முன்னாள் அமைச்சர் மர்ஹும் அப்துல் மஜீத் : இது ஒரு கனவானின் கதை » Sri Lanka Muslim

முன்னாள் அமைச்சர் மர்ஹும் அப்துல் மஜீத் : இது ஒரு கனவானின் கதை

abdul majeed

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mansoor A Cader


முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.ஏ. அப்துல் மஜீத் அவர்களின் 6வது நினைவேந்தல் நிகழ்வு

இது ஒரு கனவானின் கதை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இந்த வைபவத்தின் மேலாண்மை, எங்களில் பலரில் ஆளுமையின் விதைகளை ஆழ ஊன்றிய மறக்க முடியாத ஆளுமை – மாண்புகழ் ஜொலித்த ஆசிரியர் தௌபீக் ஸேர் என அழைக்கப்படும் சம்மாந்துறை மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும் கிழக்குப்பிராந்திய போக்குவரத்துச் சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.ஆர். முகம்மட் அலி அவர்களே,

உச்ச அழிதிறனின் மூலமே விடுதலை இலக்குகளை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சிதறடிக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில் அதனை சாத்வீகத்தாலும் சாணக்கியத்தாலும் சாதிக்க முடியும் என்பதற்கான நிஜமான முன்னுதாரணமாய் விளங்கிக்கொண்டிருக்கும் இன்றைய பிரதம அதிதி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் சம்மந்தன் அவர்களே,

அப்துல் மஜீத் அவர்களின் சமூகப்பணிக்காக இன்று தன் தோளைக்கொடுத்திருக்கும் தலைவர் அஷ்ரஃபின் உயிரைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துக்காய் சமூகப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த நாங்கள் வளர்த்தெடுத்த பிள்ளை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் தம்பி மன்சூர் அவர்களே,

அப்துல் மஜீட் அவர்களால் நேசிக்கப்பட்ட அவரின் குடும்ப உறுப்பனர்களே, மற்றும் கனவான்களே சகோதர்களே,
அனைவருக்கும் இறைவனின் பேரருளும் சாந்தியும் நிலவுவதாக.

I

அப்துல் மஜீட் என்ற ஆலவிருட்சத்தைப் பற்றி உரையாற்ற அப்துல் மஜீட் அறக்கட்டளையின் உருவாக்குநர்கள் என்னை வேண்டிக் கொண்டனர். இது ஓர் இன்ப அதிர்ச்சி. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பலர் நினைத்திருப்பர் ‘இந்தத் தலைப்பினிலே உரையாற்ற’ இவருக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று. தவிர்க்க முடியாமல் நானும் அவ்வாறுதான் நினைத்தேன். எனக்கு எந்த விதத் தகுதியுமே இல்லை என்பதே எனக்கும் வெட்ட வெளிச்சமான உண்மை. கடந்த கால் நூற்றாண்டு காலப்பகுதயில் என்னுடைய அரசியல் பின்னணி அப்படியானது.
எனினும் என்னை அழைத்தோருக்கும் எனது இந்த தயாரிக்கப்பட்ட உரையை செவிமடுப்போருக்கும் என்னுடைய ஆழிய நன்றிகள்.

II

நான் பிறந்து வளர்ந்த வீட்டின் மிக அண்மையில் அதிலும் கூப்பிடுதூரத்திலேயே அப்துல் மஜீட் அவர்களின் வீடு இருந்தது. நாங்கள் அரிச்சுவடி படிக்கும் காலத்தில் இருந்தே அந்த வீட்டிற்கு செல்வோம். அவரின் அந்தஸ்து பற்றி ஒன்றும் தெரியாத வயது அது. டீயு அவர்களின் வீட்டுக்குச் செல்லும் பிரதான நோக்கங்கள் அங்கு கூண்டில் வளர்க்கப்பட்ட புள்ளி மானைப் பார்ப்பதும் ஜேம் பழம் பொறுக்குலும் ஆகும்.

மஜீத் அவர்களின் அந்த மொறிஸ் மைனர் கறுப்பு நிறக் கார் எங்கள் அனைவருக்குமே நல்ல நண்பன்.

அவரின் மகன் நாசருடன் எனக்கு ஒரு மெல்லிய சினேகிதம் இருந்தது. விடுமுறை நாட்களில் நாங்கள் ஆற்றுக்கு நீச்சல் அடிப்பதற்குச் செல்வோம்.

எனது அட்வான்ஸ் லெவல் காலங்களில் மஜீதிடம் நெருக்கமாகப் பழக சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தன. மான் கட்டிக்கிடக்கும் கூண்டுக்கு அருகாமையில் உள்ள பின் பக்கத்திண்ணையில் அவருட்பட கட்டாந்தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். நான், மக்கள் வங்கியில் உதவி முகாமையாளராக கடமையாற்றிய எஸ்.எம். இப்றாஹீம், சேமிப்பு வங்கியில் முகாமையாளராக கடமையாற்றிய பாறூக், கவிஞர் பௌஸ்டீன் முதலியோர் அவரின் திண்ணைத தோழர்கள். என்றாலும் எனக்கு ஒரு படி கூடுதல் மதிப்பு இருந்தது.
ஐ.தே.க அப்போது நம்தேசம் என்ற ஒரு பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தது. மஜீத் அவர்கள் தான் கூட்டங்களில் பேசிய பேச்சுகளின் முக்கிய விடயங்களை அவர் அன்பாக வளர்த்த புள்ளிமானை தடவியவாறே என்னிடம் கூறுவார். அதனை நான் செய்தியாக எழுதிக் கொடுப்பேன். அவற்றில் பல பிரசுரமாயிருந்தன.

