"முஸ்லிம்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை எதிர்க்கவில்லை" ஆனால் ......... - வை.எல்.எஸ்.ஹமீட் - Sri Lanka Muslim

“முஸ்லிம்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை எதிர்க்கவில்லை” ஆனால் ……… – வை.எல்.எஸ்.ஹமீட்

Contributors

-எஸ்.அஷ்ரப்கான்-

முஸ்லிம்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை எதிர்க்கவில்லை. மாறாக முஸ்லிம்களின் பிரதேச செயலக எல்லையையும் தாம் பறித்துக்கொள்ள முற்படுவதையே எதிர்க்கின்றார்கள் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

தற்போது விஸ்வரூபமெடுத்துள்ள கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் இதுவிடயமாக குறிப்பிடும்போது,

கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு தரமுயர்த்தப்படுவது தொடர்பான கோரிக்கை நியாயமானது போன்றும் அதனால் முஸ்லிம்களுக்கு எதுவிதமான பாதிப்பும் இல்லை என்பது போலவும் ஏதோ முஸ்லிம் அரசியல்வாதிகள்  தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகவே முட்டுக்கட்டை போடுவதாகவும் சில தமிழ் அரசியல்வாதிகள் காட்ட முற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு ஒரு பிரதேச செயலகம் வழங்குவதை முஸ்லிம்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அவ்வாறு எதிர்ப்பதாக கூறுவது உண்மைக்கு முரணானதாகும்.

இங்கு இருக்கின்ற பிரச்சினை இந்நாட்டு முஸ்லிம்களின் தலை நகரமாக தென்கிழக்கின் முக வெற்றிலையாக கருதப்படுகின்ற முஸ்லிம்களின் முழு வர்த்தகத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற கல்முனை நகரத்தை உள்வாங்கியதான ஒரு பிரதேச செயலகத்தை தமிழ் தரப்பு கோருவதையே முஸ்லிம்கள் எதிர்க்கின்றார்கள், என்ற உண்மையை தமிழ் தரப்பினர் ஜீரணித்தாக வேண்டும். அவ்வாறான ஒரு பிரதேச செயலகம் வழங்கப்படுகின்றபொழுது கல்முனை முஸ்லிம் பிரிவிற்கான பிரதேச செயலகமும் கல்முனை தமிழ் பிரதேச செயலக எல்லைப்பிரிவிற்குள் வருமென்றால் அதனுடைய பொருள் முஸ்லிம்களுக்கான பிரதேச செயலகத்தையும் உள்வாங்கியதான ஒருபிரதேச செயலகப்பிரிவை தமிழ் தரப்பினர் கோருகின்றார்கள், என்பதாகும். அது எந்தவகையில் நியாயமானது என்று வினவ விரும்புகின்றோம் ?

“முஸ்லிம் செயலகப்பிரிவிற்குள் தமிழ் மக்கள் வாழ முடியுமென்றால், தமிழ் செயலகப்பிரிவவிற்குள் ஏன் முஸ்லிம்கள் வாழ முடியாது” என்று ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். அவருடைய கூற்று சரியாயின் காலாகாலமாக இருந்து வருகின்ற கல்முனைப்பிரதேச செயலகத்தைப்பிரித்து தமிழர்களுக்குக்காக ஒரு தமிழ் பிரதேச செயலகம் கேட்கவேண்டிய நியாயம் என்ன ? தலைமுறை தலைமுறையாக இருந்து வந்ததுபோல் எந்தப்பிரிவினையும் இல்லாமல் முஸ்லிம்களும் தமிழர்களும் ஏன் ஒற்றுமையாக வாழ முடியாது ? மாறாக முஸ்லிம்களுடன் இணைந்து வாழ முடியாது, என்பதனால் தங்களுக்கென்று பிரதேச செயலக கோரிக்கை விடுப்பது மாத்திரமல்லாமல் அந்த பிரதேச செயலக எல்லைக்குள் முஸ்லிம்களின் பிரதான வர்த்தக கேந்திர நகரத்தையும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல நுாறு ஏக்கர் காணிகளையும் உள்வாங்கியதாக பிரதேச செயலகத்தைப்பிரித்து ஏன்கேட்க வேண்டும் ?

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குள் முஸ்லிம் தமிழ் கிராமங்கள் பிட்டும் தேங்காயும்போல் மாறி மாறி அமையப்பெற்றிருக்கின்ற சூழ்நிலையில் இனரீதியாக தமிழ் பிரதேச செயலகம் கேட்பதற்கு இனவாதத்தைத்தவிர வேறு எதனைக்காரணமாகக்கூற முடியும்.

