முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பிப்பு முதல் மர்ஹூம் அஷ்ரபின் மரணம் வரை(சிறப்புக் கட்டுரை) - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பிப்பு முதல் மர்ஹூம் அஷ்ரபின் மரணம் வரை(சிறப்புக் கட்டுரை)

Contributors
author image

DBS Jeyaraj

20.09.2010 ஆம் திகதி வெளியான டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)

 

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகனுமான மொஹமட் ஹூசைன் முஹமட் அஷ்ரப்பின் மறைவின் 10 ஆவது ஆண்டுப் பூர்த்தி செப்டெம்பர் 16, 2010 அன்று ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகர்த்தாவான காத்தான்குடியைச் சேர்ந்த அகமத் லெப்பையுடன் கூட்டாக செப்டெம்பர் 1981 இல் அஷ்ரப், கட்சியை நிறுவினார். ஆனால் 1986 இல் கட்சியின் தலைமைத்துவத்தை உரிய வகையில் பொறுப்பேற்ற பின்னர், எம்.எச்.எம். அஷ்ரப்தான் முஸ்லிம் காங்கிரஸிற்கு புதிய தொலைநோக்கையும், புதிய பாதையையும் கொடுத்தவர் ஆவார்.

 

15 வருடங்களாக அஷ்ரப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் அவரின் இலட்சிய வீறும், சாதிக்கும் ஆற்றலும் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்பல சாதனைகளைக் கண்டது. இவரது வசீகரம், அரசியல் நிலைமைகளை சரியாக கணக்குப் போடும் திறன், அர்ப்பணிப்பு, ஒரு தலைவருக்குரிய உரிய பண்பு ஆகியவற்றின் காரணமாகவே பலகாலமாக புறக்கணிக்கப்பட்டுவந்த கிழக்கு முஸ்லிம்களை, தனித்து இயங்கக் கூடிய ஒரு சக்தியாக உருவாக்கவும், வரலாற்றில் குறிப்பிடப்படும் மோஸஸ் அல்லது மூஸாநபி போன்று, வனாந்திரத்தினூடாக ஓர் இலட்சிய தேசத்தை நோக்கி இவர்களை இட்டுச் செல்லவும் முடிந்தது.

 

வாழ்வின் உச்சக் கட்டத்தில், இலங்கையின் அரசியல் வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த இந்த நட்சத்திரத்தை மர்மமான ஒரு விமான வெடிப்பு அழித்தொழித்ததனால், மோஸஸை போலவே அஷ்ரப்பிற்கும் வாக்களிக்கப்பட்ட தேசத்தை சென்றடைய விதி இருக்கவில்லை. மரணிக்கும் வரையிலும், இவர் வடக்கு- கிழக்கு முஸ்லிம்களின் ஒரேயொரு தேசியத் தலைவராக இருந்தார்.

 

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியில் உரக்கந்த மலைத்தொடர்மேல் இலங்கை விமானப்படையின் எம்.ஐ- 17 ரக ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகிய துன்ப நிகழ்வில் இந்த துடிப்புமிக்க தலைவர் மரணமானார். இவருடன், விமான ஊழியர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தனிப்பட்ட ஊழியர்கள், அரசியல் ஆதரவாளர்கள் என 14 பேர் கொல்லப்பட்டனர்.

 

விமான வெடிப்பு, விபத்தா அல்லது நாச வேலையா என ஆராய புலனாய்வுகள் தொடக்கப்பட்டன. அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் சதி வேலைகள் பற்றி பலவிதமான கருத்துகள் அடிப்பட்டன. புலனாய்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. புலனாய்வின் முடிவு எப்படி இருந்தாலும், அஷ்ரப்பின் மரணம் இதுவரை நிரப்பப்படாத வெற்றிடத்தை முஸ்லிம் அரசியலில் உருவாக்கிவிட்டது.

 

பயனுக்கு வராதிருந்த சக்தி

 

எம்.எச்.எம். அஷ்ரப், குறிப்பாக முஸ்லிம்களின் முன்னெடுப்புமிக்க தலைவராகவும் பொதுவாக இந்த நாட்டின் தலைவராகவும் இருந்தார். அவர் பல விதத்திலும் தொலைநோக்கில் சிந்திப்பவராக இருந்துள்ளார். அவர், தனது சமூகத்தில் காணப்பட்ட பயனுக்கு கொண்டுவரப்படாத அரசியல் வலுவை கண்டுகொண்டு, தனது மக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் வகையில், அவர்கள் குறைகள் நிவர்த்திக்கப்படும் வகையில் மக்களை வலுப்படுத்துவதற்கான ஒரு பாதையில் செல்ல முயன்றார். நாட்டில் காணப்பட்ட மோதல் ‘சிங்களவருக்கும் தமிழருக்குமிடையிலானது’ என எளிமையாக கருதப்பட்டபோது அஷ்ரபின் முயற்சிகள் முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளை முதன்மைப்படுத்தின.

 

அஷ்ரப், முஸ்லிம்களின் நோக்கங்களை வினைத்திறனுடனும் பேச்சுத்திறனுடனும் பரிந்துரை செய்தமையினால் தீர்க்க முடியாதது போன்று காணப்பட்ட இன நெருக்கடி, தமிழ் – சிங்களம் என்ற இருப்பக்க பிரச்சினை அல்ல, இது முஸ்லிம்களையும் அடக்கிய முப்பக்க பிரச்சினை என்ற விழிப்புணர்வு பொதுவில் தோன்றக் காரணமாயிற்று.

 

சோனகர் என்றும் அழைக்கப்படும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு சிறப்பான இனத்துவ அடையாளம் உண்டு. சனத்தொகையில் 08 சதவீதமான இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், சிங்களவர்கள் பெரும்பான்மையாகவுள்ள ஏழு மாகாணங்களிலும் பரந்து காணப்படுகின்றனர். மீதமானோர் தமிழர் பெரும்பான்மையாகவுள்ள வடக்கு, கிழக்கில் வாழ்கின்றனர்.

