முஷாரப் எம்.பி பங்கேற்ற தீர்வு நிகழ்ச்சியின் பேஸ்புக் நேரலை நீக்கம் - Sri Lanka Muslim

முஷாரப் எம்.பி பங்கேற்ற தீர்வு நிகழ்ச்சியின் பேஸ்புக் நேரலை நீக்கம்

Contributors

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன், வசந்தம் தொலைக்காட்சியில் பங்கேற்ற தீர்வு நிகழ்ச்சியின் பேஸ்புக் நேரலை அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தொகுத்து வழங்கும் தீர்வு நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சியில் பிரதி புதன்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இடம்பெறுவது வழமையாகும்.

கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலைய மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இது தொடர்பான விளம்பரம் வசந்தம் தொலைக்காட்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புகில் பகிரப்பட்டது மாத்திரமல்லாமல் குறித்த நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சியின் பேஸ்புக் மற்றும் யூடியுப் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பட்டுள்ளது.

எனினும், பேஸ்புக் நேரலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபிற்கு எதிராக பல கருத்துக்கள் (comments) பதிவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் குறித்த நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சியின் பேஸ்புக் பக்கத்தில் நீக்கப்பட்டுள்ளது.

“வசந்தம் தொலைக்காட்சியின் உயர் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த நிகழ்ச்சி நீக்கப்பட்டது” என அந்த தொலைக்காட்சியின் சிரேஷ்ட தயாரிப்பாளர் ஒருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினராக முஷாரப் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் வசந்தம் தொலைக்காட்சியில் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team