அவர் 1977ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றயீட்டினார். அப்போது நானும் பௌஸ்தீனும் ஆளுக்கு ஒரு பாராட்டுக் கவிதை எழுதினோம். என்னுடைய கவிதை “பூத்த மரம் காய்த்திடுதல் புதிதல்ல பழம் முறைதான், காத்திருந்த பறவையெல்லாம் கனி உண்ணல் வாஸ்தவம்தான்” என்று தொடங்கும். இது ரஸீனா ராத்தாவுக்கும் மிகவும் விருப்பமான கவிதை. அதனால் நான் அவர்கள் வீடு செல்லும்போதெல்லாம் எனக்கு விசேட கவனிப்பு இருக்கும். ஊடயளளiஉ தமிழில் பரிச்சயம் இல்லாது போனாலும் அவரின் இரண்டாவது மகன் கட்டிடக் கலைஞர் மலிக் என்னுடைய அந்தக் கவிதையை மிகவும் உச்சமாகப் பாராட்டினார்.

நான் அப்போது நன்றாக Announce பண்ணுவதாக பலரும் பாராட்டுவர். அப்துல் மஜீத் என்னை மிகுந்த வாஞ்சைப்பட்டுப் பாராட்டுவார். மட்டுமன்றி அப்போதைய தகவல் ஒலிபரப்பு அமைச்சரான ஆனந்த திஸாநாயக்க அவர்களிடம் என்னை அவருடைய உத்தியோகபூர்வ காரிலேயே கொழும்புவரை அழைத்துச் சென்று எனக்கு அறிவிப்பாளர் பதவி வழங்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தார். மட்டுமன்றி தகவல் ஒலிபரப்பு அமைச்சின் அப்போதைய செயலாளராக இருந்த இன்றைய அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவிடம் என்னை அறிமுகம் செய்து தகவல் ஒலிபரப்பு அமைச்சரின் உத்தரவுக்கிணங்க அப்பதவியை எனக்கு உடன் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினார். மஜீத் அவர்களின் பிரத்தியேகச் செயலாளராக இருந்த அமீர் அலி அவர்களும் என்னை வானொலி அறிவிப்பாளராக்குவதில் மிகுந்த வாஞ்சைபபட்டார். அவர் சீரீபி சேமனாக இருக்கும்போகே 1979இல் காலமானார். அந்த நிகழ்வினால் மனம் புண்பட்டு ‘வெள்ளைக்கார் உள்ளிருந்து விருப்புடனே நீர் உதிர்க்கும் புன்னகைகள்;;….. புன்னகைகள்;;….. புன்னகைகள்;;……என்று ஒரு கவிதையும் எழுதினேன்.

அப்போதைய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒரு மிஸ்கீன் நிறுவனமாக இருந்தது. எனக்கு நிரந்தர அறிவிப்பாளர் பதவி தருமளவுக்கு அவர்களிடம் தாராளமாக நிதியீட்டு வசதி இருக்கவில்லை போலும். அதனால் எனக்கு புநளவ யுnழெரnஉநச என்ற பதவியை அது வழங்கியது. ஆனால், சமகாலத்திலே நான் யாழ் பல்கலைக்கழத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். அங்கிருந்து கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாறுதல் பெற முடியாது இருந்தமையால் படி வழங்கப்படாத அப்பதவியை என்னால் பொறுப்பேற்க முடியவில்லை.

மஜீத் அவர்கள் யாழ் விஜயம் செய்யும்போதெல்லாம் பல்கலைக்கழகத்துக்கு தரிசனம் தருவார். ஆங்கில விரிவுரையாளராக இருந்த புகழ்பெற்ற ஆங்கில இலக்கிய விமர்சகரும் மார்க்ஸிஸ்டுமான ஏ.ஜே. கனகரெத்னா மற்றும் நுண்பாகப் பொருளியலில் ஒரு மேதையாக இருந்த பேராசிரியர் ரொனி இராஜரெத்தினம் என்போர் அவரின் மிக நெருக்கமான நண்பர்கள். மஜீத் அவர்கள் அந்த பேராசிரியர்மாருக்கு என்னை அவரின் உறவினரின் மகன் என்றே அறிமுகப்படுத்தினார். அதனால் பேராசிரியர்கள் எனது கவிதைகளுக்கு மேலாகவும் என்னை இரசித்தனர்.

எனது பல்கலைக்கழக இறுதி ஆண்டின்போது ஒரு நாள் வேம்படி மகளிர் கல்லூரியில் கற்ற தனது மகளைப் பார்க்க வந்த எனது உறவினர் ஒருவர் என்னைத் தேடிவந்து என் தந்தை கொடுத்;ததாக ஒரு கடிதத்தை தந்தார். எனது வாப்பா பின்வருமாறு எழுதியிருந்தார். மகன், அப்துல் மஜீட் எம்பி உங்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க சீஎச்ஈஓவுக்கு வேண்டுகோள் விட்டிருப்பதாக செய்தி அனுப்பியுள்ளார். அதன்படி நீங்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள். எனக்கு உங்கள் இறுதிப் பரீட்சை முடியும்வரை உத்தியோகம் பெறுவதில் சம்மதமில்லை. ஆனால் காக்கா விருப்பப்படுகின்றார். அதனால்தான் இந்த செய்தியை அனுப்புகின்றேன் என வாப்பா குறிப்பிட்டிருந்தார்.