 

சிங்கள மக்களிடையே வாழும் பகுதியினர் உட்பட இச்சமுதாயத்தின் மிகப்பெரும்பாலோர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர். இவர்கள் தமிழ் பேசுவோர் என்னும் வகுதிக்குள்ளேயே அடக்கப்படுகின்றனர். அநேகமான முஸ்லிம் பாடசாலைகள் தமிழ்மொழி மூல பாடசாலைகளாகவே காணப்படுகின்றன. இந்த சமூகத்திலிருந்து பல தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், சித்திரக் கலைஞர்கள் ஆகியோர் தோன்றிப் பிரபலமடைந்துள்ளனர்.

 

இப்படியெல்லாம் இருந்தப்போதும், இந்த சமூகம் தன்னை ‘ தமிழ்’ எனக் கருதாது ‘முஸ்லிம்’ என்றே கருதுகிறது. முஸ்லிம் என்ற அடையாளம், இன-மொழி வழிப்பட்டதாகவன்றி இன- சமய வழிப்பட்டதாக உள்ளது. இந்த சமூக கலாசார யதார்த்தம், அண்மைக்காலத்தில் கூரிய அரசியல் பரிமாணங்களை பெற்றுள்ளது.

 

சிதறிவாழும் குடித்தொகையாக இருப்பினும் இலங்கை முஸ்லிம்கள், ஆகக் கூடியளவில் கிழக்கு மாகாணத்தில்தான் அடர்ந்து வாழ்கின்றனர்.

 

இங்கு 1981 இல் நடந்த குடித்தொகை கணக்கெடுப்பின்படி (கடைசியாக நடந்த உத்தியோக பூர்வ கணக்கெடுக்கின்படி) சனத்தொகையில் 42 சதவீதம் தமிழ், 33 சதவீதம் முஸ்லிம், 25 சதவீதம் சிங்களம் ஆக காணப்பட்டது. தற்போது உத்தியோகப்பற்றற்ற உத்தேச மதிப்பீட்டின்படி சிங்களக் கூறானது கூடியும் தமிழ்க் கூறானது குறைந்தும், முஸ்லிம் எண்ணிக்கை மாறாமலும் இருக்கின்றது என கூறப்படுகின்றது.

 

‘எழுவான்கரை’ ( சூரியன் உதிக்கும் கரை) என அழைக்கப்படும் கடற்கரையோரமாக அமைந்த தமிழ் கிராமங்களுக்கு இடையில் மட்டக்களப்பு – அம்பாறை முஸ்லிம்களில் பலர் பரந்து காணப்படுகின்றனர். மட்டக்களப்பு வாவியின் மேற்கேயுள்ள, படுவான்கரை ( சூரியன் மறையும் கரை) என அழைக்கப்படும் உட்பிரதேசம் தமிழர் ஆதிக்கம் பெற்றது.

 

குறிச்சிகள்

 

கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர், விவசாயிகள் ஆகவும், மீனவர்களாகவும் உள்ளனர். கணிசமான முஸ்லிம் வாக்குகள் கொண்ட, முஸ்லிம் குறிச்சிகளை அடக்கிய கிழக்கு மாகாணம், ஒவ்வொரு தேர்தலிலும், இந்த மாகாணத்திலிருந்து நான்கு தொடக்கம் ஆறு வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு உதவியுள்ளது. கிழக்கு மாகாணப் பிரதேசம் சில காலங்களில் மொத்த முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் 50 சதவீததிற்கு மேல் வைத்திருந்தது.

 

இந்த சாதகமான நிலைமையிலும் இந்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த தலைமை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கைகளில் இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமத்து முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில், ஒப்பீட்டளவில் முன்னேறிய, மத்திய, மேல், தெற்கு மாகாண முஸ்லிம் தலைவர்கள் காணப்பட்டனர். இருந்தாலும் அஷ்ரப்பின் வருகையின் பின் இந்த நிலைமை மாறியது.

 

அஷ்ரப், 1948 ஒக்டோபர் 23 இல் அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை என்னும் கிராமத்தில் பிறந்தார். அதே பிரதேசத்தில் கல்முனை நகரில் இவர் வளர்ந்தார். கல்முனையில் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட அஷ்ரப் சட்டக் கல்லூக்குத் தெரிவாகி முதலாம் சிறப்பு வகுப்பில் சித்தியடைந்தார்.

 

பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து சட்டமாணி, சட்ட முதுமாணிப் பட்டங்களைக் பெற்றுக் கொண்டார். இவர் 1995 இல் அமைச்சராக இருந்த போதே சட்டமுதுமாணிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார். 1997 இல் ஜனாதிபதி சட்டத்தரணியானார்.

 

பிற்காலத்தில், விட்டுக்கொடுக்காத முஸ்லிம் தேசியவாதியாக வந்தபோதும் அஷ்ரப் எப்போதும் தமிழ் மொழியோடும் அதன் கலாசாரத்தோடும் நெருக்கமாக இருந்தார். கல்முனை வெஸ்லி கல்லூரியில் படித்த காலத்திலும், சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த போதும் தமிழர்களுடன் நெருங்கிப் பழகினார். அரசியலின் விநோத நடவடிக்கைகளுக்கு அப்பால், தனது வகுப்புத் தோழர்களோடும், சகபாடிகளோடும் தனிப்பட்ட நட்புறவை பேணிக்கொண்டார். இவர் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் பரந்த அறிவுடையவராக இருந்தார்.

