முஸ்லிம் அமைச்சர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள், போதுமான சாட்சியங்கள் இருப்பதாக தேர்தல் மேடையில் கூறிய சாட்சியங்கள் எங்கே..! - Sri Lanka Muslim

முஸ்லிம் அமைச்சர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள், போதுமான சாட்சியங்கள் இருப்பதாக தேர்தல் மேடையில் கூறிய சாட்சியங்கள் எங்கே..!

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கத்துக்குள் இருக்கும் சிலரே நிராகரிப்பது வெட்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையை முழுமையாக நம்பிக்கை வைத்து, தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்துவந்த அரசாங்கமே இன்று அறிக்கையை நிராகரித்து வருவது வெட்கப்படவேண்டிய விடயமாகும்.

ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் மேடைகளில் திரும்பத்திரும்ப பேசப்பட்ட விடயம்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாகும். அதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையே அவர்கள் நம்பி இருந்தார்கள்.

அத்துடன் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை தவிர வேறு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

தற்போது அறிக்கை வெளியில் வந்ததுடன் அது தொடர்பில் பல்வேறு தரப்பினர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்துக்கும் வேறு வழியின்றி தற்போது குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது என தெரிவித்து வருகின்றது.

அப்படியானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களுக்கு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என கேட்கின்றோம்.

அதேபோன்று முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பல நபர்கள் இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள். அதுதொடர்பில் போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் இவர்கள் தேர்தல் மேடைகளில் பகிரங்கமாக தெரிவித்து வந்தனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தில் இருப்பவர்களே இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பூரணமில்லாமல் இருப்பதாக தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக நாங்கள் வெட்கப்படுகின்றோம் என மேலும் அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team