நான் நியமனத்தைப் பெற்றுக்கொள்வதாகத் தீர்மானித்து ஊர்வந்து மஜீட் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். வீட்டின் பின் விறாந்தையில் இருந்த டைனிங் டேபிளில் காலைச்சாப்பாட்டுக்காக அவர் உட்காந்திருந்தார். பிட்டு, இடியப்பம், பாலப்பம், ரொட்டி, மீன் கறி, சொதி, இன்னும் சில கறிகள், பசுப்பால், சீனி, கோழிச்கூட்டு வாழைப்பழம் இத்தியாதி அந்த மேசையில் இருந்தன.

என்னைக் கண்டதும் ‘ஆ…. எளந்தாரி வாங்க… வாங்க, இரிங்க இப்படி, அவ்வா லாத்தா (இது வீட்டு வேலை செய்பவரின் பெயர்) இன்னொரு பீங்கான்’. பீங்கான் வந்தது. சாப்பிடச் சொன்னார். மறுத்தால் ஏச்சு விழும். பாலப்பத்தை சொதியுடன் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மீனை எடுத்து எனது பீங்கானில் வைத்தார். பின் அவர் பேசத்தொடங்கினார். ‘உங்க வாப்பா என்ன சொன்னாலும் இன்னம் இன்னம் அவருக்கிட்ட காசை எதிர் பார்க்காம டீச்சிங்கைப் பாரமெடுங்க. னநபசநந முடிந்ததும் வேறு யசசயபெநஅநவெ செய்யலாம்’ எனக்கூறினார். எனது வீட்டுக்கு அண்மையிலுள்ள மகளிர் வித்தியாலயத்துக்கு என்னை நியமிக்குமாறு ChEO வை பணித்திருப்பதாகவும் நான் அங்கு செல்லும்போது விண்ணப்படிவம் ஒன்றை நிரப்பி எடுத்துக்காண்டு செல்லுமாறும் தெரிவித்தார். நான் விண்ணப்பம் கோரப்பட்ட போழ்தில் விண்ணப்பிக்காமலேயே தராதரப்பத்திரமற்ற உதவி ஆசிரியரானேன்.

III

மஜீட் அவர்கள் 1960 முதல் 1994 வரை 34 ஆண்டுகள் பராளுமன்ற உறுப்பினராக இருந்தார். பட்டினசபை ஊhயசைஅயn உட்பட 44 ஆண்டுகள் அவரின் அரசியல் அதிகாரம் கொண்ட வாழ்க்கை அமைந்திருந்தது.
தனக்குக் கற்பித்த ஆசிரியர்களுள் சுவாமி விபுலானந்த அடிகளை அவர் மிகுந்த பெருமையுடன் நினைவு கூர்வார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியலை சிறப்புத்துறையாக கற்றுத் தேறினார். அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இத்துறையில் தொடர்ந்து கற்று பேராசிரியர் நிலைக்கு உயர்ந்திருக்கலாம் என்று ஆதங்கப்படுவார். மட்டக்களப்பு கச்சேரியிலே சமூகசேவை உத்தியோகத்தராக பணிபுரிந்து ஊர் மீது கொண்ட அலாதியான பற்றின் காரணமாக இந்த ஊரை பாராளுமன்றத்திலே பிரதிநிதித்துவப்படுத்த யாரும் முன்வராததால் தான் அரசியலுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் உத்தியோகத்தினை இராஜினாமாச் செய்தார்.

1632 ஆம் ஆண்டு முதல் சம்மாந்துறைக்கு விஞ்ஞானபூர்வமாக எழுதப்பட்ட வரலாறு இருந்தது. மட்டக்களப்பு மான்மியத்தில் மட்டுமன்றி Monographs of Batticaloa விலும் அதன் பாரம்பரியமும் ஆள்புலனும் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் கூட இந்த ஊர் ஆளப்படவேண்டிய ஊர்தான் என்ற எண்ணப் பாங்குடன் பலர் துரைத்தனம் காட்டினர். ஊரின் மீது அலாதியான பற்றுதலும் அநீதியைக் கண்டு கொதித்தெழும் மனோநிலையும் கொண்டிருந்த மஜீத் அவர்கள் அப்படியானோருக்கு எதிராக மிகுந்த வீராவேஷத்துடன் எழுந்து அதனைத் துடைத்தெறியும் வேட்கையை தனது உயிர் மூச்சாகக்கொண்டிருந்தார்.

வீரமுனையில வாழ்ந்த சீர்பாதக்கார தமிழர்களையும் முக்குகர் பிரதேச தமிழ் மக்களையும் மற்றும் கோரக்கர்கோயில் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்களையும் ‘நீங்களும் சம்மாந்துறையானே’ என்றும் எங்களுக்குள் தாய் வழிச் சமூக அமைப்பினாலான குடிமுறை பாரம்பரிய உறவு இருக்கின்றது என்றும் அவர்களை எல்லாம் ஒரு குடையின் கீழ் பாதுகாத்தார்.