 

அஷ்ரப் தமிழில் கிளர்ச்சியூட்டும் பேச்சாளராக இருந்தார். இதற்கும் மேல், தமிழை தன் சிந்தனையின் வாகனமாக பயன்படுத்திய ஒரு கவிஞராகவும் இருந்தார். இவர் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு இவரது முகஸ்துதியாளர்கள் காட்ட முயன்றது போல அதி சிறப்பானதாக இல்லையென்றாலும் பாராட்டத்தக்கது. எப்படியாயினும் தற்போதைய தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரே கவிதை வாசிப்போராக உள்ளபோது அவர்கள் கவிதை இயற்றுவதைப் பற்றி பேசவே தேவையில்லை.

 

செல்வநாயகம்

 

அநேகமான கிழக்கு மாகாண முஸ்லிம் தலைவர்கள் போலவே, சமஷ்டிக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான, தமிழ் தந்தையாக உருவகிக்கப்பட்ட செல்வநாயகத்தை மெச்சுபவராகவே அஷ்ரப் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். வடக்கு கிழக்கு பாரம்பரிய தமிழ் தாயகத்தின் தமிழ் பேசும் மக்களுக்கான சமஷ்டி என்ற இலட்சியத்தாலும், செல்வநாயகத்தாலும் இவர் பெரிதும் வசீகரிக்கப்பட்டார்.

 

குறிப்பாக, சிங்களப் பொலிஸாரினால் புத்தளம் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பிரச்சினையை செல்வநாயகம் கிளப்பினார் என்பதை அஷ்ரப் வியந்து பாராட்டினார். புத்தளம், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான நய்னாமரிக்கார் உட்பட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விஷயத்தில் மௌனம் சாதித்தனர்.

 

அஷ்ரப் சமஷ்டிக் கட்சியின் மேடைகளில் பேசினார். புதிதாக அமைக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையை ஏகமனதாக நிறைவேற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை மாநாட்டில் அஷ்ரப் 1976 இல் கலந்து கொண்டார்.

 

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் மேடைகளில் தமிழ் ஈழத்திற்காக வேகத்துடன் பிரசாரம் செய்து கொண்டிந்தபோது 1977 இல் நான் முதன் முதலாக அஷ்ரப்பை சந்தித்தேன். இவர், முஸ்லிம் ஐக்கிய முன்னணியை உருவாக்கி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டார். கல்முனை, சம்மாந்துறை, புத்தளம், மூதூர் ஆகிய இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் ‘சூரியன்’ சின்னத்தில் தேர்தலில் இறக்கப்பட்டனர். சேருவலையில் போட்டியிட ஆயத்தப்படுத்தப்பட்டவர் கடைசி நேரத்தில் மனுவை தாக்கல் செய்யத்தவறிவிட்டார்.

 

இதில் அஷ்ரப் தான் போட்டியிடவில்லை. ஆனால் உற்சாகமாக பிரசாரம் செய்தார். இந்த நேரத்தில்தான் ‘அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழத்தை அமைக்க முடியாமல் போனால், தம்பி அஷ்ரப் அதை செய்வான்’ என பகிரங்கமாக அஷ்ரப் அறிவித்தார். அமிர்தலிங்கம் தமிழ் ஈழ இலட்சியத்தை கைவிட்டாலும் அஷ்ரப் அதற்காக தொடர்ந்து பாடுபடுவான் என்ற டம்பப் பேச்சு அஷ்ரபின் உரையின் உச்சக் கட்டமாக அமைந்தது.

 

தமிழ் ஈழம் மீதான அஷ்ரப்பின் விருப்பத்துக்கு மாறாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களை நிராகரித்தனர். இது அஷ்ரப்பிற்கு ஒரு விடயத்தை தெளிவாக்கியது. அஷ்ரபினுடைய தமிழ் – முஸ்லிம் அரசியல் இலட்சியத்தை பகிரும் விருப்பத்துக்கு அப்பால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வேறு அபிலாஷைகளை கொண்டிருந்தனர் என்பதை தேர்தல் முடிவு எடுத்துக் காட்டியது.

 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் அமோக வெற்றி பெற்றபோது, இந்த கட்சிப்பட்டியலில் போட்டியிட்ட முஸ்லிம்கள் எவரும் வெற்றி பெறவில்லை.

 

கசந்த உறவு

 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் அஷ்ரபின் உறவு படிப்படியாக நலியத் தொடங்கியது. 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, மன்னாரிலும், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழர்களை மட்டும் தனது பட்டியலில் போட்டியிட வைத்தது. அஷ்ரப் முஸ்லிம்களையும் சேர்க்க விரும்பினார். ஆனால், அது மறுத்துரைக்கப்பட்டது. இது, ஏற்கெனவே மனத்தாங்கலுடன் இருந்த அஷ்ரபை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து முற்றாக விலகி, தனிவழி செல்ல வைத்தது.

 

இருப்பினும் அவர் சிங்கள ஆதிக்க தேசிய கட்சியொன்றில் சேரவில்லை. இதில் அவர் பழைய முஸ்லிம் தலைவர்களிடமிருந்து வேறுபட்டு நின்றார். பழைய முஸ்லிம் தலைவர்கள், சமஷ்டிக் கட்சி மூலம் அரசியலில் இடம் பிடித்துவிட்டு பின்னர் சந்தோஷமாக கட்சி தாவினர். தமிழ் அரசியலிலிருந்தும் சிங்கள அரசியலிலிருந்தும் விடுபட்டு ஒரு சுயாதீனமான பாதையை தெரிய வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு உண்டு என அஷ்ரப் உணர்ந்து கொண்டார். இதனால் அவர் காத்தான்குடி அஹமத்துடன் கூட்டுச் சேர்ந்தார். பின்னர் இருவருமாக முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தனர்.

 

அஷ்ரப் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்தபின்னர், முஸ்லிம் ஐக்கிய முன்னணி (MUF) சிதைவடையத் தொடங்கியது.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் செம்டம்பர் 21, 1981 இல் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் பிரச்சினைகளைவிட அதிகமாக சமூக கலாசார விடயங்களில் அக்கறைப்பட்ட, ஏறத்தாழ ஒரு கிழக்கு மாகாண அமைப்பாகவே காணப்பட்டது.

