முஷர்ரப் இடைநிறுத்த விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர் » Sri Lanka Muslim

முஷர்ரப் இடைநிறுத்த விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

musarraf

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

– அஹமட் –


வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் முஷர்ரப், அந்தத் தொலைக்காட்சியில் நடத்தி வந்த, ‘சுயாதீனப் பார்வை’ எனும் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய தலையீட்டின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

குறித்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பற்றி, பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை முஷர்ரப் வாசித்ததோடு, சில கருத்துக்களையும் முன்வைத்திருந்தார். இதனால் கோபம் கொண்ட மு.கா. தலைவர், வசந்தம் தொலைக்காட்சி நிறுவனத் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முஷர்ரப் தொடர்பில் முறையிட்டதாக அறியக் கிடைக்கிறது.

என்ன நடந்தது

வசந்தம் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றிவரும் முஷர்ரப், அந்த தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சிகள் பலவற்றினை ஆரம்பிப்பதற்கும் காரணமாவராவார்.

மேலும், அரசியல் விவாதங்களை முன்வைக்கும் அதிர்வு நிகழ்சியினையும் அவர் சிறப்பாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையிலேயே, முஷர்ரப்புக்கு எதிராக, வசந்தம் தொலைக்காட்சி நிறுவனத் தலைவரிடம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஆரம்பத்தில் தொலைபேசி மூலமாக முறையிட்டதாகவும், பின்னர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்ததாகவும் அறிய முடிகிறது.

இதனால், பத்திரிகை கண்ணோட்ட நிகழ்ச்சியிலிருந்து முஷர்ரப் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

முன்னைய கதைகள்

தனக்கு பிடித்காத விடயங்களை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இவ்வாறான கேடுகெட்ட காரியத்தில் ஈடுபடுகின்றமையானது, மு.கா. தலைவருக்கு இது முதன் முறையல்ல.

ஏற்கனவே, வீரகேசரி நாளிதழில் ஊடகவியலாளர் நிப்ராஸ் ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுதி வந்தமையினை, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் பேசி, ரஊப் ஹக்கீம் நிறுத்தியிருந்தார்.

ஆனாலும், தனது திறமை காரணமாக தற்போது வீரகேசரி வாரப்பத்திரிகையில் கட்டுரைகளை எழுதும் சந்தர்ப்பத்தினை நிப்ராஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.

பின்னர், தமிழ் மிரர் பத்திரிகையில் ஊடகவியலாளர் மப்றூக் எழுதிய கட்டுரையொன்று தொடர்பில், 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரிய ரஊப் ஹக்கீம், அந்தப் பத்திரிகையில் மப்றூக் எழுதுவதைத் தடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். ஆனால், அந்த நடவடிக்கைகளும் ஹக்கீமுக்கு வெற்றியளிக்கவில்லை.

மேலும் தன்னை நியாயமாக விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை ஏனைய அரசியல்வாதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு எழுவதாகவும் ரஊப் ஹக்கீம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு வெறுப்பு

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களை இவ்வாறு அடக்கியொடுக்கும் செயற்பாடுகளில் மு.கா. தலைவர் மிகவும் கடுமையான மனநிலையுடன் ஈடுபட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது.

ஊடகவியலாளர்கள் தனது நல்ல விடயங்களைப் பற்றி எழுதியும் பேசியும் வருகின்றபோது குதூகலமடையும் ரஊப் ஹக்கீம், தனது தவறுகளை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீது எகிறுகின்றமையானது இழிநிலையான செயற்பாடாகும்.

இதேவேளை, சமூக வலைத்தளங்களும் இணையத்தளங்களும் மலிந்து போயுள்ள இன்றைய நவீன உலகில், ஊடகவியலாளர்களை நிகழ்ச்சிகளிலிருந்து நிறுத்துவதன் மூலம், தனக்கு எதிரான கருத்துக்களை வராமல் செய்து விடலாம் என, மு.கா. தலைவர் நினைப்பதும் மடமையாகும்.

வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் முஷர்ரப், தற்போது அங்கு பகுதி நேர அடிப்படையில்தான் பணியாற்றி வருகின்றார்.

சட்டத்துறையில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள அவர், சட்டத்துறையில் ஈடுபடுவதற்கான ஆர்வத்துடன் உள்ளார்.

இயலாமை

பத்திரிகைக் கண்ணோட்ட நிகழ்ச்சியிலிருந்து முஷர்ரப் நிறுத்தப்பட்ட போதிலம், அதிர்வு நிகழ்ச்சியினை தொடர்ந்தும் அவர் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிப்ராஸ், மப்றூக், முஷர்ரப் போன்றோரை – ஊடகத்துறையில் ஓரங்கட்டலாம் என ஹக்கீம் நினைப்பதும், அவ்வாறு ஓரங்கட்டுவதனால், தனக்கெதிரான விமர்சனங்களை அமுக்கி விடலாம் என நம்புவதும், அவரின் மிகப்பெரும் இயலாமையாகும்.

சீப்பை ஒளித்து வைப்பதால், கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று நம்புகின்றமைக்கும், மு.கா. தலைவரின் இந்த செயற்பாடுகளுக்கும் இடையில் பெரிதாக எதுவும் வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. (Puthithu)

Web Design by The Design Lanka