முஸ்லிம் இளைஞரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் » Sri Lanka Muslim

முஸ்லிம் இளைஞரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல்

_101813615_a27325b0-7a1d-44fa-96dd-c26c423e3aaa (1)

Contributors
author image

Editorial Team

(BBC)


கும்பல் ஒன்றிடமிருந்து இஸ்லாமியரை சில தினங்களுக்கு முன் போலீஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றினார். அந்த போலீஸ் அதிகாரி கதாநாயகனாக போற்றப்பட்டு வரும் சூழ்நிலையில், அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

இந்து கும்பல் ஒன்றிடமிருந்து இஸ்லாமியர் ஒருவரை உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ககன்தீப் சிங் என்னும் காவல்துறை அதிகாரி காப்பாற்றிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக கடந்த வாரம் பரவியது.

அந்த இஸ்லாமியர் தனது இந்து தோழி ஒருவருடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

அந்த இஸ்லாமியரை சுற்றி வளைத்த கும்பல், ‘லவ் ஜிஹாத்’ என்று குற்றஞ்சாட்டி அவரை தாக்க முயற்சித்துள்ளது.

லவ் ஜிஹாத்

இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை வசப்படுத்தி , அவர்களை மதமாற்றுகின்றனர் என்று குற்றஞ்சாட்டும் இந்து விளிம்பு குழுக்கள், இதனை ‘லவ் ஜிஹாத்’ என்கின்றனர். அந்த குழுக்கள்தான் இந்த வார்த்தையை பரவலாக்கியது.

அந்த காணொளி முதலில் இணையத்தில் பரவிய போது, பலர் ககன்தீப் சிங்கை, அனைத்து இந்தியர்களுக்குமான ‘முன்மாதிரி’ என்றனர். அவர் குறித்த செய்தியை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன.

“இது மாதிரியான இந்தியாவைதான் நான் விரும்புகிறேன், எப்போதும் விரும்புவேன்.” என்ற தொனியில் ஒரு ட்வீட்டர் பதிவை பகிர்ந்தார் எழுத்தாளர் சேத்தன் பகத்.

எழுத்தாளர் தஸ்லிமா ஒரு ட்வீட்டர் பதிவில் அந்த காவல்துறை அதிகாரியை வணங்குவதாக கூறி உள்ளார். “அன்பால் தான் இந்த உலகம் சிறப்பான இடமாக மாறும், வெறுப்பால் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் என் கடமையைதான் செய்தேன். நான் அப்போது சீருடையில் இல்லாமல் இருந்திருந்தாலும், இதனைதான் செய்திருப்பேன்” என்று ககன்தீப் சிங் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், கக்ந்தீப் சிங்கின் செயலை விமர்சிக்க மக்களுக்கு அதிக நாட்கள் எடுக்க வில்லை. “அருவருப்பான நடத்தை”-யை அவர் காப்பாற்றியதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

அவருடன் பணி செய்யும் காவல் அதிகாரிகள், அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், அவர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

சில அரசியல்வாதிகள் அந்த கும்பலின் செயலை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.

இது தவறு

பிபிசி பஞ்சாபியின் செய்தியாளர் சுனில் கட்டாரியாவிடம் பேசிய, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் நைன்வால், “கோயில் மற்றும் புனிதமான இடம் என்று தெரிந்தும் இந்து பெண்களை அந்த மக்கள் (முஸ்லிம் ஆண்கள்) வழிப்பாட்டு தளத்திற்கு அழைத்து வருவது தவறு.” என்கிறார்.

இந்து சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் ஒரு முயற்சி இது என்று ஏஎன்ஐ-யிடம் கூறினார் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் துக்ரால்.

மேலும் அவர், “நாங்கள் மசூதிக்கு செல்ல மாட்டோம். ஏனெனில், எங்களுக்கு அங்கு செல்லும் உரிமை இல்லை” என்றார்.

பின் ஏன் இவர்கள் இந்து கோயிலுக்கு, இந்து பண்பாட்டை அழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வருகிறார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்த சம்பவம் நடந்த ராம்நகர் அருகே வசிக்கும் சில குடியிருப்புவாசிகளுக்கு, இந்த நிகழ்வு இவ்வாறாக மாறியது கவலை அளிக்கிறது.

“ஓர் ஆணும், ஒரு பெண்ணும் அவர்கள் விருப்பத்தின்பால் ஒன்றாக செல்வதை, இந்த வலதுசாரி குழுக்கள் “லவ் ஜிஹாத்” என்று எப்படி அழைக்க முடியும், தாக்க முடியும்? ” என்று பிபிசி பஞ்சாபியிடம் தெரிவித்தார் ராம் நகரை சேர்ந்த அஜீத் சஹ்னி.

Web Design by The Design Lanka