 

1983 இல் இடம்பெற்ற தமிழருக்கு எதிரான படுகொலைக் கலவரம் அதைத் தொடர்ந்து உருவான ஆயுதம் தாங்கிய தீவிரவாதத்தின் பெருவளர்ச்சி என்பன அரசியல் வானத்தில் தமிழ் ஈழம் சாத்தியமே என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள், ‘தமிழ்’ தேசத்தில் தமது எதிர்காலம் பற்றி கிலேசமடைந்தனர்.

 

அதேநேரம், இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவு புதுப்பிக்கப்பட்டமை தொடர்பில் முஸ்லிம்களின் எதிர்ப்பை ஜே.ஆர். ஜயவர்த்தன அலட்சியமாக தட்டிக் கழித்த விதம் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வை இரணமாக்கியது. இந்த பிரச்சினைiயில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குப்படுத்துவதில் அஷரப் மூலகர்த்தாவாக இருந்தார். இருப்பினும் அப்போது காணப்பட்ட உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதப் போக்குகளில் அக்கறை காண்பிக்காதவர்களாக இலங்கை முஸ்லிம்கள் இருந்தனர்.

 

கிழக்கில் முஸ்லிம் சமுதாயம், கல்விகற்ற, துடிப்புமிக்க ஒரு புதிய தலைமுறையை தோற்றுவித்தது. இவை எல்லாம் சேர்ந்து தேசிய அளவில் அஷ்ரபும், அவரது அரசியல் கொள்கையும் இடம் பிடிக்க கூடிய ஒரு சூழலை தோற்றுவித்தது. தமிழ் ஆயுதப் போராட்டம், முஸ்லிம் அரசியலில் ஒரு வகையான அரசியலில் அவசரத்தை உருவாகியது.

 

வன்முறை

 

அரச,தமிழ் ஆயுத குழுக்களின் கையாட்களால், தூண்டப்பட்டு கல்முனை காரைதீவு பகுதிகளில் 1985 இல் இடம்பெற்ற தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலான வன்முறை ஊக்கியாக செயற்பட்டது.

 

1985 கல்முனை- காரைத்தீவு, தமிழ் – முஸ்லிம் கலவரங்கள் அஷ்ரபை நேரடியாகப் பாதித்தன. தமிழ் தீவிரவாதிகளினால் வரக் கூடிய கெடுதியை கருத்திற்கொண்டு அஷ்ரப் கொழும்புக்கு தப்பிச் சென்றார்.

 

அஷ்ரப் தான் கல்முனையிலிருந்து, கொழும்புக்கு தப்பியோடியதை, புனித நபி அவர்கள், மதினாவிலிருந்து மெக்காவுக்கு சென்ற ‘ஹிஜ்ரா’வுடன் ஒப்பிட்டு எதிர்ப்புகளை தோற்றுவித்த ஒரு கருத்தை கூறியிருந்தார். இது பல சூடான மறுப்புரைகளை தோற்றுவித்தது. புனித நபி அவர்கள், தான் வெளியேற முன்னர், தனது ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பான பயண ஒழுங்கை செய்திருந்தார் எனவும், மாறாக அஷ்ரப் தனது ஆதரவாளர்களை கல்முனையில் விட்டுவிட்டு சென்றார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

 

‘அரசியல் அடைக்கலம்’ தேடி அஷ்ரப் கொழும்புக்கு வந்தமை, இவரது வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. இவருக்கு பிரபல சட்டத்தரணியான பாயிஸ் முஸ்தபா அடங்கலாக அக்கறை கொண்ட முஸ்லிம்கள் உதவி வழங்கினர். முஸ்தபாவின் ஆலோசனைக் கூடத்தில் தான் ரவூப் ஹக்கீம் அஷ்ரப்புடன் நெருங்கிப் பழகி அவரின் பக்திமிக்க சீடாராகினார்.

 

தலைநகரில் அவரது அரசியல் எல்லை, கிழக்குக்கும் அப்பால் விரிந்து சென்றது. அவர் பரந்து பட்ட முஸ்லிம் மக்கள், தமது மேட்டுக்குடி தலைவர்களையிட்டு விரக்தியுற்றிருந்ததை அறிந்து கொண்டார். முஸ்லிம் சமுதாயத்திற்கு, தனது அடையாளத்தை உறுதியாகவும் தெளிவாகவும் நிலைநாட்டவுள்ள தேவையையும் அதற்கான அவர்கள் ஏக்கத்தையும் அஷ்ரப் இனங்கண்டார்.

 

ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றிலிருந்த முஸ்லிம் தலைவர்களையிட்டு அஷ்ரப் வெறுப்புற்றிருந்தார். இவர்கள் முஸ்லிம்களின் மோசமான நிலை பற்றிய உண்மையான அக்கறையின்றி, தமது சிங்கள எஜமானர்களுக்கு எடுபிடியாக வேலை செய்பவர்களாக இருந்தனர் என அஷ்ரப் உணர்ந்து கொண்டார். அதிகாரம் மீதான அவாவும், பதவி வழி வரும் சலுகை மீதான கவர்ச்சியுமே இதற்கான காரணம் என அஷ்ரப் நினைத்தார். ஒரு சுயாதீனமான குரல் அவசியமாக காணப்பட்டது. இதற்கு முஸ்லிம்களின் உறுதியான ஒற்றுமை தேவையாக இருந்தது.

