்சைத்தூக்கி வீசிவிட்டு வெளியேறிய முதல் சிறுபான்மை அமைச்சர் என்ற சரித்திரத்தை எழுதியுள்ளார். ஆகவே மீண்டும் செய்துகாட்டத் தேவையில்லை.

அரசில் இருந்து போராடி அல்லது பேசிப்பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். ஏன் என்றால் இது நல்லாட்சி .நம்பிக்கை இழக்கக் கூடாது.

Web Design by The Design Lanka