முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் கேட்டுள்ள கேள்வி..! » Sri Lanka Muslim

முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் கேட்டுள்ள கேள்வி..!

Contributors
author image

Editorial Team

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கையெழுத்திட்டு, ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்தால் மாத்திரம் ஒருவரை கைது செய்யக் கூடிய சட்டம் நாட்டில் இருக்கின்றதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

கைது செய்யுமாறு கோரி தற்போது ஜனாதிபதியிடம் சென்று கடிதம் கொடுக்கின்றனர். அப்படி எவரையும் கைது செய்ய முடியுமா?

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வழங்கி இவரை கைது செய்யுமாறு கூறினால், அப்படி கைது செய்யக் கூடிய சட்டம் நாட்டில் இருக்கின்றதா?. அந்த சட்டம் என்ன?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வழங்கி அவரை கைது செய்யுங்கள் என்று கூறினால், அப்படி கைது செய்ய முடியுமா?. ஜனாதிபதி அவரை கைது செய்ய வேண்டுமா?.

அப்படி கைது செய்வதாக இருந்தால், இந்த நாட்டில் நீதிமன்றங்கள் தேவையில்லை. சட்டத்தினால் எந்த பயனுமில்லை. பொலிஸாரால் எந்த பிரயோசனமும் இல்லை. குற்றவியல் விசாரணை திணைக்களமும் தேவையில்லை. இது சட்டத்தை மதிக்கும் நாடு.

ரியாஜ் பதியூதீனை விடுதலை செய்தது நாங்கள் அல்ல. அவருக்கும் குண்டு தாக்குதலுக்கு தொடர்பில்லை என அமைச்சர் சமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் கூறினார். இதனால், இவர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. பொலிஸாரும் குண்டு தாக்குதலுடன் அவருக்கு தொடர்பில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால், பொதுஜன பெரமுனவினர் தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் பொலிஸாரா?. குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் உள்ளவர்களா?. அன்று பல கதைகளை கூறிவர்களுக்கு தற்போது காற்சட்டை இன்றியே வீதியில் செல்ல நேரிடும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்

Web Design by The Design Lanka