 

கொழும்பில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திய பின் அஷ்ரப், முஸ்லிம் காங்கிரசை மீட்டெடுத்து புனரமைப்புச் செய்தார். 1986 இல் புஞ்சிபொரளையில் நாடளாவிய கட்சி மாநாடொன்றை கூட்டினார். அதில், அஹமத் லெப்பையை கௌரவமாக விலக்கிவிட்டு கட்சித் தலைமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

தீர்க்கமான முடிவு

 

முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் முக்கியமான இந்த நிகழ்வை நேரில் கண்டவன் நான். இந்த மாநாட்டுக்கு நான் பத்திரிகையாளன் என்ற வகையில் காலமாகிவிட்ட எனது நண்பரான வீரகேசரி, எம்.பி.எம். அஸ்ஹருடன் சென்றிருந்தேன். இவர் பின்னாளில் முஸ்லிம் வாரந்திரியான நவமணியின் ஆசிரியராக இருந்தவர். முஸ்லிம் போராளர்கள், இப்போதும் தொடரும் நீண்ட பயணம் தொடர்பில் தமது தீர்க்கமான அடியை எடுத்துவைத்த அந்தப் பொழுதில் சபை மந்திரத்தால் கட்டுண்டிருந்தது.

 

1986 – 1988 காலப்பகுதியில் நான் அஷ்ரப்புடன், நெருங்கிய தொடர்பிலிருந்தேன். அக்காலத்தில் தனது மக்களுக்கான இலட்சியங்களையும், நோக்கங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்த அஷ்ரப்பை கூர்ந்து அவதானிக்க என்னால் முடிந்தது. அப்போது அவரது இலட்சியங்களில் சில எட்ட முடியாதவையாக தெரிந்தன. முஸ்லிம்கள், சிங்கள, தமிழ் மக்களுக்கு சரிநிகரான, சமமான, தனியான இனம் என அங்கீகரிக்கப்பட்ட வேண்டும் என அஷ்ரப் விரும்பினார்.

 

நாட்டில் பரந்து வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அவர்களுக்கென ஒரு தமக்கேயுரித்தான, சுயாதீனமான அரசியல் கட்சி தேவையாக இருந்தது. அந்த இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிரப்ப வேண்டியிருந்தது.

 

சிங்கள, தமிழ் அரசியல் மேலாதிக்கத்திலிருந்து விடுபட்டதாக அந்தக் கட்சி இருக்க வேண்டியிருந்தது. அவர் இரண்டையுமே ‘ சாத்தான்கள்’ என அப்போது கூறியிருந்தார். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இந்த வகையில் கூடிய பங்காற்ற வேண்டியிருந்தது. இவ்வாறு செய்வதனால்தான் இந்த புறக்கணிக்கப்பட்ட மக்கள் இலங்கையில் தமது உரிய இடத்தை பெற வேண்டியிருந்தது.

 

பாண்டிச்சேரி மாதிரியில் முஸ்லிம்களுக்கென புவியியல் ரீதியில், தொடர்ச்சியில்லாத வடக்கு – கிழக்கு சபையொன்றை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அஷ்ரப் அறிமுகம் செய்தார். அப்போது அவரது நோக்கம், வடக்கு, கிழக்கில் உள்ள சகல, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள உதவி அரசாங்க பிரிவுகள் எல்லாவற்றையும் இணைத்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடியதாக மாகாண சபை ஒன்றை அமைப்பதாகும்.

 

முஸ்லிம் காங்கிரஸை அகில இலங்கைக் கட்சியாக மாற்றுவதற்காக, அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களை மீளமைத்து யாப்பை திருத்தி எழுதினார். 1988, பெப்ரவரி 11 இல் தேர்தல் ஆணையாளரினால் கட்சி அங்கீகரிக்கப்பட்டு ‘மரம்’ என்ற சின்னம் வழங்கப்பட்டது.

 

அஷ்ரப் தலைமையிலான ‘புதிய’ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988 இல் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டது. இது வடக்கு – கிழக்கில் 17 இடங்களையும் மேற்கு, வட மேற்கு, மத்திய, தென் மாகாணங்களில் 12 இடங்களையும் கைப்பற்றியது. புதிதாக அமைந்த இந்தக் கட்சி மாகாணசபைத் தேர்தலில் மனதில் இடம் பதிக்கத்தக்க வகையில் சாதிக்க விகிதாசாராப் பிரதிநிதித்துவம் உதவிற்று. முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்புள்ள கட்சியாகிற்று.

 

முஸ்லிம்களின் கருத்தை புறக்கணித்தது என கருதிய அவர், ஜுலை 1987 இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை, விரும்பாதபோதும், ஒப்பந்தத்தின் சட்ட ஏற்பாடுகளை ஆதரித்தார். முஸ்லிம் காங்கிரஸ் 1988 இல் நடந்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு அண்ணாமலை வரதராஜ பெருமாளின் தலைமையிலான நிர்வாகத்திற்கு பிரதான எதிர்க்கட்சி ஆகியது.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 1988 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளரான ரணசிங்க பிரேமதாஸவை ஆதரித்தது. 1989 இல் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் தனித்து போட்டியிட்டு 4 இடங்களை பெற்றுக் கொண்டது. அஷ்ரப்பும்; ஏராளமான விருப்புவாக்கை பெற்றுத் தெரிவானர். கட்சி மீது அகில இலங்கை ரீதியான விருப்பு வெளியிடப்பட்டபோதும், பெற்றுக்கொண்ட நான்கு நாடாளுமன்ற அங்கத்தவர்களும் வடக்கு-கிழக்கிலிருந்து வந்தவர்களே என்பதை முஸ்லிம் காங்கிரஸ் கண்டுகொண்டது.

 

குயின் மேக்கர்

 

பிரதிநிதித்துவத்தை உச்சப்படுத்த வேண்டுமாயின் தந்திரமான விட்டுக்கொடுப்புகள் தேவையென்பதையும் பிரதான கட்சிகளோடு தந்திரோபாய கூட்டுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அஷ்ரப் உணர்ந்துகொண்டார்.

