முஸ்லிம்களையும் தமிழர்களையும் பிரிக்க சதி -ஹரீஸ் - Sri Lanka Muslim

முஸ்லிம்களையும் தமிழர்களையும் பிரிக்க சதி -ஹரீஸ்

Contributors

-அஷ்ரப்கான்-

கல்முனையில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பதனை சீர்குலைப்பதற்கு ஒரு போதும் நாங்கள் விரும்பவில்லை. இதனைப் புரிந்து கொள்ளாத சில தமிழ் அரசியல் தலைமைகள் 1990ம் ஆண்டுகளில் முன்னெடுத்த இனவாதத்தினை மீண்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு அரசியல் இலாபம் தேட முனைவது வேதனையளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விவகாரம்  தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்    மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம்கள் 45வீதம் வாழ்கின்ற நாவிதம்வெளி பிரதேச செயலகத்தினையும், 40வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்ற காரைதீவு பிரதேச செயலகத்தினையும் தமிழர்களுக்கு எமது மறைந்த தலைவர் அஸ்ரப் ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பாதையாகும். கல்முனை மாநகரைப் பொறுத்தவரை இனரீதியாக பிரிப்பதற்கு அது ஒரு கிராமிய கட்டமைப்பினைக் கொண்ட பிரதேசமல்ல. இனவாத சக்திகள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒரு போதும் கல்முனைப் பிரதேச தமிழ் மக்கள் மட்டுமன்றி வட – கிழக்கில் வாழுகின்ற தமிழர்களும் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள்.

இக்கல்முனைப் பிரதேசம் கொழும்பு, கண்டி திருகோணமலை போன்ற நகரங்களின் கட்டமைப்பினைக் கொண்டதாகும். அத்தோடு மூவின மக்களும் வாழ்கின்ற பிரதேசமுமாகும்.

இவ்வாறுள்ள கல்முனையை 1990ம் ஆண்டுகளில் இருந்த ஆயுதக் குழுக்கள் அன்று இருந்து அதிகாரம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதியையும், அதிகாரிகளையும் அச்சுறுத்தி, இயற்கை நியதிக்கு முரணாக எல்லைகளைப் பிரித்து, முஸ்லிம்களின் பள்ளிவாசல், குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றை உள்ளடக்கி கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை உருவாக்கினார்கள். இது முஸ்லிம்களுக்கு செய்த மிகப்பெரிய அநீயாயமாகும்.

கல்முனையில் சுமார் 45 ஆயிரம் முஸ்லிம்களுக்கு 29 கிராம சேவகப் பிரிவுகளும், 25ஆயிரம் தமிழ் மக்களுக்கு 29 கிராம சேவகப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளின் அடிப்படையில் பார்க்கின்ற போது முஸ்லிம்களுக்கு செய்துள்ள அநீயாயங்களை தெளிவாக புரிந்து                கொள்ள             முடியும்.

இவ்வாறு, முஸ்லிம்களுக்கு அநீயாயம் செய்யப்பட்டமைக்கு தமிழ் மக்களோ அல்லது அன்று இருந்து தமிழ் அரசியல் தலைமைளோ பொறுப்பல்ல. முழுக்க முழுக்க ஆயுதக் குழுக்களின் அழுத்தங்களினால் ஏற்படுத்தப்பட்டதாகும். ஆயினும், தமிழ், முஸ்லிம் ஒற்றுமை குழைந்துவிடக் கூடாதென்பதற்காக முஸ்லிம்கள் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்தார்கள். தலைவர் அஸ்ரப் மிகப் பெரிய அரசியல் அதிகாரத்தினைக் கொண்டிருந்த போதிலும், இந்த விடயத்தில் தலையிட்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியான கிராம சேவக எல்லைகளை மாற்றி அமைக்கவோ அல்லது கிராம சேவக எண்ணிக்கைகளை அதிகரிக்கவோ அல்லது தமிழ் கிராம சேவகப் பிரிவுகளை குறைப்பதற்கோ  மற்றும் தமிழ் பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை குறைத்து மழுங்கடிப்பதற்கோ முயற்சிளை எடுக்கவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கினறேன்.

இதே வேளை, இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் கூறுவதனைப் போன்று தமிழ்ப் பிரதேச செயலகம் முழு அதிகாரங்களைக் கொண்டதல்ல என்ற கூற்று முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைப்பதற்கு எடுக்கும் முயற்சியாகும்.

தமிழ்ப் பிரதேச செயலகம்  தனியான, கம்பீரமான நிர்வாகக் கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. கல்முனை தமிழ் பிரதேச அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தனியான அபிவிருத்திக் ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமை வகித்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். தமிழ் மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் ஏனைய அபிவிருத்திகள் யாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒரு போதும் தலையீடுகளைச் செய்ததில்லை. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் நேரடியாக ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை ஒருங்கிணைப்புக் குழுவுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் கூட தலையீடுகளைச் செய்யவில்லை.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் கீழுள்ள சுமார் 03ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  உள்ளார்கள். அவர்களுக்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டு வருகின்ற போதிலும், நாங்கள் அது பற்றி இனவாதமாக பேசவில்லை.

