முஸ்லிம் காங்கிரஸை கட்சியாக பதிய 10 இலட்சம் வழங்கிய வபா பாறுக்குடனான விசேட நேர்காணல் » Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸை கட்சியாக பதிய 10 இலட்சம் வழங்கிய வபா பாறுக்குடனான விசேட நேர்காணல்

vafa farook

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குத்தலைமையின் கையில் ஒப்படைக்கப்படவேண்டும் என்ற கோசத்தை மிக ஆக்ரோஷமாக ‘கிழக்கின் எழுச்சி’ என்ற தொனியில் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசியப்பொருலாளர் அல்ஹாஜ் வபா பாறுக் அவர்களுடனான நேர்காணல்!!! இவர் தான் முஸ்லிம் காங்கிரஸை கட்சியாக பதிய தனது சொந்த பணமான 10 இலட்சம் ருபாவை வழங்கியவர்!

அரசியன்: கிழக்கின் எழுச்சியென வர்ணிக்கப்படும் முஸ்லிம் காங்கிரஸை மீட்கும் உங்கள் தலைமையிலான முன்னெடுப்பை பற்றி சற்று விபரிப்பீர்களா?

வபா பாறுக்: ஆண்டாண்டு காலமாக கிழக்கு முஸ்லிம்கள் மீது தி்ணிக்கப்பட்ட தெற்கு மற்றும் பேரினச்சிந்தனைத்தலைமைகளிடமிருந்து மீட்டெடுப்பதே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் அடிப்படை காரணங்களில் ஒன்று.

இறை முடிவின் படி ஸ்தாபத்தலைவரின் எதிர்பாராத மரணத்தால் ஏற்ப்பட்ட தலைமைத்துவ இடைவெளி மீண்டும் வெறுக்கப்பட்ட தெற்குச்சிந்தனையை காங்கிரஸின் தலைமைக்கு தேர்ந்து கொண்ட துரதிஷ்டம் நடந்தேறிவிட்டது.

இதற்கு பல பின்னனிக்காரணங்கள் இருந்தாலும் பிரதானமான காரணங்கள் இரண்டு
ஒன்று- தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின் அவரது மனைவி பேரியலை மு.கா. வின் தலைவராக்க சிலர் மேற்க்கொண்ட எத்தனிப்பை முறியடிக்கும் முயற்ச்சியாக தலைமைத்துவத்தில் ஹகீமை அமர்த்தும் முனைப்பு ஒரு மாற்று நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது.

பெண் தலைமையை அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத மு. கா. போராளிகளுக்கு ஹக்கீமை ஏற்றுக்கொள்வது காலத்திணிப்பாகிவிட்டது.

இரண்டாவது: தலைவர் அஷ்ரப் மரணமாகும் வேளையில் தலைமைத்துவத்துக்கு தகுதியான, உரிமை கோரக்கூடிய கிழக்கைச்சேர்ந்த எவரும் கட்சிக்குள் இல்லாமலிருந்ததும் ஹகீமுக்கு மேலும் சாதகமாகிவிட்டது. தலைமைத்துவத்தை கோருவதற்கு சகல தகுதிகளையும் பெற்றிருந்த கிழக்கை பூர்வீகமாய்க் கொண்ட அதாவுல்லாஹ்வும் பேரியலை நிராகரிப்பதற்காகவே ஹக்கீமை ஏற்றுக்கொண்டது ஹகீமின் தலைமையை கண்மூடித்தனமாக உறுதிப்படுத்திவிட்டது

அரசியன்: அந்தக்கால கட்டத்தில் ஹகீமின் தலைமைத்துவ தேர்வை தாங்கள் எதிர்த்தீர்களா?

வபா பாறுக்: எந்தக்காலத்திலும் கணக்கிலெடுக்கப்படாத கோசங்களை முன் வைப்பதிலிருந்து நான் தவிர்ந்தே வந்துள்ளேன். அக்காலத்தில் நான் ஹக்கீமின் தேர்வுக்கு எதிராய் குரலெழுப்பியிருந்தால் என்னை ஒரு பிரதேச வாதம் பேசுவோனாக சித்தரித்து புறந்தள்ளியிருப்பார்கள்.