சுமார் 45 ஆயிரம் முஸ்லிம்களுக்கு 29 கிராம சேவகர் பிரிவு இருக்கின்ற அதேவேளை 25 ஆயிரம் தமிழர்கள் கொண்ட பிரதேசத்திற்கும் 29 கிராம சேவகர் பிரிவுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது ? திட்டமிட்டு தமிழ் பிரதேச செயலகப்பிரிவு கேட்பதற்காக உரித்தான பிரிவுகளைவிடவும் அதிகமான பிரிவுகள் உருவாக்கப்பட்டதா ?

1990 ஆம் ஆண்டிலிருந்து உப அலுவலகம்  இயங்கி வருவதாகவும் அதனைத் தரமுயர்த்துவதற்காகவே கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் இதை முஸ்லிம்கள் எதிர்ப்பது நியாயமற்றது என்பதுபோலவும் காட்ட முற்படுகின்றார்கள்.

இவ் உப பிரதேச செயலகம் உருவான பின்னணியை சற்று ஆராய வேண்டும்.  1989, 90 ஆம் ஆண்டுகள் முஸ்லிம்களின் அபிலாசைகளை கருத்தில் கொள்ளாமல் வடக்கு கிழக்கை இணைத்து கிழக்கில் 3 இல்  ஒரு பங்காக இருந்த முஸ்லிம்களை 17 வீதமாகக் குறைத்து மாகாண அரசியலில் செல்லாக்காசான சமூகமாக மாற்றி ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற ஆயுதக்குழுக்கள் வட கிழக்கு மாகாண சபையை ஆட்சிசெய்த காலமது.

இந்தியப்படை இருக்கத்தக்கதாக ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் முஸ்லிம்களை சல்லடை போட்ட காலமது. இவ்வாறு தாம் ஆளுகின்றவர்களாகவும், முஸ்லிம்கள் ஆளப்படுகின்றவர்களாகவும் உருவாக்கிய சூழ்நிலைக்கு மத்தியில் அம்பாரை மாவட்டத்தில் கல்முனை, நிந்தவூர் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டவை என்ற ஒரே காரணத்திற்காக ஆளுகின்றவர்கள் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அலகுக்குள் இருப்பது ஆளப்படுவதற்கு சமமாகும், என்ற ஒரேயொரு காரணமே நிந்தவூரிலிருந்து காரைதீவு பிரதேச செயலகமும், கல்முனை தமிழ் பிரிவு உப பிரதேச செயலகமும் உருவாகுவதற்குக் காரணமாகும்.

காரைதீவு பிரதேச செயலகம் உருவாகுவதற்கு வேறு எதுவித அடிப்படைக்காரணங்களும் இருக்க முடியாது. துாரம் என்றுகூட காரணம் கூற முடியாது. ஏனெனில் காரைதீவுக்கும் நிந்தவூருக்கும் இடைப்பட்ட துாரம் பூச்சியமாகும். அவ்வாறு காரைதீவு பிரதேச செயலகம் பிரிக்கப்பட்டபொழுது காரைதீவிலிருந்து தனிப்பிரதேச செயலகம் உருவாகுவதற்கு காரைதீவிலிருந்த சனத்தொகை போதாதென்று அருகிலிருந்த மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி முஸ்லிம் கிராமங்கள் அதற்குள் உள்வாங்கப்பட்டன. அவர்களின் பரிபாஷையில் கூறுவதானால் ஆளப்படுகின்ற கிராமங்களாக அவைகள் உள்வாங்கப்பட்டன. இருப்பினும் இரு கிராமங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் அதனை ஆட்சேபிக்கவில்லை. ஏனெனில் இவ்விரண்டு கிராமங்களையும் பொறுத்தவரையில் காரைதீவுதான் மிக அருகாமையிலுள்ள கிராமமாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இனவாத ரீதியாக அவர்கள் சிந்திக்கவில்லை. அதேநேரம் இப்பிரதேச செயலகங்கள் உருவாகுவதற்கு சற்று முன்பதாக அன்றைய பொத்துவில் தொகுதி் பாராளுமன்ற உறுப்பினர் ரங்க நாயகி பத்மநாதன் அவர்கள் அக்கரைப்பற்றிலிருந்து தமிழர்களுக்காக ஆலயடிவேம்பைப்பிரித்தெடுத்தார்.  அங்கும் இனவாதத்தைத்தவிர துாரம் சம்மந்தப்பட்ட பிரச்சினையோ அல்லது வேறு பிரச்சினையோ இருக்கவில்லை. இதே அடிப்படையில்தான் கல்முனை தமிழ் பிரதேச உப செயலகமும் உருவாக்கப்பட்டு அதுவும் கல்முனை நகரத்திலேயே அமைக்கப்பட்டது.  இரண்டு பிரதேச செயலகங்களுக்கும் இடைப்பட்ட துாரங்கள் 300 மீட்டர்கள் கூட இல்லை. மறைந்த தவைர் எம்.எச்.எம். அஷ்ரபோ அல்லது ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளோ அக்கரைப்பற்றிலிருந்து ஆலையடிவேம்பு பிரிந்ததையோ, காரைதீவு பிரிந்ததையோ  அல்லது தமிழ் உப பிரதேச செயலகம் உருவானதையோ ஆட்சேபிக்கவில்லை. ஆனால் கல்முனை உப பிரதேச செயலகம், பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படுவதை அவர்கள் ஆட்சேபிப்பதற்கான காரணம் எல்லை வரையறுக்கப்பட வேண்டிய தேவை எழுகின்றது என்பதனாலாகும்.  அதேநேரம் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் எல்லை பாண்டிருப்பாகவோ அல்லது பாண்டிருப்பும் சேனைக்குடியிருப்பும் மாத்திரமாகவோ இருக்குமாக இருந்தால் யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள்.