ஆனால், தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி அதிகாரம் மட்டும் வழங்கப்படவில்லை. இதனையே சில தமிழ் அரசியல்வாதிகள் தூக்கிப்பிடித்துக் கொண்டு இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, நாங்கள் இனவாதம் பேசுவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி அதிகாரங்களை வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. அதாவது, கல்முனையின் பூலோக அமைப்பில், பெரிய நீலாவணையை எடுத்துக் கொண்டால் தமிழர்களும், முஸ்லிம்களும் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மருதமுiனையில் 100 வீதம் முஸ்லிம்கள் உள்ளார்கள். பாண்டிருப்பு மற்றும் மணல்சேனையில் 100வீதம் தமிழர்கள் உள்ளார்கள். நற்பிட்டிமுனையில் முஸ்லிம்களும், தமிழர்களும் உள்ளார்கள். கல்முனை நகர்ப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இங்கு முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும், பள்ளிவாசலும் உள்ளன.மற்றும் பொது அரச திணைக்களங்களின் தலைமைக் காரியாலயங்களும் உள்ளன. கல்முனை தெற்குப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தெற்கு பகுதிக்கு அப்பால் 100வீதம் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதே வேளை, கல்முனையின் மேற்குப் பகுதியில் உள்ள வயற்காணிகள் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சொந்தமாக இருக்கின்றது. சில வயற்காணிகள் தட்டுமாறி வேளாண்மை செய்கை பண்ணுகின்ற காணியாக இருக்கின்றது. அதாவது. குறிப்பிட்ட ஒரு வயற்காணியில் ஒரு போகம் தமிழர் வேளாண்மை செய்தால், அடுத்த போகம் முஸ்லிம் ஒருவர் அதே காணியில் வேளாண்மை செய்வார். இந்த நடைமுறை பல தசாப்த காலமாக இருந்து கொண்டு வருகின்றன. இந்த நடைமுறையை இலங்கையில் எங்கும் காண முடியாது.

இவ்வாறான சிக்கல்கள் காரணமாகவே காணி அதிகாரத்தினை பங்கீட்டுக் கொள்வலதில்; சிக்கல்கள் உள்ளன என்பதனை புரிந்து கொள்ளாதவர்கள் முஸ்லிம் அரசியல் தலைமைகள் வேண்டுமென்று இனரீதியாக சிந்தித்து தமிழ்ப் பிரதேச செயலகத்திற்கு காணி அதிகாரத்தினை வழங்குவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் தடையாக இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்று அறிக்கை விடுவது ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களையும், தமிழர்களையும் பிரிப்பதற்கான சதியாகும். அதனூடாக அரசியல் இலாபம் அடைந்து கொள்வதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதே வேளை, கல்முனை மக்களுக்கு அவசியமான பொதுக் காரியாலயங்களை கட்டுவதற்கும், பெரும் அபிவிருத்திகளைச் செய்வதற்கும் காணிகளைப் பெற்றுக் கொள்வதில் சில தமிழ் அரசியல் தலைமைகள் கடந்த காலங்களில் சில தடைகளை ஏற்படுத்தியதனால்தான், இன்று காணி அதிகாரங்களை பங்கீட்டுக் கொள்வதில் சிக்கல் நிலைமைகள் தோன்றியமைக்கான காரணங்களாகும்.

உதாரணமாக மறைந்த தலைவர் அஸ்ரப் கல்முனையில் ஆக 80 ஏக்கர் காணியில் பொது அரச காரியாலயங்களை உள்ளடக்கியதாக ஒரு நகர அபிவிருத்தியை முன்னெடுக்க வந்த போது, அன்றிருந்த ஆயுதக் குழுக்களும், சில உள்ளுர் அரசியல் தலைமைகளும் அதற்கு எதிராகப் போராடின. இதன் காரணமாக தலைவர் தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தடைகளை மீறி அந்த வேலைகளைச் செய்திருக்கலாம். ஆனால், அவ்வாறு இல்லாமல், இதனைப் பேசித் தீர்க்க வேண்டும் என்பதற்காக தமிழ் அரசியல் தலைமைகளுடனும், புத்திஜீவிகளுடனும் பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டார். ஆனால், வெற்றியளிக்கவில்லை.

இதே போன்று இன்றைய தலைவர் ரவூப் ஹக்கிம் மையோன் முஸ்தபா மற்றும் நானும் உட்பட தமிழ் அரசியல் தலைமைகளுடனும், புத்திஜீவிகளுடனும் பல சுற்றுக்கள் பேசியுள்ளோம். இன்றும் கூட பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், சிலர், இதனை விரும்பாது அம்பாரை மாவட்டத்தில் இறக்காமம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகங்கள் முஸ்லிம்களுக்கு உருவாக்கியுள்ளதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதே வேளை, தமிழ் மக்களுக்கு பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதனை மறந்து பேசிக் கொண்டீருக்கின்றார்கள். நாங்கள் தமிழர்களுக்கு எதிராக செயற்படுகின்றவர்களல்லர் என்பதனை தைரியமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு 13வது சீர்திருத்தத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்த ஒன்றிக்காக அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் எங்களை அரசாங்கத்திற்குள் இருக்கும் ஒரு எதிரியாகவே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை தமிழ் மக்களுக்கும், கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விவகாரத்தில் அரசியல் இலாபம் தேட முயன்று கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், உண்மையில் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண வேண்டுமாக இருந்தால், கல்முனையில் உள்ள தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் தலைமைகளும், கல்முனை முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமையாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவருடனும், எங்களுடனும் முதலில் பேச வேண்டும். அதனூடக ஒரு இணக்கபாட்டு காண வேண்டும். அதனைவிடுத்து இரு இனங்களுக்கு எதிராகவும் பெரும் எடுப்பில் போராடிக் கொண்டிருக்கும் பொது பல சேனவின் நிகழ்சி நிரலுக்குள் அகப்பட்டு செயற்படும் போது இதற்கு தீர்வு காண முடியாதென்பதனை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

Web Design by Srilanka Muslims Web Team