அரசியன்: அப்படியாயின் இப்போது நீங்கள் பேசுவதில் பிரதேச வாதம் இல்லை என்றா கூறுகிறீர்கள்?

வபா பாறுக்: நிட்சயமாய். தலைமைத்துவ தகுதிகளில் ஒன்றான புவியியல் வாதத்தையே முன் வைக்கின்றேன்.

நபியவர்களின் மறைவின் பின்னர் அன்சாரிகள் தமக்குள் ஒரு தலைவரைத் தெரிவு செய்ய முனைந்த கட்டத்தில் அபூபக்கர் (ரழி) ஆற்றிய உரையில் தலைமைத்துவம் எழுச்சிக்கு வித்திட்டு அதற்காய் ஆரம்ப கட்டங்களில் தியாகங்கள் செய்த மண்ணான மக்கத்து மண்ணிலிருந்தே தேர்வு செய்யப்படவேண்டும் என ஆணித்தரமாய் வரையறுத்துக்கூறியதை இங்கு கவனத்தில் கொள்வது மிக அவசியமாகும் ஈமான் கொள்ளாதோரை திருப்திப்படுத்தும் சார்பு நிலைக்கொள்கைகளை முற்றாக நான் நிராகரிக்கிறேன். இந்நிலைப்பாட்டை பிரதேசவாதமென காட்சிப்படுத்த முனைந்தால், அதற்காக நான் கவலைப்படப்போவதுமில்லை.

பிற்போக்கு, முற்போக்கு சிந்தனைகள் என்று எதுவுமில்லை. அல்லாஹ்வும் அவனது நபியும் பின் தொடர்ந்த ஸஹாபாக்களும் நமக்கு விட்டுச்சென்ற இஸ்லாமிய சிந்தனைகள் மட்டுமே சீரியவைகள்
எமது எல்லாச்செயல்பாடுகளின் உரைகற்களும் அவையாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர பூச்சாண்டி காட்டும் மேலைத்தேய கோட்பாடுகலல்ல.

ஆகவே மு.காவின் தலைமைத்துவம் கிழக்கைச் சேர்ந்ததாய்தான் இருக்க வேண்டும் என்பதில் நான் மிகத்தெளிவாய் இருக்கிறேன்.

அரசியன்: மு,கா தலைமைத்துவம் கிழக்குக்கு கைமாற வேண்டும் என்ற கோசங்கள் பல சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக மழுங்கடிக்கப்பட்டதை எவ்வாறு காண்கிறீர்கள்?

வபா பாறுக்: கிழக்குத்தலைமைத்துவம் கோரப்பட்ட வேளையிலெல்லாம் அதற்கு தகுதியுடையவர்கள் யாரும் இல்லை என்ற சாட்டையே மறுப்போர்கள் தம் கவசமாக்கி கடந்த 10 வருடமாக மழுங்கடித்து வந்துள்ளனர். அதனால்தான் கிழக்குக்கு வேண்டும் என்ற வழமையான கோசத்தை முன் வைக்காமல் மு.காவை என்னிடம் ஒப்படையுங்கள் என்ற கோரிக்கையையும் சமனாக முன்வைத்துள்ளேன். இது தனிப்பட்ட வகையில் மிகவும் தர்மசங்கடம் நிறைந்ததாயினும் தவிர்க்க முடியாதது.

அரசியன்: மு. கா. வின் தலைமைக்கு தலைமைக்கு நீங்கள் தகுதியானவர் என்று எதை வைத்துக்கூறுகிறீர்கள்

வபா பாறுக்: எல்லா வகையிலும் நானே தகுதியானவன் என மனதளவில் குனிந்தவனாயும் வெளிப்படையில் நிமிர்ந்தவனாயும் துணிந்து கூறுகிறேன். காலெஞ்சென்ற தலைவர் உயிருடன் இருந்த காலத்திலேயே கட்சியின் அடுத்த தலைமையாக என்னை பலரிடம் பல சந்தர்ப்பங்களில் அடையாளப்படுத்தியுமுள்ளார். ஆனால் அதை நான் ஒரு எடுகோளாகவும் எடுக்கவில்லை. தலைவர் அஷ்ரபை நான் ஒரு நபியாக பார்க்கவில்லை.

