முதலாம் தவணை இன்று ஆரம்பம் - மேல் மாகாணத்தில் 5 ,11,13 ஆம் வகுப்புக்கள் மாத்திரம் கற்றல் நடவடிக்கை - Sri Lanka Muslim

முதலாம் தவணை இன்று ஆரம்பம் – மேல் மாகாணத்தில் 5 ,11,13 ஆம் வகுப்புக்கள் மாத்திரம் கற்றல் நடவடிக்கை

Contributors

எம்.மனோசித்ரா)

பாடசாலைகள் மாணவர்களின் இவ் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் சகல வகுப்புக்களுக்கும் இன்று முதல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளமை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் பரவல் இரண்டாம் அலையின் பின்னர் மேல் மாகாணம் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் பாடசாலைகள் கட்டம் கட்டமாகவே ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் தற்போது மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது. அதற்கமைய இன்று இவ்வாண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. எனினும் மேல் மாகாணத்தில் சகல வகுப்புக்களுக்கும் பாடசாலை ஆரம்பிக்கப்பட மாட்டாது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தரம் 5, 11 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களுக்கு மாத்திரமே இன்று முதல் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வகுப்புக்களுக்கு ஏப்ரல் மாதம் முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கி, இரண்டாம் தவணை தொடங்கும் போதே ஆரம்பிக்கப்படும். அதற்கமைய ஏப்ரல் 19 ஆம் திகதி மேல் மாகாணத்திலுள்ள சகல வகுப்புக்களுக்கும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சகல பாடசாலைகளிலும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் செயற்பாடுகள் பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளன.

எனினும் அவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இம்மாணவர்களுக்கான கற்பித்தலும் ஆரம்பமாகும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team