இனவாத அடிப்டையைத்தவிர வேறு எந்த அடிப்டையும் இல்லாமல் தமிழ் பிரதேச செயலகமும் வேண்டும் அதற்குள் முஸ்லிம்கள் தம் இதயமாகப் போற்றுகின்ற முஸ்லிம்களின் மாபெரும் வர்த்தக நகரமான கல்முனை நகரமும் உள்வாங்கப்பட வேண்டும்  என்ற தமிழ் தரப்பினரது கோரிக்கைதான் இப்பிரதேச செயலகத்தை ஆட்சேபிப்பதற்கான அடிப்படைக்காரணமாகும் என்பதையும் விசயம் புரியாமல் அறிக்கை விடுகின்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சம்மாந்துறையிலிருந்து பிரித்து நாவிதன்வெளி பிரதேச செயலகமும்,பிரதேச சபையும் உருவாக்கப்பட்டன. அவற்றின் ஆட்புல எல்லைக்குள்  மத்திய முகாம், நாலாம் கொலனி போன்ற சுமார் 4500 முஸ்லிம் வாக்குகள் கொண்ட பல முஸ்லிம் பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. கடந்த காலங்களில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு  மேற்குறிப்பிட்ட முஸ்லிம் கிராமங்களிலிருந்து சென்ற முஸ்லிம்கள்  பல உயிராபத்துக்கைளைக்கூட சந்தித்திருக்கின்றார்கள். இருந்தபோதிலும் அவர்கள் நாவிதன்வெளியுடன் இணைந்திருப்பதை ஆட்சேபிக்கவில்லை. ஏனெனில் சம்மாந்துறையைவிடவும் நாவிதன்வெளி அவர்களைப்பொறுத்தவரையில்  துாரம் குறைந்ததாகும். எனவே முஸ்லிம்கள் எந்தக்கட்டத்திலும் இனவாத ரீதியாக சிந்திக்காமல் இருக்கின்றபொழுது கல்முனையில் அருகருகே இரண்டு பிரதேச செயலகங்களை அமைத்து எல்லைப்பிரச்சினையை ஏற்படுத்துகின்ற ஒரு கோரிக்கையினை முன்வைத்துவிட்டு முஸ்லிம்களைக் குறை சொல்வதற்கு எந்தவிதத்தில் இவர்களின் மனச்சாட்சி இடம்கொடுக்கின்றது, என்று புரியவில்லை.

முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்றுதான் அன்றும் விரும்பினார்கள், இன்றும் விரும்புகின்றார்கள். இணைந்து வாழ்வதற்காக சேர்ந்து போராட வந்த முஸ்லிம்களை  சுட்டுக்கொன்றார்கள். சேர்ந்து வாழ்ந்த வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். மீண்டும் வாழ வருகின்றபொழுது தடைக்கற்களை இடுகின்றார்கள். யுத்தம் நடைபெற்ற காலமெல்லாம்  முஸ்லிம்களை சுட்டுக்கொன்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் காலத்தில் கையகப்படுத்திய சுமார் 15 ஆயிரம் ஏக்கர் வயற்காணிகளை இன்னும் கையளிக்காமல் தாங்களே பயிர்செய்து கொண்டிருக்கின்றார்கள். இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் இருக்கின்ற அதிசயம்தான் இலங்கையில் சிறுபான்மைகளை எதிரிகளாக நோக்குகின்ற, நாளாந்தம் முஸ்லிம்களதும், தமிழர்களதும், கிறிஸ்தவர்களதும் உள்ளங்களைப் புண்படுத்திக்கொண்டிருக்கின்ற பொதுபல சேனா கல்முனையிலுள்ள சில தமிழர்களுக்கு மாத்திரம்  நண்பர்களாகும். மறுவார்த்தையில் கூறினால் முழு தமிழ் சமூகமும் பொதுபல சேனாவின் எதிரியாகும். ஆனால் கல்முனையிலுள்ள சில தமிழ் அன்பர்க்களும்  பொதுபலசேனாவின் நண்பர்களாகும். ஏனெனில் பொதுபல சேனாவைப்பொறுத்தவரையில் முஸ்லிம்கள் அவர்களது எதிரிகள் எனவே, எதிரியின் எதிரி நண்பன் என்ற அடிப்படையில் தனது ஒரு கண் போனாலும் எதிரியின் இரு கண்களும் போகவேண்டும் என்று சிந்தித்து தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கின்ற பொதுபலசேனாவை தமிழர்களாக இருந்தும் நண்பர்களாகவும் அன்பர்களாகவும் ஆக்கிக்கொள்ள துடிக்கின்ற தமிழ் சகோதரர்கள்  கல்முனையில்தான் இருக்கின்றார்கள்.