சாதாரன மனிதராகவே காண்கிறேன். எல்லோரையும் போல் தவறு செய்யக்கூடிய தலைவரே அவரும். என்றாலும் முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான எண்ணக்கருவை அவரின் உள்ளத்திலேயே அல்லாஹ் உதிக்க வைத்தான். அதற்கான தனி கௌரவத்துக்குரியவர் என்பதனாலேயே அவர் கூறியதையும் சுட்டிக்காட்டினேனே தவிர அவை குர் ஆன் ஆயத்துக்கள் அல்ல. அதற்கு அப்பால் இன்னும் நியாயமான காரணங்கள் நிறையவே இருக்கின்றன.

அரசியன்: காலஞ்சென்ற தலைவர் அஷ்ரப் அவர்கள் எதிர்வு கூறியதை தவிர வேறு எந்த தகுதி, தகைமைகளை வைத்து மு.கா. தலைமையை நீங்கள் உரிமை கோரிகிறீர்கள் என்பதை சற்று விபரமாக கூற முடியுமா?

வபா பாறுக்: இந்தக்கேள்வி மிக முக்கியமானதும் தர்ம சங்கடமானதும் கூட., எனது தகுதிகளை நானே பிரஸ்தாபிப்பது மிகவும் தர்ம சங்கடமானதும் கூச்சமானதுமாகும். என்றாலும் யுத்த களத்தில் நான் என்ற அகங்காரத்துடன் நெஞ்சை நிமிர்த்தி நடப்பதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்பதாலும் அரசியலும் ஒரு வகையில் யுத்தமே என்பதாலும் கூச்சத்துடன் கூறுகிறேன்.

முதலாவதாக, மு.கா. வை அரசியல் கட்சியாக பதிசெய்வதற்கு முக்கிய தேவைகளாயிருந்த கட்சி அங்கத்துவம், கட்சி வங்கிக்கணக்கிலிருக்கவேண்டிய பணம். இதில் கட்சி அங்கத்துவ ஆதாரம் கைவசம் இருந்த போதும் வங்கிக்கணக்கில் இருக்கவேண்டிய பண இருப்புத்தேவையை சிரமப்பட்டு எனது சொந்தப்பணத்தை வங்கியிலிட்டு நானே பூர்த்தி செய்தேன். அக்காலகட்டத்தில் மு.கா. என்பது பத்து சல்லிக்கும் பெறுமதியற்றது.

அடுத்ததாக கட்சியின் பல பொருளாதார தேவைகளை நானே சுமந்து கொண்டேன். எனது வாகனத்தை தலைவரின் பாவனைக்காக அவர் இல்லத்திலேயே போட்டுவிட்டு நான் பஸ்ஸில் பிரயானித்த காலங்களும் நிறையவுண்டு. இவை பொருளாதார மற்றும் வளப்பங்களிப்புகளுடன் தொடர்புடையவை. இவை தவிர மறைந்த தலைவரின் விரிந்த நோக்குகளை அதிகமாக அவர் வாயாலேயே அதிகம் கேட்டறிந்தவர் என்னைவிட எவரும் இல்லை என்பதை நான் அறிவேன்.

அத்துடன் புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான ஆள் கடத்தல், கப்பம் கோரல் போன்ற அடாவடித்தனங்களை கட்சி சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் தேசிய, சர்வதேச மயப்படுத்தலில் உயிரைப்பணயமாய் வைத்து செயல்பட்டேன். இவ்விடயத்தில் அந்நேரத்தில் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராயிருந்த திரு. யோகிக்கும் எனக்கும் பல சந்தர்ப்பங்களில் காரசாரமான விவாதங்களும் நடந்ததுண்டு. சில சந்தர்ப்பங்களில் மரணத்தைக்கொண்டு எச்சரிக்கப்பட்டுள்ளேன்.