1958ஆம் ஆண்டைய இனக்கலவரத்தில் பெரும்பான்மைக் குடியேறிகள் இந்தப்பிராந்தியத்தில் அத்துமீறாதிருக்க துப்பாக்கிகள் கொண்டு வேலியமைத்ததுபோல அரண் அமைத்து தோட்டுப்பாய் போட்டு இரவிவரவாக இந்த ஊரையும் தமிழ் மக்களையும் பாதுகாத்தார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறைக்கு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் குடிமுறை என்ற ஆய்வுக்கட்டுரையை அவர் சமர்ப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மீக நீண்டகாலமாக அறிஞர் உலகில் பேசப்பட்ட ஆய்வு அறிக்கையாகும்.
வீரமுனை தமிழ் மக்கள் தங்களுடைய வட்டாரத்தில் தேர்தலுக்கு நிற்கவேண்டும் என்று அவரை வற்புறுத்தியதால் அதன் மூலம் சம்மாந்துறை பட்டினசபையின் சில ஆண்டுகள் தவிசாளரானார். ஆக 1956 முதல் 1994 வரை அவர் முழுநேர சமுதாய அரசியல்வாதியாக விளங்கினார்.

1960 தொடக்கம் 1970 வரை சுயேச்சை உறுப்பினராகவே பாராளுமன்றம் சென்றார். இதனை மிகுந்த பெருமிதத்துடனும் சம்மாந்துறை மட்டுமன்றி இப்பிராந்தியத்தின் மக்கள் மீதான அளவற்ற நன்றியுணர்ச்சியுடனும் குறிப்பிடுவார். 1970இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அட்வகேற் ஜப்பார் அவர்களை போட்டிக்கு நிறுத்தியதால் பல்கலைக்கழகக் காலத்தில் சமசமாஜக்கட்சியில் ஈடுபாடு கொண்டு இருந்தபோதிலும் கூட ஐ.தே.கவில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். 1977முதல் 1994 முடிய காணிவிசாய பிரதியமைச்சர், மின் சக்தி எரிசக்தி பிரதி அமைச்சர், தபால் தந்தித் தொடர்புகள் பிரதியமைச்சர், நெசவுக் கைத்தொழில் அமைச்சர் முதலிய பல்வேறு பதவிகளில் இருந்து தன்னால் முடிந்த அத்தனையையும் தன் மக்களுக்காகச் செய்தார். மின் சக்தி பிரதியமைச்சராக இருந்தபோது சம்மாந்துறையில் மின்சக்தி சீரமைக்கப்படாமல் இருந்த ஜே. புளக் பிராந்தியம் முழுவதற்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்ததார்.

1977ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் முதன்முதலாக வானொலியில் ஒலிபரப்பான தேர்தல் முடிவு இலக்கம் 100 சம்மாந்துறை தொகுதி ஆகும். வெற்றிபெற்றது ஐதேக. வென்ற உறுப்பினர் முஹம்மது அலி அகமது அப்துல் மஜீத் என ஒலிபரப்பானது. இதனால் ஐதேகவின் அதிஷ்ட நாயகன் அப்துல் மஜீட் ஆனார். ஐதேக வின் ஜேஆர் ஜெயவர்த்தன, ஆர் பிரேமதாச உட்பட சிங்கள தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் அதிஷ்டக் குறியீடாகவே அப்துல் மஜீத் அவர்களை நோக்கினர். இதனால் அப்போது காணி விவசாய பிரதியமைச்கு என்ற மிகப்பெரும் சக்திமிக்க அமைச்சு அப்துல் மஜீத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனால் அனைத்து சிறுபான்மையினருமே மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் வடக்குக் கிழக்கில் 1956 ஆம் ஆண்டின் பின்னர் நில அபகரிப்பு, சிறுபான்மையின் சனச்செறிவு நிலையை ஐதாக்குதல் முதலிய நடவடிக்கைகள் அபிவிருத்தி என்ற பெயரில் மிகக்கவனமாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை காணியமைச்சு கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது. இவற்றிற்கு மஜீத் அவர்கள் மூலம் சற்று நிவாரணம் பெறலாம் என்பதே சிறுபான்மை மக்களின் அதீத மகிழ்ச்சிக்குக் காரணமாகும்.

கரும்புச் செய்கைக்காக என அம்பாறை மாவட்டத்தில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுள் பெரும்பாலானவை பின்னர் கரும்புச் செய்கை மேற்கொள்ள முடியாது எனக் காரணம் கற்பிக்கப்பட்டு வேறு மாவட்டங்களில் இருந்து குடியேற்றப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதை நிறுத்தவும் ஏலவே கபளீகரம் செய்யப்பட்டவற்றை அவற்றின் சொந்தக்காரர்களுக்குப் பங்கிடவும் அப்துல் மஜீட் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் பிரச்சினைகள் அவரின் தனிப்பட்ட அரசியலிலும் எழத்தொடங்கிற்று.