பொதுபலசேனாவிற்கு கல்முனை தமிழ் பிரதேசத்தில் அலுவலகம் திறக்க அழைப்பு விடுக்கி்ன்ற  அளவுக்க முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் அங்கு கையோங்கி நிற்கின்றது. இதனைப்புரிந்து கொள்ளாமல், இவற்றிற்கு எதிராக அறி்க்கை விடுவதற்குப்பதிலாக  அடுத்த மாவட்டங்களிலிருக்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகளும் தங்கள் பங்கிற்கு தமிழ் பிரதேச செயலகம் கேட்டு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்றில் மீண்டும் ஒரு முறை தமிழ் முஸ்லிம் ஒற்றுமையைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றது. எனவே அவர்களின் பேச்சுக்கள் இதய சுத்தியுடன் இருந்தால் இன்று தமிழர்கள் சிங்களத்தரப்பினரிடமிருந்து முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் போன்று முஸ்லிம்கள் தமிழ் தரப்பினரிடமிருந்து எதிர் நோக்குகின்ற பல பிரச்சினைகளுள் நியாயமில்லாதமுறையில் கல்முனையை பிரிக்க எத்தனிப்பது, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களிகளின் காணிகளை வழங்காமல் இருப்பது மற்றும் வடக்கில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தைத்தடுப்பது போன்ற பிரச்சினைகளுக்காவது அவர்கள் அவசரத்தீர்வு வழங்க முன்வர வேண்டும்.

எனவே, குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கூறியதைப்போல தமிழர்களைப் பெரும்பான்மையாகக்கொன்ட பிரதேச செயலக எல்லைகளுக்குள் முஸ்லிம்கள் வாழ முடியாததல்ல இன்றிருக்கின்ற பிரச்சினை, மாறாக முஸலிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட பிரதேச எல்லைக்குள் தமிழர்கள் வாழ முடியாது என்பதுதான் இன்று கல்முனையில் இருக்கின்ற பிரச்சினையும், போராடுவோம் என்று அறிக்கை விடுவதற்கும் காரணமாகும்.

இதனை விளங்கிக்கொள்ள முடியாமல்தான் துார இடங்களிலுள்ள சில அரசியல்வாதிகளும் இதற்கு ஆதரவாக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கருத்தில் கொண்டு இனவாத ரீதியாக உருவாக்கப்பட்டு, உப பிரதேச செயலகமாக பெயரிடப்பட்டபோதும் நடைமுறையில் சுமார் 95 வீதம் முழுமையான அதிகாரங்களுடன் இயங்குகின்ற தமிழ் பிரதேச செயலகத்தை மூடி கல்முனை தமிழ் முஸ்லிம்களின் நிரந்தர ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும். அல்லது முழுப்பிரதேச செயலகமாக மாற்றுதல் என்ற பெயரில் வீணாக எல்லைப்பிரச்சினையை உருவாக்கி சமூக சௌஜன்யத்திற்கு குந்தகம் விளைவிப்பதையாவது தடுத்து நிறுத்தவேண்டும்.

கல்முனையில் தமிழ் மக்கள் எல்லோரும் இனவாதிகளல்லர். வரலாற்று ரீதியாக கல்முனையில் வந்த அனைத்து அரசியல்வாதிகளும் தமிழர்களுக்கு உதவி செய்தே வந்திருக்கின்றார்கள்.  குறிப்பாக எம்.சீ. அஹமட், ஏ.ஆர். மன்சூர், மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆகியோர் தமிழர்களுக்கு நியாயமான சேவையைச் செய்திருக்கின்றார்கள்.

எனவே, ஒரு சில இனவதிகளின் செயற்பாட்டினால் எமது மக்களின் நல்லுறவு பாதிகக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகின்றோம்

Web Design by Srilanka Muslims Web Team