முஸ்லிம் கலாசார அமைச்சு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்: SLTJ யின் 18 தீர்மானங்கள் - Sri Lanka Muslim

முஸ்லிம் கலாசார அமைச்சு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்: SLTJ யின் 18 தீர்மானங்கள்

Contributors

-SLTJ ஊடக அறிக்கை-

புனித பூமியை காரணம் காட்டி முஸ்லிம் பூர்வீகத்தை அழிக்க முனையும் இனவாத சக்திகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 03 வது பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 03 வது தேசிய பொதுக் குழுக் கூட்டம் 04.01.2014 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

ஜமாத்தின் தலைவர் சகோதரர் ஆர்.எம். ரியால் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் கோவை. ரஹ்மதுல்லாஹ் MISc மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தனிக்கைக் குழு உறுப்பினர் சகோதரர் தவ்பீக் ஆகியோர் விசேர அதிதிகளாக கலந்து கொண்டதுடன், ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தின் 53 கிளைகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

 

கடந்த மூன்று வருட கால தஃவா பயனத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாதித்தது என்ன? என்ற தலைப்பில் சகோதரர் ஆர்.எம். ரியால் அவர்கள் உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து ஜமாத்தின் 2014 ம் ஆண்டுக்கான செயல்திட்டத்தினை சகோதரர் பர்சான் அவர்கள் சமர்பித்தார். ஜமாத்தின் வரவு மற்றும் செலவு பற்றி விபரங்களை சகோதரர் ரில்வான் அவர்களும், 03 வருட கால செயல்பாடுகளை சகோதரர் அப்துர் ராசிக் அவர்களும் சமர்ப்பித்தார்கள். பொதுக் குழுவின் தீர்மானங்களை சகோதரர் ரஸ்மின் வாசித்தார்.

 

கிளைகளுக்கான விருதுகள் வழங்கள்.

ஜமாத்தின் அனைத்துக் கிளைகளில் அதிகமான பிரச்சாரங்களை முன்னெடுத்த முதல் மூன்று கிளைகளுக்கு சிறப்பு விருகள் வழங்கப்பட்டன. அதில் முதல் இடத்தினை பெற்றுக் கொண்ட SLTJ சம்மாந்துரை கிளைக்கு சுமார் 70 ஆயிரம் பெருமதியான ப்ரொக்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட்டதுடன் முதல் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடத்திற்கான விருதினை SLTJ ஹெம்மாதகம கிளையும், மூன்றாம் இடத்திற்கான விருதினை SLTJ சாய்ந்தமருது கிளையும் பெற்றுக் கொண்டன.

இரத்த தானத்திற்கான சிறப்பு விருதுகள்.

அகில இலங்கை மட்டத்தில் இரத்த தானம் செய்வதில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கிளைகள் சார்பாக நடத்தப்பட்ட இரத்த தான முகாம்களில் முதல் மூன்று இடத்தினை பெற்ற கிளைகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. முதல் இடத்திற்கான விருதினை SLTJ அக்குரனை கிளையும், இரண்டாம் இடத்திற்கான விருதினை SLTJ ஹெம்மாதகம கிளையும், மூன்றாம் இடத்திற்கான விருதினை SLTJ சம்மாந்துரை கிளையும் பெற்றுக் கொண்டன.

 

பத்திரிக்கை விநியோகத்திற்கான சிறப்பு விருது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் உத்தியோகபூர்வ பத்திரிக்கையான “அழைப்பு” மாத இதழ் விநியோகத்தில் வருடத்தில் முதல் இடத்தை பிடித்தவருக்கான விருதினை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அக்குரனை கிளையின் உறுப்பினர் சகோதரர் அர்ஷாத் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

 

புதிய நிர்வாகம் தெரிவு.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்துவதை அமைப்பு விதியாகக் கொண்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் 2014 ம் ஆண்டு முதலான இரண்டாவது நிர்வாகத் தெரிவை இப்பொதுக் குழுவில் நடத்தியது.

 

தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் : சகோ. ரியாழ்

துணை தலைவர் : சகோ. பா்சான்

செயலாளர் : சகோ. அப்துர் ராசிக்

பொருளாளர் : சகோ. ரிழ்வான்

துணை செயலாளர்கள் :

சகோ. ரஸ்மின்.