தீகவாப்பி விகாரையிலிருந்து மணியோசை கேட்கும் இடமெல்லாம் அந்த விகாரைக்கே சொந்தமாகும் என்று கூறிக்கொண்டு அம்பாறையில் இருந்த மத தீவிரவாத அமைப்பு அதற்காக உழைத்துக் கொண்டிருந்தது. சிங்கள பௌத்தர்களை மட்டுமே இந்த அமைப்பு கொண்டிருந்தது. அது கொவிகம பௌத்த அமைப்பு (கேஜிபி) என சுருக்கமாக அழைக்கப்பட்டது. இந்த அமைப்பு அப்துல் மஜீத் அவர்களின் மனிதாபிமான முயற்சிகளை உக்கிரமாகக் கண்டித்தது.

அப்போது சிறில் மெத்யூ என்றொரு இனவாதத்தை விஷமாகக் கக்கும் அமைச்சர் இருந்தார். கேஜீபி அமைப்பு அப்போதைய அதன் தலைவர் தயாரெத்ன என்பவரின் ஊடாக அரச மேல் மட்டத்துக்கு காணி விவசாய பிரதியமைச்சராக அப்துல் மஜீத் தொடர்ந்து இருப்பது அம்பாறையில் சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு ஆபத்தானது என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த பாரிய செயலணிக்கு புடிஸ்ற் கோங்கிரஸ் தலைமைத்துவம் வழங்கிற்று.

தயாரெட்ன என்பவர் 1977இன் பாராளுமன்றத் தேர்தலுக்கு அம்பாறைத் தொகுதியின் வேட்பாளராக அப்துல் மஜீத் அவர்களாலேயே ஐதேகவுக்கு பரிந்துரை செய்யப்பட்டவராவார். என்றபோதிலும் பேரினவாதியான தயாரெட்னவும் அவரின் நண்பாகளான கேஜீபியினரும் அப்துல் மஜீதிடம் இருந்து காணி அதிகாரத்தைப் பிரித்தெடுப்பதில் குறியாய் இருந்தனர். கேஜிபியின் பிக்குமார்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அணிதிரண்டு ஜேஆரை வற்புறுத்தினர். ஆனாலும் அப்துல் மஜீத் மிக அவசரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டும் தனது அமைச்சரான ஈஎல் சேனநாயக்காவின் அனுமதியுடன் தான் பதிலமைச்சராக அமைச்சரவைக் கூட்டங்களுக்குச் செல்லும்போது பறிக்கப்பட்ட காணிகளை மீள வழங்குதல் தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்களைச் சமர்ப்பித்து அனுமதிபெற்றும் காணிகளை மீள அளித்தார். இதனால் இறக்காமப் பிரதேசம், அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் பொத்துவில் மக்கள் மிகவும் நன்மையடைந்தனர்.

எனினும் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது அப்துல் மஜீத் அவர்களின் நடவடிக்கைகளுக்கு வழிவிட்ட ஈஎல் சேனநாயக்காவிடம் இருந்து காணித்திணைக்களம் உட்பட விவசாய அமைச்சின் சில திணைக்களங்கள் பிரித்தெடுக்கப்பட்டு காணி அமைச்சு தனி அமைச்சாகிற்று. விவசாயக் காணி பிரதியமைச்சர் பதவியும் அப்துல் மஜீத் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டது.
இது சிறுபான்மை மக்களின் வாழ்வியல் உரிமையை தன்னால் முடிந்த அளவு உறுதிப்படுத்திய மஜீத் அவர்களுக்கு அரசு கொடுத்த அகௌரவமான பரிசு ஆகும். எனினும் மக்கள் பலம் அவருக்கு அசைக்க முடியாத ஆறுதலைக் கொடுத்தது. பதிலாக தபால் தந்தி பிரதியமைச்சு அவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராக இருந்தபோது மட்டக்களப்பின் வடமுனைப் பிரதேசத்தை பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கும் நிலஅபகரிப்பின் மூலம் செய்யப்படும் சிங்களக் குடியேற்றவாதம் தீவிரமாகத் திட்டமிடப்பட்டு உக்கிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் தலைமையில் முழுமூச்சுடன் இதனை எதிர்த்துக் கொண்டிருந்தது.

கொடூரமான இந்த அரச வன்முறைக்கு முட்டுக் கொடுக்கவேண்டிய பாரிய சுமை அப்துல் மஜீட் அவர்களின் மனச்சாட்சியின் மீது சுமத்தப்பட்டது.

ஐதேக அரசின் இந்த வஞ்சகமான இன அடக்குமுறைக்கு எதிராக தன்னுடைய எதிர்மறை அபிப்பிராயத்தை வெளியிட்டே ஆகவேண்டிய மனச்சாட்சியின் அழுத்தத்துக்கு மஜீத் தலை சாய்த்தார். இதனை ஜேஆர் அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனவே தன்னுடைய மனச்சாட்சிக்கு வழிவிடவும் தமிழ் மக்கள் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை கௌரவிக்கவும் தன்னுடைய மட்டக்களப்பு மாவட்ட அமைச்சர் என்ற பதவியை அப்துல் மஜீத் இராஜினாமாச் செய்தார். அல்லது அரசால் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்த நிகழ்ச்சியானது இலங்கையின் சிறுபான்மை மக்களது சமூக உளவியலில்; பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது.
தமிழ் முஸ்லிம் உறவில் அபார வாஞ்சை கொண்டிருந்த இவர் 1983 இல் நடந்த ஜூலை இனக்கலவரத்தில் தமிழ் மக்களை பாதுகாத்து அரவணைக்கும் பணியிலும் பாரிய பங்காற்றினார்.