 

அஷ்ரப் தான் பெரிதும் மெச்சிய சௌமிய மூர்த்தி தொண்டமானிடமிருந்து சில விடயங்களை கற்றுக்கொண்டு, சந்திரிகா குமாரதுங்கவுடன் தேர்தல் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். தொண்டமானைப் போலவே அஷ்ரப்பின் தந்திரோபாயமும், தேர்தல் உடன்படிக்கைகள் மூலம் தனது மக்களின் பிரதிநிதித்துவத்தை உச்சப்படுத்துவதாகவே இருந்தது.

 

1944 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும், இரண்டு தேசிய பட்டியல் அங்கத்தவர்களையும் பெற்றுக் கொண்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கில் தனது சொந்த சின்னத்திலும், வேறு மாகாணங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி சின்னத்திலும் போட்டியிட்டது.

 

தொங்கு நாடாளுமன்றம் அமைந்த நிலையில் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தை நிறுவுவதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கபூர்வமான முறையில் ‘குயின் மேக்கர்’ பாத்திரத்தை வகித்தது. அஷ்ரப் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து புனர்வாழ்வு அமைச்சராக வந்தார்.

 

ஹிஸ்புல்லாவும், அபூபக்கரும் பிரதியமைச்சர்களாயினர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரவூப் ஹக்கீம் குழுக்களின் தவிசாளரானார்.

 

அஷ்ரப் மந்திரியாக இருந்த காலம் சம்பவங்கள் நிறைந்ததாகவும், பிரச்சினைகளைத் தோற்றுவித்ததாகவும் காணப்பட்டது. தனது அதிகாரத்தினுள் வந்த பல்வேறு துறைமுகங்களிலும் பெருமளவில் முஸ்லிம்களுக்கு வேலை வழங்கியதாக அவர் குற்றஞ் சாட்டப்பட்டார். கொழும்பு, திருகோணமலை, காலி என்பன உதாரணங்களாக காணப்பட்டன. இவ்வாறே புனர்வாழ்வு, அபிவிருத்தி திட்டங்களில், முஸ்லிம் பிரதேசங்களுக்கு முன்னுரிமைக் கொடுத்ததாகவும் இவர் பிழை காணப்பட்டார். ஒலுவில் துறைமுகம் அஷ்ரப்பின் நீண்ட கால விருப்பத்துக்குரிய கனவாக விளங்கியது.

 

சீறும்புயல்

 

அஷ்ரபிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சரான எ.எச்.எம். பௌஸிக்குமிடையே பொறி பறக்கும் தர்க்கம் ஏற்படும். இது அஷ்ரப்பை அடிக்கடி ஆவேசம் கொள்ளவும், இராஜினாமா செய்யப் போவதாக மிரட்டவும் வைக்கும். இது போன்ற பௌசியுடனான ஒரு பிரச்சினையில் அஷ்ரப்பின் இராஜினாமா சந்திரிகாவினால் ஏற்கப்படவில்லை.

 

பொன்னன்வெளிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்று தீகவாபி புனித பிரதேசத்துடன் அது இணைக்கப்பட்டதாக அஷ்ரப் ஒருமுறை குற்றஞ் சாட்டினார். இது தொடர்பில் தன்னுடன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வரும்படி வண. சோம தேரர் சவால் விடுத்தார். சிங்களத்தில் நடந்த விவாதத்தை அஷ்ரப் ஏற்று தர்க்கரீதியாகவும் மறுக்கமுடியாத வகையிலும் விவாதித்தார்.

 

புத்த பகவானை விழித்துக் கூறுவதாக அமைந்த ஒரு தமிழ் கவிதையை அஷரப் எழுதியபோது இன்னொரு பிரச்சினை கிளப்பப்பட்டது. இந்த கவிதைநுட்பம் முன்னரும் பல கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டதுதான். ஆனால் அஷ்ரப் அதே நுட்பத்தை பயன்படுத்தியபோது சூடாக விமர்சிக்கப்பட்டது. அஷ்ரப் விட்டுக்கொடுக்காமல், தன்னை விமர்சித்தவர்களை உறுதியாக நின்று மடக்கினார்.

 

கட்சி விடயங்களை கையாளுவதில் அஷ்ரப் எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டார். அவர் அதிஉயர் தலைவராக இருந்தார். அவர் கட்சிக்குள் விழல் பேச்சுகளை சகித்துக் கொள்வதில்லை. அவர் மரணித்த வேளையில் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்தியிருந்தார். இன்னொருவருக்கு ‘காரணம் காட்டு’ அறிவித்தலை விடுத்திருந்தார்.

 

முஸ்லிம் வெகுஜனங்களின் மீது அஷ்ரப் கொண்டிருந்த வசீகரப் பிடிக்கும் மேலாக, அவரது இசைந்து போகும், விட்டுக்கொடுக்கும் ஆற்றலும் அவரது பலமாக காணப்பட்டது. வடக்கு, கிழக்கு முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்ட, புவியியல் ரீதியாக தொடர்ச்சியற்ற, முஸ்லிம் பெரும்பான்மை மாகாணசபை ஒன்றை உருவாக்க வேண்டுமென்பது முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படையாக கோரிக்கையாக காணப்பட்டது. இந்த விடயத்தில், முன்வைக்கப்பட்டிருந்த வடக்கு-கிழக்கு இணைப்பு ஏற்படும் பட்சத்தில் 17 சதவீதமாக குறையக் கூடிய தற்போதுள்ள 33 சதவீத முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அஷ்ரபின் வாதமாக காணப்பட்டது.

 

புவியியல் ரீதியாக தொடர்ச்சியற்ற மாகாணசபை என்ற கொள்கைக்கு பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமே தூண்டுதலாக இருந்தது. அங்கு பாண்டிச்சேரி, காரைக்கால், யானம், மாகே ஆகிய பிரதேசங்கள், புவியியல் ரீதியாக தொலை தூரங்களில் காணப்பட்ட போதிலும், இவை தனியொரு நிர்வாக அலகின் கீழ் அமைந்திருந்தன. இவை முன்னர் பிரான்ஸ் தேசத்தின் காலனிகளாக இருந்து பொதுவான வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்டிருந்தமையால், அவை சுதந்திர இந்தியாவில் ஓரலகாக நிர்வகிக்கப்பட்டன.