சகோ. ஹிஷாம்.

சகோ. பாயிஸ்

சகோ. சப்வான்.

சகோ. ரீஸா

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 03 வது பொதுக் குழுவின் தீர்மானங்கள்.

 

(04.01.2014)

புனித பூமியை காரணம் காட்டி முஸ்லிம் பூர்வீகத்தை அழிக்க முனையும் இனவாத சக்திகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 03 வது பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.

1. அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுத்தல் – பிரச்சினை.

இலங்கை ஆட்பதிவு தினைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டையின் புகைப்படத்தில் ஒரு இனத்தினதோ அல்லது மதத்தினதோ கலாசாரத்தை வெளிப்படுத்தி புகைப்படம் எடுக்கக் கூடாது என்று ஆட்பதிவு தினைக்கள தலைமை அதிகாரி அறிவித்துள்ளார்.

முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்துத் தான் ஆடை அணிவார்கள். இது இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு இட்டுள்ள கட்டளையாகும். இதே நேரத்தில் முஸ்லிம் ஆண்களும் துருக்கியரின் பின்னனிக் கலாசார தொப்பியை அணிவது வழக்கம்.

ஆட்பதிவு திணைக்கள அதிகாரியின் கருத்துப்படி முஸ்லிம் பெண்கள் தலைமை மறைத்து ஆடை அணிவதையும், ஆண்கள் தொப்பி அணிவதையும் தடைசெய்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று திரை மறைவில் நடைபெற்று வருகின்றன என்பதை அறிய முடிகின்றது.

அரசியல் சட்டத்தின்படி இலங்கை சட்ட யாப்பு முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள இவ்வுரிமையை பரிப்பதற்கான முயற்சிகளை அரசு உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், முஸ்லிம்களுக்கான இவ்வுரிமையை பாதுகாப்பது பற்றி தெளிவான முடிவை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.

2. இனவாத இயக்கங்களை தடை செய்க!

சிறுபான்மை மக்களுக்கு எதிராக இனவாதப் பிரச்சினைகளை உண்டாக்கி, முஸ்லிம்களின் வணக்கத் தளங்கள் மற்றும் வியாபாரத் தளங்கள் மீது தாக்குதல் தொடுப்பதுடன், புனித பூமியை காரணம் காட்டி முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களை அபகரிப்பதற்கான வேலைப்பாடுகளையும் முன்னெடுத்து வரும் பொது பல சேனா, சிங்கள ராவய, இராவண பலய போன்ற இனவாத குழுக்களை அரசு உடனடியாக தடை செய்வதினூடாக சிறுபான்மை மக்களின் அச்சமற்ற வாழ்வுக்கு வழி செய்ய வேண்டும் என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.

3. முஸ்லிம் தனியார் சட்டம் ( MUSLIM PERSONAL LAW ) – திருத்தம் தேவை.

இலங்கை அரசியல் சாசனத்தின் படி உருவாக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டம் 1954 ம் ஆண்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டதின் பின்னர் இதுவரைக்கும் எவ்வித மாற்றமும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் 1954 ம் ஆண்டு திருத்தம் செய்து நடை முறைப்படுத்தப்பட்டு வரும் முஸ்லிம் தனியார் சட்டம் இஸ்லாத்தின் அடிப்படை மூல ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மீள் திருத்தம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.

ஆகவே முஸ்லிம் தனியார் சட்டத்தில் இஸ்லாத்தின் அடிப்படை மூல ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின்” அடிப்படையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.

4. புனித பூமி பிரச்சினை.

அநுராதபுரம் மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலில் ஆரம்பித்த புனித பூமி பிரச்சினை தம்புள்ளை, ஜெய்லானி (கூரகல), தீகவாவி, பொத்துவில் என்று வியாபித்து இன்று தெவனகல மலைக்குன்று வரை தொடர்ந்துள்ளது. புனித பூமியின் பெயரால் முஸ்லிம்களின் பூர்வீக சொத்துக்களை அபகரிக்கும் திட்டம் இதன் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. பன்னெடுங் காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் பகுதியில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக எடுக்கப்பட்டு வரும் இது போன்ற முயற்சிகளுக்கு அரசு தடை விதிப்பதுடன், சிறுபான்மை முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி இப்பொதுக் குழு வேண்டுகோள் விடுக்கின்றது.

