முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி அறிக்கையிட வேண்டும்- அஷ்ஷெய்க் அகார் - Sri Lanka Muslim

முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி அறிக்கையிட வேண்டும்- அஷ்ஷெய்க் அகார்

Contributors

முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அறிக்கையிடலின்போது இஸ்லாமிய விழுமியங்களைப் பேண வேண்டியது அவசியமாகும் என ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவர் என்.எம்.அமீனின் புதல்வரும் ஊடகவியலாளருமான அஸாம் அமீனின் நிகாஹ் மஜ்லிஸ் தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு மார்க்க உபன்னியாசம் நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஊடங்கள் மூலமாக இன்று இஸ்லாத்துக்கு எதிராக பாரிய போர் தொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் பற்றியும் முஸ்லிம் பெண்கள் பற்றியும் அவர்கள் அணிகின்ற ஹிஜாப், நிகாப் பற்றியும் ஹலால் ஹராம் பற்றியும் பாரிய தப்பபிப்பிராயங்கள் ஊடகங்கள் மூலமாகவே பரப்பப்படுகின்றன.
இவ்வாறான சமயங்களில் இவற்றுக்கு தக்க பதிலடி கொடுப்பதும் உரிய விளக்கங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்ப்பதும் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
நம் மத்தியில் ஏராளமான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இருந்தாலும் அவர்களில் எத்தனை பேர் இஸ்லாமிய விழுமியங்களை பேணி அறிக்கையிடுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகும்.
ஒரு முஸ்லிம் ஊடகவியலாளன் இஸ்லாத்தை பாதுகாப்பதையே தனது உயர்ந்த இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தனது அறிக்கையிடலையும் மேற்கொள்ள வேண்டும்.
ஊடகம் ஓர் அருள் என்று சொல்கின்ற அதே நேரம் அது இன்று பெரும் பித்னாவாகவும் மாற்றம் பெற்றுள்ளது என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள இன்றைய சூழ்நிலையில் அதன் மூலமாக பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. சமூக ஊடகங்கள் மூலமாக ஒழுக்கமும் கலாசாரமும் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ள அதேநேரம் இனங்களுக்கிடையில் குரோதங்களையும் பிரிவினைகளையும் தோற்றுவிப்பதிலும் சமூக ஊடகங்கள் அதிக தாக்கம் செலுத்துகின்றன. மட்டுமன்றி பல குடும்பங்களில் தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்கும் இந்த சமூக ஊடகங்கள் காரணமாய் இருக்கின்றன.
ஒழுக்கத்தைப் பேணி வாழந்த பல குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் சமூக ஊடகங்களின் தாக்கத்தினால் ஏமாற்றப்பட்டு தமது கற்புகளைக் கூட பறி கொடுத்திருக்கிறார்கள் எனும் வேதனைமிக்க செய்திகளையும் நாம் கேள்விப்படுகிறோம்.
இந்த நூற்றாண்டில் ஊடகங்கள் மூலமாகவே பாரிய போர்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை கத்தியின்றி இரத்தமின்றி நடக்கின்ற போர் எனச் சொல்கிறார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு அரசியல்வாதிகள், சமூகத் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகளுக்கு இருப்பதைப்போல் ஊடகவியலாளர்களுக்கும் இருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் அன்வர் அல் அக்ஹா, அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், எம்.ரி.ஹசனலி, எம்.எஸ்.எம். அஸ்லம், மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், முன்னாள் அமைச்சர்  இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் உட்பட ஏராளமான பிரமுகர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team