 

பிரதேச ரீதியாக தொடர்ச்சியற்ற அலகுக்கான கோரிக்கை வெல்லப்பட முடியாதது என அவர் கண்டப்போது, சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய தொடர்ச்சியுள்ள தேர்தல் பிரிவுகளை உள்ளடக்கிய தென்கிழக்கு மாகாணசபை என்பதை பிரதியீடாக முன்வைத்தார். அவர் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை வடமாகாணத்தோடு இணைப்பதற்கும் விருப்பம் தெரிவித்தார்

 

தேவை ஏற்படின் இதையும் விட்டுக்கொடுக்க அவர் தயாராகவிருந்தார். பதிலாக 10 வருடத்தின் பின், இணைப்பை நீக்குவதற்கான அபிப்பிராய வாக்கெடுப்பு உட்பட முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமிடத்து வடக்கு கிழக்கு இணைப்புக்கும் விருப்பம் தெரிவித்தார்.

 

 

உணர்வோடு ஒன்றித்தல்

 

அம்பாறை மாவட்டத்திலிருந்து, முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட கல்முனை என அழைக்கப்படும் கரையோர மாவட்டம் ஒன்றை பிரித்தெடுக்க அஷ்ரப் விரும்பினார். இந்த கரையோர மாவட்டத்திற்கு போதிய நிலம், நீர்வளங்கள் இல்லாது போகலாம் என அவர் அஞ்சியமையால் அவர் இதில் பின்னர் தயக்கம் காட்டினார்.

 

தனது சமுதாயத்தின் நலன் தொடர்பில் அஷ்ரப் பின்னாளில் தமிழ் தலைவர்களுடன் மோத வேண்டியிருந்தது, இது தவிர்க்க முடியாததே. ஆனால், தற்போதைய கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் போலன்றி இவர், தமிழோடும், தமிழர்களோடும் உணர்வால் ஒன்றியிருந்தார். அவர் தமிழர்களின் மனத்தாங்கலை விளங்கியிருந்தார். அவர்களின் அபிலாஷைகளை ஏற்றிருந்தார்.

 

அஷ்ரப், சிங்கள பெரும்பான்மைவாதமே அடிப்படைப் பிரச்சினை எனவும் இதை வெற்றி கொள்ள சிறுபான்மை சமூகங்களிடையிலான புரிந்துணர்வு அவசியம் எனவும் கருதினார். முஸ்லிம்களின் நலனில் உறுதியாக இருந்த போதும், அஷ்ரப் தமிழருடன் சேர்ந்து வேலை செய்ய எப்போதும் தயாராக இருந்தார். இந்த வகையில் அஷ்ரபினுடைய அலைநீளத்தில் உள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் இல்லையென்றே கூறலாம். அவரது சமூகத்தின் நலன்கள், அவருக்கு மிக முக்கியமானதாக காணப்பட்டபோதும் தமிழர் பிரச்சினைகள், மனத்தாங்கல்கள் தொடர்பிலும் அவர் மிகுந்த அனுதாபம் கொண்டவராக இருந்தார். தமிழர்களின், முஸ்லிம்களின் நலன்கள் நேரடியாக மோதிய வேளைகள் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் தமிழர்கள் தமது நியாயமான அபிலாஷைகளை அடைந்து கொள்ளும் வகையில் அவர் உதவ முயன்றார்.

 

இந்திய வம்சாவளியை பிரதிநிதித்துவம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் ஒரு ஒத்துப்போகும் உறவொன்றை ஏற்படுத்தும் முகமாக ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருந்தார்.

 

ஒரு குறுகிய இன நிலைப்பாட்டிலிருந்து தேசிய தலைவராக பரிணமித்தமை அஷ்ரபின் அதி சிறப்பாகும். 2000 ஆம் ஆண்டு அளவில் அஷ்ரபின் பார்வை விசாலமாகியது. அவர் தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபித்தார். இப்போது அஷ்ரப் முஸ்லிம் இனத்துவத்துக்கு அப்பால் சிந்திக்க தயாராகி ஏனைய சமுதாயங்களையும் இணைத்து செல்ல முயன்றார். அவரிடம் 2012 அளவில் நிரந்தர, சமாதானத்தை சாதிக்கும் திட்டமொன்று இருந்தது. ஒரு காலத்தில் தமிழீழவாதியாக இருந்து, பின்னர் முஸ்லிம்களுக்கென அவர்களுக்கே உரித்தான தனிக்கட்சியை தொடக்கியவர் தேசியவாதியாக முகிழ்த்த, பரிணாம நிலையை எய்தியிருந்தார்.

 

ஜாம்பவான்

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தலைமைக் கப்பலாக இருக்கும் அதேவேளையில் தேசிய ஐக்கிய முன்னணி விசாலமானதாக எல்லா இனங்களையும் இணைத்து செல்வதாக இருந்தது. அஷ்ரப் தனது இலட்சியத்தை அடையும்வரை வாழ்ந்திருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் எதிர்காலம் எப்படி இருக்கக் கூடும் என்பது யாருக்கும் தெரியாதது. அஷ்ரப், 2000, ஒக்டோபர் 10, இல் நடக்கவிருந்த தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் துரதிர்ஷ்ட வசமாக மரணமடைந்தார். முக்கிய கட்டத்தில் அஷ்ரப்பின் வாழ்வு அணைந்துப் போனமை, அப்போது அமைக்கப்பட்டிருந்த பரந்த தேர்தல் கூட்டமைப்பு முன்வைத்திருந்த பல்வகைத் திட்டங்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

 

அஷ்ரப் தற்போது எம்மோடு இல்லாதிருக்கலாம், ஆனால், அவரது ஆன்மா, இப்போதும் கிழக்கு முஸ்லிம் அரசியல் சிந்தனையில் வியாபித்துள்ளது. இவர் கிழக்கு முஸ்லிம் அரசியலில் தனியொரு மிகப் பிரபலமான ஜாம்பவானாக இருந்தார். மரணத்திலும் முஸ்லிம் வெகுஜனங்கள் மீதான மாயப் பிடி விரவியுள்ளது.