5. தெவனகல பிரச்சினை.

மாவனல்லை தெவனகல பகுதியில் இருந்து சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 3000 ம் முஸ்லிம்களை தெவனகல மலைக் குன்றுக்குட்பட்ட புனித பூமிப் பகுதியில் குடியிருப்பவர்கள் என்று குறிப்பிட்டு வெளியேற்றுவதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. சுமார் 200 வருடங்களுக்கும் மேலாக அங்கு வசித்து வரும் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கான முயற்சியாகத்தான் தெவன கல புனித பூமிப் பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை அவர்களின் பூர்வீக பூமியை விட்டும் வெளியேற்றுவதற்கு முயற்சி செய்யும் இனவாதக் குழுக்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கின்றது.

6. பள்ளி வாயல்கள் தாக்கப்படுவது.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் பரப்பப்பட்டு வரும் இனவாத பிரச்சினை காரணமாக பல இடங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டு வருகின்றது. இத்தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்பதையும், குறித்த தாக்குதல்களுக்கு காரணமாக இனவாதத்தைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுப்பதுடன், இனவாதம் பரப்பும் இயக்கங்களை தடை செய்யுமாறும் இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கின்றது.

7. புத்தசாசன அமைச்சில் பள்ளிகளை பதிவு செய்தல் பற்றி.

 முஸ்லிம் பள்ளிவாயல்களை பதிவு செய்வதற்கு என்று அரசாங்கத்தினால் முஸ்லிம் கலாசார தினைக்களம் தனியாக இயங்கி வருகின்றது. முஸ்லிம் கலாசார தினைக்களத்தில் பள்ளியாக பதிவு செய்யப்பட்ட இடங்களில் இதுவரை காலமும் தொழுகை தாராளமாக நடைபெற்று வந்தது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக புதிய பள்ளிவாயல்களை புத்த சாசன அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகளும், வேறு சில அதிகாரிகளும் அழுத்தம் தெரிவித்து வருகின்றனர். இல்லாத சட்டத்தினை நடைமுறைப்படுத்தும்படி யாரும் யாருக்கும் அழுத்தம் தெரிவிக்க முடியாது.

இப்படி சட்டத்திற்கு மாற்றமாக ஒரு சமுதாயத்தின் உரிமையில் கைவைக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.

8. முஸ்லிம் கலாசார அமைச்சு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.

 பௌத்த மக்களின் மத விவகாரங்களை கவனிப்பதற்காக தனியாக புத்த சாசன அமைச்சும் அதற்குப் பொறுப்பாக தனியான அமைச்சரும் (பிரதமர்) நியமிக்கப்பட்டிருப்பதைப் போல், கடந்த காலங்களில் முஸ்லிம்களின் விவகாரங்களை கவனிப்பதற்காக தனியாக முஸ்லிம் விவகார அமைச்சும் அதற்குப் பொறுப்பாக தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் முஸ்லிம் விவகார அமைச்சு இல்லாமலாக்கப்பட்டு, முஸ்லிம் விவகாரத்தை கவனிப்பதற்காக முஸ்லிம் கலாசார தினைக்களம் என்றொன்று உருவாக்கப்பட்டு, அத் தினைக்களம் புத்த சாசன அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப் படுகின்றது.

ஆனால் தினைக்களத்தின் செயல்பாடுகள் முழுமையாக நடை முறைப்படுத்தப்படுவதற்கும், முஸ்லிம் விவகாரங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதற்கும் ஆரம்பத்தில் காணப்பட்ட அமைச்சு முறை மீண்டும் உருவாக்கப்பட்டு அதற்கான தனி அமைச்சரும் நியமிக்கப்பட வேண்டும் என்று இப்பொதுக் குழு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கின்றது.

9. பள்ளி விஷயத்தில் பொலிஸ் தலையீடு.