இதனைத் தொடர்ந்து தபால் தந்தி தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சராக 1988 வரை கடமையாற்றினார்.
இக்கால கட்டத்தில் பிரதமராக இருந்தது ஆர். பிரேமதாஸ ஆவார். அப்போது வீடமைப்பு அமைச்சராக பிரேமதாஸ அவர்களே பணியாற்றினார். கம்உதாவ என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பல்லாயிரக் கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வீடற்ற ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன.

இந்தக்கட்டத்தில் சம்மாந்துறையில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் அரச நிதியல் கட்டப்பட்டு கட்டப்பட்டு வீடற்ற ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்திட்டம் சம்மாந்துறை, வீரமுனை, கோரக்கர் கோயில், ஜே. புளொக், மஜீட்புரம், கணபதிபுரம், சொறிக்கல்முனை, மற்றும் இறக்காமம், வரிப்பத்தஞ்சேனை முதலிய ஏழைகள் வாழும் இடம் எல்லாம் ஜாதி மத பேதமின்றி வழங்கப்பட்டன. இதற்கான அத்தனை முயற்சிகளும் அப்துல்மஜீத் என்ற தனிமனிதராலேயே மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மேலும் சுயஉதவி வீடமைப்புத் திட்டத்தில் 2600 வீடுகள் மொத்தமாக 4600 வீடுகள் ஒரே ஒரு தொகுதியில் கட்டப்பட்டமை வேறு எங்கும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. நம்மை அண்டியிருந்த எல்லாத் தொகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் மூக்கின்மேல் விரலைவைத்து வியந்தனர். இது மஜீத் அவர்களின் சாணக்கியத்துக்கான ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும்.

1988இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது பல்வேறு காரணங்களினால் தலைவர் அஷ்ரஃப் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களை திடீரெனப் புறந்தள்ளிவிட்டு ஆர் பிரேமதாசவை ஆதரிக்கவேண்டி ஏற்பட்டது. அதன் பிரதியுபகாரமாக 1989இன் பாராளுமன்றத் தேர்தலில் ஐதேக சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டியேற்பட்டது. அதில் முக்கியமானது திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அமைச்சர்களான மஜீத், மன்சூர் மற்றும் எம்.பி உதுமாலெவ்வை ஆகியோர்களை வேட்பாளர்களாக நியமிப்பதில்லை என்பதாகும்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை ஒத்துக்கொண்ட பிரேமதாஸ இம்மூவர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தாமல் தவிர்த்தார். அந்த இடத்துக்கு அவர்கள் விரும்பிய ஜூனியர்களை நியமிக்குமாறும் ஆணையிட்பட்டது. இது உயிராபத்துக்கள் நிறைந்த பயங்கரவாத காலம் என்பதாலும் இந்தியப்படையினரின் சுற்றி வளைப்புக்கிடையே அச்சத்துடன் தேர்தல் வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பதாலும் இத்தனைக்கும் மத்தியில் இந்தத் தோற்கப்போகின்ற தேர்தலுக்கு நிற்பதனால் எந்தப்பயனும் இல்லை என்பதனாலும் அப்துல் மஜீட் அவர்கள் தனக்கு அடுத்த அடுத்த இடங்களிலே வைத்து அழகு பார்த்த பலர் இறுதி நேரத்தில் அவரின் காலைவாரிவிட்டனர். இது அப்துல் மஜீட் அவர்களின் நெஞ்சில் இடி மேல் இடியாக விழுந்தது.

இந்தக்கட்டத்தில் சம்மாந்துறையில் இருந்து ஒருவரை நிறுத்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததினால் தான் தூக்கி வளர்த்த பிள்ளையாகவும் தனது மகளைத் திருமணம் செய்தவராகவும் இருந்த இளைஞர் நௌஷாட் அவர்களைப் பலிகொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் மஜீத் அவர்களுக்கு ஏற்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட புகழ்பெற்ற அமெரிக்க கோர்ப்பரேட் நிறுவனங்களின் தங்க மூளையாக செயற்பட்ட நௌஷாட் அவர்கள் பணங்காய்க்கும் அப்பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு தனது தந்தையை ஒத்த மாமனாரின் கழுத்தை நோக்கி வந்த ஆபத்துக்களை தன் கழுத்தைக் கொடுத்துப் பாதுகாத்து உதவினார். எனினும் தான் இந்த நிர்ப்பந்தத்தை நௌஷாத் அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டேனே என்ற பச்சாதாபம் அப்துல் மஜீத் அவர்களின் ஆழ்மனத்தில் குடிகொண்டிருந்தமையை அவரின் நெருங்கிய உறவினர்கள் அறிவர்.

தேர்தல் முடிந்த கையோடு; தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை மஜீத் மற்றும் மன்சூர் ஆகியோருக்கு பிரேமதாஸ வழங்கினார். அத்துடன் மஜீத் அவர்களுக்கு நெசவுக் கைத்தொழில் அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது. அதன் மூலமாகவும் மக்கள் பணியை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். தலைவர் அஷ்ரஃபுக்கு பிரேமதாஸ வழங்கிய வாக்குறுதியை நிiவேற்றுவதுபோல் நிறைவேற்றி இவர்களையும் அமைச்சராக்கியபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இராஜ தாந்த்ரீக ரீதயான தர்மசங்கடத்துக்கு உள்ளாகியமை கடந்தகால வரலாறு.

