முஸ்லிம்கள் எம்மை வெறுக்கவில்லை நாம் இணைந்திருக்கும் அரசைத்தான் வெறுக்கின்றார்கள்-ஹசன் அலி - Sri Lanka Muslim

முஸ்லிம்கள் எம்மை வெறுக்கவில்லை நாம் இணைந்திருக்கும் அரசைத்தான் வெறுக்கின்றார்கள்-ஹசன் அலி

Contributors
author image

Editorial Team

ஊவா தேர்தலின் முடிவுகளின்படி முஸ்லிம்கள் அரசை விட்டு தொலைதூரம் சென்றுவிட்டனர் என்றும், முஸ்லிம் தலைவர்கள் அரசுடன் இருப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வைத்துவிட்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார் .

 

ஊவா தேர்தலில் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸூம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் ஒன்றிணைந்து போட்டியிட்டும் கூட எம்மால் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியவில்லை. முஸ்லிம்கள் எம்மை வெறுக்கவில்லை நாம் இணைந்திருக்கும் அரசைத்தான் வெறுக்கின்றார்கள் என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாக புலப்படுகின்றது.

 

ஏற்கனவே தமிழ் இனம் அரசைவிட்டு தூர விலகி நிக்கிறது.  முஸ்லிம் இனமும் இப்போது அவ்வாறு தூரமாக தொடங்கிவிட்டது. இது அரசுக்கு நல்லதல்ல. ஒரு தேசிய அரசுக்கு அந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் ஓரினம் தான் ஆனால் அரசு, தமிழ், முஸ்லிம் மக்களை தள்ளிவைத்து செயற்படுவது அரசின் செயப்பாட்டுக்கு ஆரோக்கியத்தைதராது. இந்த நாட்டின் இரண்டு இனங்கள் தன்னில் இருந்து தூரமாகும் இந்த அபாயகரமான விடயம் தொடர்பில் ஜனாதிபதி உடன் கவனம் செலுத்த வேண்டும்.

 

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் குழுக்களைத் தடைசெய்வதோடு தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் உடன் கவனம் செலுத்தவேண்டும். அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது மேலும் இனவாதக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு இடம் கொடுத்தால் முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் அரசுடன் இருப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு எம்மிடம் கேட்கின்றனர். தேர்தல் முடிவுகள் அதைத்தான் சொல்லுகின்றது.

 

முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்கள் விருப்புக்கு ஏற்பவே நாம் செயற்ப்பட வேண்டும் எமது சுய விருப்பத்தின் அடிப்படையில் நாம் செயற்ப்பட முடியாது. ஆகவே கடந்த மேல்இ தென் மற்றும் ஊவா தேர்தல்களில் முஸ்லிம்கள் விடுத்திருக்கும் செய்தியை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் – என தெரிவித்துள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team