 இலங்கையில் பரப்பப்பட்டு வரும் இனவாத பிரச்சினையினால் பள்ளிவாயல்கள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாவதுடன், பள்ளிவாயல்களை மூடிவிடும்படியும், தொழுகை நடத்தக் கூடாது என்றும் பொலிசார் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்து வருகின்றார்கள். அண்மையில் தெஹிவெல பகுதியில் பொலிசார் இது போன்றதொரு உத்தரவை பிறப்பித்திருந்தார்கள்.

சட்ட ரீதியாக பொலிசாருக்கு இல்லாத அதிகாரத்தை கையிலெடுத்து சிறுபான்மை மக்களின் உரிமைகளில் கை வைக்கும் போக்கை பொலிஸ் தரப்பு கைவிட வேண்டும் என்று அரசு பொலிசாருக்கு உத்தரவிடவேண்டும் என்றும், சிறுபான்மை மக்கள் விஷயத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் நீதியாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.

10. LLRC – கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக்குழு விசாரனை.

 கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசின் நிலைபாடு இன்னும் தெளிவாக்கப்படவில்லை. அதை மக்களுக்கு அரசு முழுமையாக தெளிவுபடுத்துவதுடன், அவற்றை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு இலங்கை அரசிடம் கேட்டுக் கொள்கிறது.

11. இனப்பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தனித் தரப்பு வேண்டும்.

இனப்பிரச்சினை விடயத்தில் கடந்த பல வருடங்களாக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் இதுவரை தமிழ் தரப்புடன் நடத்தியுள்ளது. இருப்பினும் இப்பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித் தரப்பாக இணைத்துக் கொள்ளப்படவில்லை.

முஸ்லிம்களை இணைத்து நடத்தப்படாத இனப்பிரச்சினைத் தீர்வு பேச்சுவார்த்தையில் எவ்விதமான பலனையும் நாம் அடைய முடியாது என்ற அடிப்படையில் தென்னாபிரிக்காவை மத்தியஸ்தமாக வைத்து இனிவரும் காலங்களில் நடத்தப்படவிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு வேண்டும் பேச்சு வார்த்தையில் இலங்கை முஸ்லிம்களையும் தனித் தரப்பாக இணைத்த பேச வேண்டும் என இப்பொதுக் குழு அரசிடம் கோரிக்கை வைக்கின்றது.

12. முஸ்லிம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்க!

அரசாங்கம் நடத்தும் முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக் குறை மற்றும் அபிவிருத்தி வளர்ச்சியின்மை போன்றவைகள் தொடச்சியாக இருந்து வரும் பிரச்சினையாக உள்ளது. ஒரு அரசு செய்ய வேண்டிய பணிகளில் மிக முக்கியமானது கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதாகும். ஆனால் கல்வி அபிவிருத்தியில் முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு மிக மிக குறைவாக உள்ளது. பெரும்பாலும் முஸ்லிம் தனவந்தர்கள் தான் முஸ்லிம் பாடசாலைகளின் தேவையில் பெரும்பகுதியை நிவர்த்தி செய்கின்றார்கள்.

ஆகவே இனி வரும் காலங்களில் அரசு நடத்துகின்ற முஸ்லிம் பாடசாலைகளை முன்னேற்றம் செய்வதற்காக தனியான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று இப்பொதுக் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றது.

13. ஓரினச் சேர்கையாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

 ஒழுக்க வாழ்வை சீர்குழைக்கும் விதமாகவும், இலங்கை நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை உண்டாக்கும் வகையிலும் ஒரீனச் சேர்க்கையாளர்கள் தங்களின் வக்கிர ஆசைகளை மற்றவர்கள் மத்தியில் பரப்புவதற்காக ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு அரசு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

ஒழுக்க வாழ்வை நாசப்படுத்தி இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் கற்பிக்க நினைக்கம் இது போன்றவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் இது போன்ற குற்றச் செயல்கள் விஷயத்தில் இஸ்லாம் சொல்லும் தண்டனை முறைகளை நடை முறைக்குக் கொண்டுவர வேண்டும் என இப் பொதுக் குழு கோரிக்கை வைக்கின்றது.

14. சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம்.