இப்பயிருக்க, 1991இல் ஜனாதிபதி பிரேமதாஸவுக்கு எதிரான இம்பீச்மெற் என்ற குற்றப்பிரேரணை ஒன்றை அவரின் சகபாடிகளாகவும் அமைச்சர்களாகவும் இருந்த லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க முதலியோர் தலைமை தாங்கி மிகக்கவனமாகத் தயாரித்து சபாநாயகராக இருந்த எம்.எச். முஹம்மட் அவர்களிடம் சமர்ப்பித்து இருந்தனர். பிரேமதாஸவின் கழுத்துக்கு வந்த இந்த இம்பீச்மெற் என்ற கத்தியானது உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகமான ஒக்ஸ்போட்டின் மாணவர்களால் தயாரிக்கப்ட்டது. மேலும் இதில் சபாநாயகரின் பங்கும் கணிசமாக இருந்தது. ஏராளமான ஐ.தேக எம்பீக்கள் இதில் கையொப்பம் இட்டிருந்தனர். அப்துல் மஜீத் அவர்களும் இதில் ஒப்பமிட்டிருந்தார். இவர் அவ்வாறு இயங்குவதங்கு அவர் அளவிலும் சம்மாந்துறை என்ற ஊரின் அளவிலும் சிறுபான்மையினர் என்ற அளவிலும் நிறையக் காரணங்கள் இருந்தன.

உண்மையில் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் தலைமையாக அப்துல் மஜீத் இருந்திருக்க வேண்டியதே நியாயமாகும். சேவை மூப்பு அடிப்படையிலும் கட்சியை விட்டு எந்தக்கட்டத்திலும் மாறிச்செல்லாத யோக்கியத்திலும் அவர் உயர்ந்த இடத்தில் வைத்து அழகுபார்க்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் இந்த அப்துல் மஜீதாலேயே தேர்தலுக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட பேரினத்தைச் சார்ந்தவரே பிற்காலத்தில் பெரும் சவாலாகி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் கரையோரப் பிரதேசங்களில் மஜீத், மன்சூர் ஆகியோரைப் புறந்தள்ளிவிட்டு ஒவ்வோர் ஊரிலும் சிற்சில இளைஞர்களை தன்னுடைய ஏஜெண்டுகளாக மாற்றி இயங்கிக்கொண்டிருந்தார்.

தேர்தலுக்கு நின்று எம்பீ ஆகாத பலவீனத்தைப் பாவித்து இவர்களை அறவே அரசியலில் நின்றும் துடைத்தெறிந்துவிட்டு அந்த அமைச்சருக்கு ஸல்யூட் பண்ணும் பெடியன்களை தயாரித்தெடுத்து கட்சிக்குள்ளே சவாலற்ற தலைமையாக தன்னை ஆக்கிக்கொள்ள அவர் படாத பாடுபட்டடார். இதனால் மனமுடைந்திருந்தாலும் அப்துல் மஜீத் பொறுமையாக இயங்கிக்கொண்டிருந்தார். இந்த மனோநிலை இப்படி வளர்ந்திருக்க அவரின் ஆழ்மனத்தை விறைக்கச் செய்த மற்றொரு காரணமும் இருந்தது.

இம்பீச்மென்ற் குற்றப்பத்திரிகை பாராளுமன்ற விவாதத்துக்கு வருகின்ற வேளையில் கடைசி முயற்சியாக ஒப்பமிட்டவர்களை முடிந்தவரை சந்திக்கும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அப்துல் மஜீத் அவர்களும் ஜனாதிபதியைச் சந்திக்க ஒப்புதல் அளித்தார். அந்த சந்திப்பின்போது அவர் தனது ஊர் சார்பாக, அதன் அடிநாதமான பிரச்சினை சார்பாக ஏற்பட்ட மன உளைச்சலை மாத்திரமே நிபந்தனையாக வைத்தாரே தவிர தனக்கு கெபிநெற் அந்தஸ்துள்ள அமைச்சு தரவேண்டும் என கோரிக்கை விடுக்கவே இல்லை. இது அவர் இந்த சம்மாந்துறை ஊர் மீது வைத்திருந்த ஆழிய காதலை வெளிப்படுத்துகின்றது. மட்டுமன்றி 1991 வரை முப்பது ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இடையறாத சங்கிலித் தொடர்ச்சியாக இருந்தும் வந்துள்ளார்.

அத்தோடு இப்பிராந்தியத்தில் கொடிகட்டிப்பறந்த அரசியல் வாதிகளைப் போன்றல்லாது ஐதேகவைவிட்டு வேறு எந்தக்கட்சியிலும் தனது சுயநலத்துக்காக செல்லாது இருந்திட்டபோதிலும் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி வேண்டும் என்று பிரேமதாஸ எதைக் கேட்டாலும் தருவதற்குச் சித்தமாய் இருந்த இச்சந்தர்ப்பத்திலாவது அவர் டிமாண்ட் பண்ணாது தன்னுடைய உயர்ந்த குணத்தையும் தனது உயர் குடிப்பிறப்பின் தார்ப்பரியத்தையும் ஊர்ஜிதம் செய்தார். இம்பீச்மென்ற்இல் இட்ட ஒப்பத்தை வாபஸ் பெற வேறு ஒன்றையும் அவர் குறிப்பிடவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.

