முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்கமாட்டோம்- இது கொழும்பில் » Sri Lanka Muslim

முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்கமாட்டோம்- இது கொழும்பில்

muslims

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Basheer Segu Dawood


முஸ்லிம் சமூகம் உள்ளே உற்றுப்பார்க்கும் காலம்!

கடந்த வாரம் கொழும்பு 5 இல் எனது மூத்தமகள் கட்டும் வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடச் சென்றிருந்தேன்.

மகளின் வீட்டுக்கு முன்னால் இருந்த ஒரு அழகிய பழைய பாரம்பரிய வீடு தரைமட்டமாக்கப்பட்டு கட்டாந்தரை மட்டும் காணப்பட்டமை கவலையளித்தது.

அப்போது அந்த வளவுப் பக்கமிருந்து ஒரு 80 வயது மதிக்கத் தகுந்த சிங்கள வயோதிபர் வந்துகொண்டிருந்தார். அவரிடம் இந்த வளவை விற்கும் எண்ணம் உரிமையாளர்களுக்கு உண்டா என்று கேட்டேன், அதற்கவர் ஆம் என்றார். ஒரு பேர்ச் எவ்வளவோ தெரியாது என்று இழுத்தேன்; எழுபத்தி ஐந்து இலட்சம் ரூபாய் என்று சொன்னவர் தாமதியாமல் சொன்ன அடுத்த வார்த்தை “முஸ்லிம்களுக்கு விற்கமாட்டோம்” என்பதாகும். (முஸ்லிம் கட்டியட விக்குனண்ணே) என்னைத் தூக்கிவாரிப் போட்டது.

அவர்தான் அந்த வெற்று நிலத்தின் உரிமையாளர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. காட்டிக்கொள்ளாமல் தமிழருக்கு கொடுப்பீர்களா? (தெமல கட்டியட தெணவாத?) என்று மேலுமொரு கேள்வியைக் கேட்டேன், ஆம் ( ஒவ் ) என்றார் சிரித்த முகத்துடன்.

நான் யார் எந்த மதம் எனது இனம் யாது என்பன பற்றிய எந்தத் தகவலும் அவருக்குத் தெரியாது.

அந்த நிலம் கற்றவர்களும் பண வசதி படைத்த சிங்களவர்களும் அதிகம் வாழுகிற பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்பு முஸ்லிம் நண்பர் ஒருவருக்காக வெள்ளவத்தையில் அபார்ட்மென்ட் ஒன்றிலுள்ள இந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை முகவர் ஒருவர் ஊடாக வாடகைக்குக் கேட்டபோது, “முஸ்லிம் குடும்பங்களுக்குக் கொடுக்க சொந்தக்காரர் விரும்பவில்லை” என்ற பதிலை முகவர் தந்தார்.

ஒரே வாரத்தில் நடந்த மேற்சொன்ன இரண்டு சம்பவங்களும் என்னைக் கடுமையாகப் பாதித்தன.

எனது சமூகம் எங்கே போகிறது? இலங்கையில் உள்ள மதங்களுக்கிடையிலான சகவாழ்வினடிப்படையில் பார்த்தால், இஸ்லாத்தைப் பின்பற்றுவோரின் எதிர்கால ‘சுமூக’ வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது என்பது தெரிகிறது. இவ்வாறு தொடர்ந்தால் அடுத்துவரும் பத்து வருடங்களில் இலங்கை முஸ்லிம்களின் கதி என்னவாகும் என்று கணக்கிட்டு செயலாற்ற வேண்டும். மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்துக்குள் கடந்த தசாப்தங்களில் நடந்த மாற்றங்களை உற்றுப் பார்த்து திருத்தங்களைச் செய்யவும் வேண்டும்.

இந்த இடத்தில், மார்க்க உள்முரண் காரணமாக வாழைச்சேனை மஸ்ஜித் உள்பட கடந்த ஒரு தசாப்த காலமாக நாடெங்கணும் உள்ள மஸ்ஜித்களிலும் ஜமாஅத்களுக்கிடையிலும் நிகழ்ந்த – நிகழ்ந்துவருகிற சச்சரவுகளை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

முஸ்லிம் குடிமக்கள் சமூகத்துக்குள்ளே நெருக்கடியை எதிர் கொள்ளும் அதேவேளை சமூகங்களுக்கிடையிலான நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளனர்.

இஸ்லாமிய இயக்கங்களை வழிபடுகிற இளைஞர்கள் கடந்த கால் நூற்றாண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறார்கள். மூன்று தசாப்தங்களாக அடையாள அரசியல் இயக்கங்களையும் தலைவர்களையும் மாறி மாறி வழிபடுகிற கண்மூடிகளாக மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த நிலமையை மாற்றுவதற்கு முஸ்லிம் புத்தி ஜீவிகள் வேலைத்திட்டங்களை முன்வைக்காவிட்டால் முஸ்லிம் சமூகத்தின் புதிய பரம்பரை கண்மூடியபடியல்ல குருடாகவே பிறந்து வளரப்போகிறது. அதேநேரம் முஸ்லிம் சமூகம் வாழ்க்கைத் தரையில் நக்கரைக்கும் நொண்டியாகவும் திகழும் நிலைமை உருவாகிவிடும்.

கடந்தகாலச் சமூக அமைப்புமுறை இறந்துவிட்டது.இறக்குமதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட நிகழ்காலச் சமூக அடையாள அமைப்புமுறை இறந்து போக ஆரம்பித்துவிட்டது ஆனால் புதிதாக இன்னும் எதுவும் ஜனிக்கத் தொடங்கவில்லை.

Web Design by The Design Lanka