அண்மைக் காலமாக சிறுவர்கள், மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துண்புருத்தல்கள் அதிகரித்து வருகின்றன. சிறுவர்களுக்கு எதிரான சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவற்றை தடுப்பதற்கு அனைத்துத் தரப்பாரும் முன்வர வேண்டும். சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் எதிரான செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்நிலையில் இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் கடுமையாக தண்டிப்பதுடன், பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு இஸ்லாமிய சட்டவாக்கம் தான் சிறந்த வழிகாட்டலாகும். ஆகவே, பெண்களை பாதுகாக்கும் விஷயத்திலும், சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்திலும் இஸ்லாம் சொல்லும் வழி முறைகளை நடை முறைக்குக் கொண்டுவர வேண்டும் என இப் பொதுக் குழு கோரிக்கை வைக்கின்றது.

15. போதை மற்றும் கெசினோ.

அண்மைக் காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. போதைப் பொருள் கடத்தல்களும் தாராளமாக நடைபெற்று வருகின்றது. பொது மக்களுக்கு மத்தியிலும், பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள இந்நிலையில் போதைப் பொருட்கள் அனைத்திற்கும் அரசு தடை விதிப்பதுடன் போதைப் பொருள் கடத்தில் போன்ற சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கின்றது.

அதே போல் கெசினோ சூதாட்ட மையங்களுக்கு அனுமதியளித்து சூதாட்டத்திற்கும், தீய செயல்களுக்கும் ஆதரவளிக்கும் அனைவரையும் இப்பொதுக் குழு வன்மையாக கண்டிக்கின்றது.

16. மீள் குடியேற்றம்.

யுத்தம் முடிவுக்கு வந்து 4 வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முழுமையாக மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் தான் இன்னும் அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களை அவசரமாக மீள் குடியேற்றம் செய்வதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.

17. காணாமல் போனவர்களுக்கான ஜனாதிபதியின் ஆனைக்குழு.

 யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் விஷயத்தில் விசாரனைகளை நடத்தி, நஷ்ட ஈடு வழங்குவதற்காக ஜனாதிபதி தனியான ஒரு ஆனைக் குழுவை நியமித்துள்ளார். இவ்வானைக் குழுவில் இது வரைக்கும் சுமார் 11000 ம் தமிழர்களும், சுமார் 5000 ம் சிங்களவர்களும் பதிவு செய்துள்ளார்கள். முஸ்லிம்கள் குறைவானவர்களே பதிவு செய்துள்ளார்கள்.

அண்மையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக காணாமல் போனவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

முஸ்லிம் சமுதாயம் இது விடயத்தில் கவனம் செலுத்து காணாமல் போனவர்களை பதிவு செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்வதுடன், காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனை நடத்துவதற்காக தனியான  ஆனைக் குழுவை அமைத்தமைக்காக ஜனாதிபதிக்கு இப்பொதுக் குழு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

18. விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தமை.

தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த “விஸ்வரூபம்” திரைப்படம் முஸ்லிம்களை முழுக்க முழுக்க தீவிரவாதிகளாகவும், உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட திருமறைக் குர்ஆனை தீவிரவாதத்தை போதிக்கும் புத்தகமாகவும் சித்தரித்து கடந்த வருடம் வெளியிடப்பட்டது.

உலகம் முழுவதும் படம் வெளியிடப்பட்ட நாடுகளில் எல்லாம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இது பெரும் பிரச்சினையாகவே மாறியது. இத் திரைப்படத்தின் விபரீதத்தை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிலைமையை விளக்கியவுடன் அரசு உடனடியாக ஒரு மாத காலத்திற்கு திரைபடத்தை வெளியிடுவதை தடை செய்யும் விதமாக இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுடன், திரைப்படத்தின் சில காட்சிகளை நீக்கிய பின்பே மீண்டும் வெளியிடுவதற்கு அனுமதியளித்தது.

முஸ்லிம்களின் மன நிலையை புரிந்து கொண்டு தக்க நேரத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்கு அரசுக்கும் கலை மற்றும் கலாசார அமைச்சுக்கும் இப்பொதுக் குழு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

sltj2sltj

 
 
 
 
 
 

Web Design by Srilanka Muslims Web Team