எனது கிராமம் மாரிகாலம் முடிந்து இரண்டொரு மாதங்களுக்கே குடிதண்ணீர் உள்ள கிராமமாகும். பெண்களும் பிள்ளைகளும் இரவு பகல் பாராது குடங்களைச் சுமந்தவாறு பல மைல்தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வந்து பருகுவர். கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மாரும் கூட இதற்கு விதவிலக்கல்ல. இது மிகுந்த வேதனை தருகின்ற காட்சியாகும். இதனை நீங்கள் உள்ளுராட்சி அமைச்சராக இருந்தபோது நான் முறையிட்டேன். அதற்கான பரிகாரமாக ஒரு நீர் வழங்கும் திட்டத்தினை எனக்கு தருவதாகக் கூறினீர்கள். அதன்படி 1968 ஆம் ஆண்டிலே கல்நாட்டி அத்திட்டத்தை தொடங்கி வைத்தீர்கள்.

அதனைத் தொடர்ந்து இன்று வரை எனது ஊரின் ஹிஜ்றா சந்தியில் பாரிய நீர்த்தாங்கி ஒன்று மட்டுமே அமைக்கப்பட்டது. ஆனால் அத்திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டு கபடத்தனமாக வேறு ஒரு ஊருக்குத் திசை திருப்பப்பட்டது. 1968 தொடங்கி 1991 முடிய 23 வருடங்களாக எனது மக்களுக்கு குடிதண்ணீரைத்தானும் வழங்க முடியாத ஒரு கையாலாகாத எம்.பி என்று எனது அரசியல் எதிரிகள் கூப்பாடு போடுகின்றனர். ஆகவே அதிஉத்தம ஜனாதிபதி அவர்களே, நீங்கள் எனது கையாலாகாத்தனத்தை பிரகடனப்படுத்தும் குறயீடாகத் திகழும் இந்த பாரிய நீர்த்தாங்கியை தயவு செய்து வெடி குண்டு வைத்து தகர்த்து விடுங்கள். இம்பீச்மென்ற்றில் இடப்பட்ட எனது கையொப்பத்தை நான் உடனே வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன் என நெஞ்சுருகக் கூறினார். அதனைக் கேட்டு நிலை குலைந்த பிரேமதாஸ உடனடியான இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத வேண்டிய கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இது அவரின் சாணக்கியத்துக்கு மட்டுமன்றி சம்மாந்துறைத் தாய்க்குலத்தின் சஞ்சலத்தின் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய கைசேதத்துக்கும் எடுத்துக்காட்டாகும். அவர் விரும்பியிருந்தால் ஒரு கெபிநெற் அமைச்சுப் பதவியை தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் தான் அந்தப் பிறப்பு வளர்ப்பில் உள்ளவன் அல்ல என்று அந்த உயர் சபையில் தனது நேர்மையான செயல் மூலம் நிரூபித்தார். அது மட்டுமன்றி இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் எரிந்த வீட்டில் பிடுங்கியது இலாபம் என பிரேமதாஸவை வஞ்சம் தீர்க்காது ஒரு கம்பீரமான கனவானாகவும் அவர் தன்னைக் காட்சிப்படுத்தினார்.

முடிவாக சம்மாந்துறையைப் பொறுத்த வரையிலும் இந்தப் பிராந்தியத்தைப் பொறுத்த வரையிலும் அப்துல் மஜீத் அவர்களுடைய இடமும் பாத்திரமும் பிறரால் நிரப்பப்பட முடியாத இடைவெளியையே இன்று வரை கொண்டிருக்கின்றது. சம்மாந்துறையின் கல்வி வளர்ச்சியிலும், நீர்ப்பாசன அபிவிருத்தியிலும், உடகட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிலும், வைத்தியசாலையின் அபிவிருத்தியிலும் ஒரு மைல்கல்லாகவே திகழ்ந்தார்.

1994ஆம் ஆண்டுடன் தன்னுடைய அரசியல் வாழ்வில் இருந்தும் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் முழுநேர ஆன்மீக வாதியாகவும் தனக்குப் பின்னர் வந்த சம்மாந்துறை எம.பீக்ககளின் சேiயை மனந்திறந்து பாராட்டுபவராகவுமே மஜீத் காணப்ட்டார்.
ஏல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் சேவையின் அடையாளங்களைப் பொருந்திக் கொள்வானாக. ஆன்னார் மரணித்தபோது இந்தப் பிராந்தியம் வடித்த கண்ணீரை ஜன்னதுல் பிர்தௌஸ{க்கு அவரை ஏந்திச் செல்லும் இறக்கைகளாக மாற்றுவானாக.
நபிகள் பெருமானார் உதித்த வசந்தத்திஉதய மாதமாகிய றபீஉல் அவ்வலிலே அன்னாரை நினைவுகூரும் உங்கள் அனைவருக்கும் இறைவன் நல்லருள் பாலப்பானாக.

தமிழ் முஸ்லிம் ஒற்றுமையின் சின்னமாகத் திகழ்ந்த அன்னவரின் அடிச்சுவட்டை நாமும் முன்னுதாரணமாகக் கொள்வோமாக.

வு ஆகிறு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.

=

Web Design by The Design Lanka