முஸ்லிம்களை முடக்க திட்டமிட்ட சதி? ஆபத்தான புதிய ஆண்டு! » Sri Lanka Muslim

முஸ்லிம்களை முடக்க திட்டமிட்ட சதி? ஆபத்தான புதிய ஆண்டு!

muslim

Contributors
author image

A.S.M. Javid

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஆபத்து நிறைந்த ஒரு புதிய ஆண்டாகவே 2017ஆம் ஆண்டு பிறந்துள்ளது. ஏனைய சமுகங்களுடன் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என்ற ஒரே எதிர்பார்ப்புடன் காணப்படும் இந்த நாட்டு முஸ்லிம் சமுகத்தினை அவர்களது சமய, சமுக விழுமியங்களுடன் வாழ விடாது நசுக்கும் கைங்கரியங்கள் அந்தச் சமுகத்தினை மிகவும் வேதனைக்குள்ளாக்கி இருக்கின்றது.

குறிப்பாக அரசியல் மட்டத்தில் இடம் பெறும் சில சம்பவங்கள் இந்தச் சமுகத்தினை வேதனைக்குள்ளாக்கி இருப்பதுடன் இந்த அரசிலும் வைத்துள்ள நம்பிக்கையும், எதிர்பார்ப்புக்களும் விழழுக்கிறைத்த நீராகியதாகவே அமைந்து விட்டது. காரணம் ஜனாதிபதியின் அன்மைய சில தீர்மானங்களும், செயற்பாடுகளுமே அதற்குக் காரணமாகும்.

சகல சமுகத்திற்கும் நடு நிலையாக இருந்து ஆட்சியை இட்டுச் செல்ல வேண்டிய ஜனாதிபதி கடந்த அரசு போன்று இனவாதத்திற்கு விலைபோன ஒரு விடயமாக நோக்க வேண்டியுள்ளது. காரணம் சிறுபான்மை மக்களை கூறுபோட நினைக்கும் பேரினவாத பௌத்த சக்திகள் நல்லாட்சியை விரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தமது வலைக்குள் மூளைச் சலவை செய்து அவர்களின் பாணியிலும், அவர்களின் நிகழ்ச்சி நிரல்களிலும் உத்தரவுகளை விடுவது அவர் நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் பாதகமான செயற்பாடுகளாகவே காண முடிகின்றது.

குறிப்பாக இந்த நாட்டை அழித்து குட்டிச்சுவராக்க நினைக்கும் பௌத்த கடும்போக்குவாத சக்திகளுடன் கடந்த 2016.12.22 அன்று மேற்கொண்ட சந்திப்பு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு தூபமிட்ட செயற்பாடுகளாகவே அமைந்துள்ளதாக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மேற்படிச் சந்திப்பின் பின்னரான ஜனாதிபதியின் இரண்டு விடயங்கள் முற்றுமுழுதாக முஸ்லிம் சமுகத்தினை உடல், உள ரீதியாகவும், சமய ரீதியாகவும் வேதனைக்குள்ளாக்கி இருக்கின்றது.

இனவாதிகளின் வாய்க்குப் பொரி போடுவதுபோன்று அவர்களின் எதிர் பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் தொல்பொருள் பாதுகாப்பு விடயம் மற்றும் வில்பத்து விஸ்தரிப்பு விடயம் இவை இரண்டும் நேரடியாகவே முஸ்லிம்களின் இருப்பிலும், சமயத்திலும் மேற்கொள்ளப்பட்ட நேரடித் தாக்குதல்கள் என்றே கூறலாம்.