 

அஷ்ரப் நினைவுக் கூட்டங்களில் நிறையப் பேர் கலந்துகொண்டனர். தமிழ் ஊடகங்கள் அநேகமாக நேர்மையானதாக மனமார்ந்ததாக காணப்பட்ட புகழாஞ்சலிகளை வெளியிட்டன. அவரது மறைவு ஆழமாக உணரப்படுகிறது. அஷ்ரபின் பின்னரான முஸ்லிம் அரசியலின் பரிதாப நிலை, அவரது இழப்பினால் விளைந்த துன்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவர் உருவாக்கிய கட்சி பல துண்டுகளாகியுள்ளது.

 

அவரது விதவையும், முன்னைய தளபதிகளும் அவரது முடியைச் சூட மோதிக் கொண்டனர். அவர் விட்டுச் சென்ற அரசியல் முதுசம் துண்டாடப்பட்டது. அஷ்ரபின் இடத்துக்கு வந்த ரவூப் ஹக்கீமும், அவரது விதவை பேரியலும் கட்சியை பிளவுபடுத்தினர். பேரியல் தேசிய ஐக்கிய கூட்டமைப்பை பொறுப்பேற்றார்.

 

அதாவுல்லாஇ மற்றும் அன்வர், இஸ்மாயில் போன்றோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசிய முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்ததோடு பிளவுபடல் மேலும் தொடர்ந்தது. ரிஷாத் பதியுதீன், அமீர் அலி மற்றும் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தபோது பிளவுபடல் மேலும் தொடர்ந்தது.

 

அவரது இலட்சியங்களையும்இநோக்கங்களையும் தொடர்ந்து பேணவும் கட்சியை காப்பாற்றவும் ரவூப் ஹக்கீம் உறுதியாக போராடி வருகிறார். காலத்துக்குக் காலம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவியினதும் அரசாங்கக் கவனிப்பினதும் கவர்ச்சி ஆசை காட்டுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித் தனியாக கட்சி தாவத் தயாரான போது, கட்சியின் ஒற்றுமை சிதறிப் போவதை தடுக்கும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2006 இல் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டது.

 

இந்த வருடமும் பழைய காட்சிகள் மீண்டும் தெரிந்தன. கட்சி பிளவுபடுதலையும், கட்சிமாறுதலையும் தடுக்க 18 ஆவது யாப்புத் திருத்தம் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, எதிர் வரிசையிலிருந்தவாறே அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நவம்பரில் அரசாங்கத்துடன் ஒழுங்கு முறையாக இணையலாம் என ஊகங்கள் அடிபடுகின்றன.

 

ஒவ்வொரு தேர்தலின் பின்னும் கட்சி பிளவுண்டு சிறுத்துச் சிறுத்துப் போவதால், முஸ்லிம்களை ஒரே கொடியின் கீழ் அணிதிரட்டும் அஷ்ரபின் உயர் இலட்சியம் சிதைந்து போவதை நாம் காண்கிறோம்.

 

முஸ்லிம்கள், தமது சுயாதீனத்தை பேணியவாறு தமிழ், சிங்கள அரசியலிருந்து சமதூரத்தை பேண வேண்டும் என்னும் இலட்சியமும் பின்னடைவைக் கண்டுள்ளது.

 

மாறிமாறி வரும் அரசாங்கங்கள் வழங்க முன்வரும் கவனிப்புகளும் சலுகைகளும், பல முன்னாள் முஸ்லிம் தலைவர்களை தமது ‘சுயாதீனத்தை’ கைவிட்டுப் போகச் செய்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாற்று மேடையில் வளர்க்கப்பட்ட இந்த அரசியல்வாதிகள் அநேகமானோரை,அமைச்சர் பதவி, பிரதியமைச்சர் பதவி, அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர், பணிப்பாளர் பதவிகள், வெளிநாட்டில் தூதுவர் பதவி என்பன அமுக்கிவிடுகின்றன.

 

இவர்களை தெரிவுசெய்த முஸ்லிம் வாக்காளர்களின் நலன்கள், விருப்பங்கள் என்பன மனவுறுத்தலேதும் இல்லாமலும் அலட்சியமாகவும் கைவிடப்படுகின்றன. கொள்கைப்பிடிப்போடு கூடிய அரசியலை எங்கும் காணமுடியவில்லை.

 

இந்த துன்பகரமான பின்னணியில், இருள் கௌவிய பாலைவனத்தில் தனது மக்களுக்கான ஒரு பசுந்தரையை தேடிய அஷ்ரபின் இலட்சியம் கானல் நீராகி வருகின்றது.

 

இப்படியான நிலைமையில், அஷ்ரபின் மரணத்தின் 10 ஆண்டு நிறைவாகும். இந்த வேளையில் கட்சியின் விசுவாசிகளும் முஸ்லிம் சமுதாயத்தின் நலனின் அக்கறை கொண்டோரும் குறைந்தபட்சம் மன ஆறுதலுக்காகவேனும் எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவில் ஆழ்ந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

 

(DBS Jeyaraj can be reached at djeyaraj2005@yahoo.comdjeyaraj2005@yahoo.com )

 

(தமிழில் நா. கிருஷ்ணராசா)

 

நன்றி மூத்த ஊடகவியலாளர்- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Web Design by Srilanka Muslims Web Team