முஸ்லிம்களில் சொற்பத் தொகையினரேனும் அசாங்கத்தின் பக்கம் இல்லை என்பதை அரசாங்கம் தெளிவாக உணர்ந்து விட்டதுஇம்ரான் மஹ்ரூப் - Sri Lanka Muslim

முஸ்லிம்களில் சொற்பத் தொகையினரேனும் அசாங்கத்தின் பக்கம் இல்லை என்பதை அரசாங்கம் தெளிவாக உணர்ந்து விட்டதுஇம்ரான் மஹ்ரூப்

Contributors
author image

திருமலை அஹ்மத்

ஊவா மாகாண சபையில் இரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு சாத்தியம் இருந்த போதிலும் அமைச்சர்களான ஹக்கீம் – றிசாத் கூட்டணி அதனை இல்லாமல் செய்து விட்டது என கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.

 

ஊவா மர்காண முஸ்லிம் மக்கள் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடிய உச்சக்கட்ட சந்தர்ப்பமாக மாகாணசபைத் தேர்தலே காணப்படுகின்றது. எனவே நடைபெற்ற இத்தேர்தலில் தங்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்று விட வேண்டும் என்ற ஆதங்கத்துடன் அம்மக்கள் இருந்தனர் எனினும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் – றிசாத் பதியுத்தீன் கூட்டணி வாக்குளைப் பிரித்து அதனை இல்லாமல் செய்து விட்டது.

 

இந்த அரசாங்கம் முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கம் என்பது கடந்த கால சம்பவங்கள் மூலம் முஸ்லிம்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அரசாங்கத்தில் எத்தனை முஸ்லிம் அமைச்சர்கள் இருந்த போதிலும் அவர்களால் முஸ்லிம்களின் நலன்சார்ந்த விடயங்களில் எதுவும் செய்ய முடியாது என்பதையும் முஸ்லிம்கள் தெளிவாக உணர்ந்து விட்டனர்.

 

எனவே, அரசாங்கத்திற்கோ அல்லது அரச சார்பான கட்சிகளுக்கோ வாக்களிக்கும் நிலையில் முஸ்லிம்கள் இல்லை. இதனால் இன்று நாட்டிலுள்ள முஸ்லிம்களுள் பெரும்பாலானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிப் பக்கமே உள்ளனர். அண்மைக்காலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் இதனைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

 

பதுளை மாவட்டத்தைப் பொறுத்தவரை வாக்குகள் பெறக்கூடிய முஸ்லிம் எவரும் அரசாங்கக்கட்சியில் போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. இதன் மூலம் முஸ்லிம்களில் சொற்பத் தொகையினரேனும் அசாங்கத்தின் பக்கம் இல்லை என்பதை அரசாங்கம் தெளிவாக உணர்ந்து விட்டது.

 

இந்தக் கூட்டணி அரசாங்கத்தோடு ஒட்டி உறவாடி சுகபோகங்களை அனுபவிப்பதோடு தேர்தல் காலங்களில் மட்டும் அரச விரோதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் நாடகம் பற்றி முஸ்லிம்கள் நன்கு அறிந்துள்ளனர். எனவே, இந்தக் கூட்டணிக்கு முஸ்லிம்களுள் கனிசமானோர் வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்திருந்தம் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்காக இவர்கள் போட்டியிட்டார்கள்.

 

இந்தக் கூட்டணிக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் முஸ்லிம்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற சமூக அக்கறை இல்லை. எல்லாமே தங்களதும் தங்களது கட்சி உறுப்பினர்களதும் சொந்த நலன் தான்.

 

அப்படி சமூக அக்கறை இருந்திருந்தால் கிழக்கு மாகாண சபையை உயிரோட்டமுள்ள சபையாக அவர்கள் மாற்றியிருப்பார்கள். அது வெறும் சப்பாணிச் சபையாக இருப்பதற்கு இந்த இரண்டு அமைச்சர்களும் தான் காரண கர்த்தாக்கள். இங்கு அவர்களது கட்சி நலனைப் பார்க்கிறார்களே தவிர சமூக நலனைப் பார்க்கவில்லை.

 

கிழக்கு மாகாணசபையில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசுக்கு 7 உறுப்பினர்களும், றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 3 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இந்த உறுப்பினர்களை வைத்துக் கொண்டு கிழக்கு மாகாணசபையூடாக கடந்த இரண்டு வருட காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்காக இவர்கள் செய்த சேவைகள் தான் என்ன?

 

ஊவா தேர்தலில் ஹக்கீம் – றிசாத் கூட்டணி 5045 வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால் இந்த வாக்குகள் ஐக்கிய தேசியக்கட்சிக்கே வந்திருக்கும். இதன் மூலம் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட இரு முஸ்லிம்களும் பிரதிநிதிகளாகியிருப்பர். அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் இதனை தெளிவு படுத்துகிறது. எனவே, முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு ஆப்பு வைத்தது இந்த முஸ்லிம் கட்சிகள் தான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team