கிழக்கில் அக்கரைப் பற்றில் பொத்தனை தக்கியாப் பள்ளி தர்ஹாவை தொல்பொருள் பாதுகாப்பு என்று இன்று அதனை தொல்பொருளியலாளர்கள் ஆக்கிரமித்துள்ளதுடன் அப்பகுதிக்குள் செல்வதற்குக்கூட முஸ்லிம்களுக்கு தடை விதித்துள்ளமை இந்த அரசின் நரித்தனத்தைக் காட்டுவதாக அமைகின்றது என குறித்த பிரதேச மக்கள் மட்டுமல்லாது முழு முஸ்லிம் சமுகமும் அரசிற்கும், ஜனாதிபதிக்கும் தமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றனர். இந்தப் பள்ளியில் உள்ள பல பொருட்களும் சூறையாடப்பட்டுள்ளதாகவும் அப்பள்ளியின் நிருவாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மன்னாரில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம் சமுகத்தின் காணிகளை வில்பத்து விஸ்தரிப்பு என்ற போர்வையில் சூiயாடுவதற்கான அறிவித்தலாகும். மன்னார் சிலாவத்துறைப் பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை கடந்த யுத்த காலத்தில் குறிப்பாக 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் பலவந்தமாக ஆயுத முனையில் வெளியேற்றியதன் விளைவாக அவர்கள் கடந்த 26 வருடங்களாக அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தினை கண்டு கொண்டு இலங்கையின் முன்னணி இனவாதிகள் முஸ்லிம் சமுகம் மீதும் இஸ்லாத்தின் மீதும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக அதனை சூறையாடுவதற்கு அரசிற்கு கொடுத்த அழுத்தங்கள் கடந்த அரசில் குறிப்பாக 2002ஆம் ஆண்டு முஸ்லிம் சமுகம் வாழ்ந்த பிரதேசங்களும் வில்பத்து என்ற போர்வையில் அவை வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அறிவித்தமை எல்லாம் இந்த நாட்டு முஸ்லிம் சமுகத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகச் செயல்களாகவே அமைந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுகத்தின் மன நிலைகளைக் கண்டு கொள்ளாது பௌத்த தர்மம் விரும்பாத செயற்பாடுகளை ஒருசில இனவாதிகள் மேற்கொள்வதற்கு ஜனாதிபதியும் துணைபோவது முஸ்லிம் சமுகத்தினைப் பொருத்த வரை மஹிந்த ராஜபக்ஷவில் முஸ்லிம்கள் கொண்டிருந்த அதிர்ப்திகளை விடவும் பெரியளவில் ஏற்படுத்தி வருகின்றது.

நல்லாட்சி என்ற போர்வையில் நம்பி வாக்களித்த மக்களுக்கு ஜனாதிபதியின் தற்போதைய செயற்பாடுகள் கவலையை தோற்று வித்துள்ளதுடன் தமது பிரச்சினைகளுக்கு எங்கு போவதென்ற தர்ம சங்கடமான நிலைமைகளை தோற்று வித்துள்ளது. இந்த நாட்டில் இனவாதத்தையும், மத வாதத்தையும் இல்லாது செய்து அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவோம் என்ற வாய்வெட்டுக்களின் உண்மையான சுயரூபங்கள் இதுதானா? என்பது மக்கள் மத்தியில் ஐயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருட நிறைவு இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்திற்கு வேதனைதரும் ஒரு ஆண்டாகவே அமைந்து விட்டது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அறிந்தவர் என்றும் அவர் தந்த தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் ஒரு உயரிய பண்புடையவர் என்றும் முற்றுமுழுதாக நம்பிய மக்களை இன்றைய அவரின் செயற்பாடுகள் ஏக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஜனாதிபதி தொல்பொருள் விடயத்திலும், வில்பத்து விடயத்திலும் மேற்கொண்ட செயற்பாடுகள் விடயத்தில் மீள்பரிசீலனை செய்து சிறுபான்மை முஸ்லிம் சமுகத்தினைப் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்து இந்த நாட்டில் மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு மக்கள் செல்லாது இருப்பதற்கான சந்தர்ப்பத்தினைத் தவிர்த்து மக்களின் கருத்துக்களை இனவாதத்திற்கு விலைபேசாது இதய சுத்தியுடன் ஆராய்ந்து செயற்பட வேண்டியதே காலத்தின் தேவையும், முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்களுமாகும்.

Web Design by The Design Lanka