அந்தக்கால கட்டஙகளில் பாதுகாப்பு அமைச்சராயிருந்த திரு. ரஞ்சன் விஜேரத்னா, ஜனாதிபதி பிரேமதாசாவின் சர்வதேச விவகார ஆலோசகராய் இருந்த திரு. பிரட்மன் வீரகோன், வெளிவிவகார அமைச்சராயிருந்த ஜனாப் ஏ சீ எஸ் ஹமீத் போன்றோர் எனக்குத்தெரியாமலே எனது பாதுகாப்பில் கரிசனை கொண்டு செயல் பட்டுக்கொண்டிந்ததை பின்னர் அறிந்து கொள்ளும்வரை எனது உயிருக்கு இத்தனை சமீபமான அச்சுறுத்தல் இருந்ததை நான் உணர்ந்திருக்கவில்லை. முஸ்லிம்கள் மீதான புலிகளின் கொலை வெறியை கண்டித்து முழு இலங்கையிலும் பூரன ஹர்தாலை பிரகடனம் செய்து அதில் முழுமையான வெற்றி கண்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை உலமயப்படுத்தியதில் பாரிய பங்களிப்புச்செய்தேன்

இவை தவிர தலைமைத்துவத்துக்கு தேவையான ஆளுமை, பரந்த அறிவுகளையும் ஆரம்பத்திலிருந்தே நான் வளர்த்துக்கொண்டதுடன் வீச்சு மிக்க கோட்பாட்டு, அரசியல் ஆங்கிலப்புலமையையும் தாராளமாய் வளர்த்துள்ளேன்.

இவை எல்லாவற்றையும் விட மேலாக நன்னோக்குடன் கூறப்படும் ஆலோசனைகளை மனமுவர்ந்து பரிசீலிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டேன். எனது சிந்தனைகளை தயக்கமின்றி எவரிடமும் முன்வைக்கும் தைரியத்தையும் வளர்த்துள்ளேன் மேலதிகமாக எனது பாதையில் என்னை நெறிப்படுத்த இன்று இலங்கையிலிருக்கும் மிகச்சிறந்த சிந்தனையாளரான வேதாந்தி எனும் சேகு இஸ்ஸதீனை எனது ஆலோசகராக பெற்றுள்ளேன்.

அனைத்துக்கும் அப்பால் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கும் சிறந்த அடிமையாய் இருக்க முயன்று கொண்டே இருக்கிறேன் இவை தவிர வேறேதாயினும் பற்றி குறிப்பிட்டு நீங்கள் கேட்பீர்களாயின் அதற்குரிய பதிலை தருகிறேன்.

அரசியன்: மு.காவின் ஸ்தாபக தவிசாளராயும் உங்களின் ஆலோசகராயும் இருக்கும் சேகு இஸ்ஸதீனை மு.காவின் தலைமைக்கு ஏன் நீங்கள் பரிசீலிக்காமல் உங்களை முன் மொழிந்தீர்கள்?

வபா பாறுக்: சேகு இஸ்ஸதீனை மனதில் கொண்டே எனது முன்னெடுப்பு ஆரம்பமானது
ஆனால் ஒரு கட்டத்தில் என்னை அழைத்து மிகத்தெழிவாக கூறிவிட்டார். தான் ஒரு ஆலோசகராக மட்டுமே செயலாற்றுவேன். தலைமைக்கு நீயே பொருத்தம் என்றும் ஆணித்தரமாக கூறிவிட்டார்.

எவ்வளவோ முயன்றும் உடன்படவில்லை. அதன் பிறகே உள்ளத்தில் அச்சப்பட்டவனாக வெளிப்பார்வைக்கு ஆணவன் கொண்டவனாக என்னை நானே மு. கா. தலைமைக்குத்தகுதியுடையவனாக பிரகடணப்படுத்திக்கொண்டேன்.

அரசியன்: மு.காவை இப்போதுள்ள தலைமையிடமிருந்து மீட்டெடுப்பது சுலபமான காரியமென நினைக்கிறீர்களா?

வபா பாறுக்: இக்கேள்விக்கு மாற்றுக்கோணத்தில் பதில் கூற அனுமதியுங்கள்.
அதாவது: மக்கள் மனதிருந்து மு. காவை பிரிப்பதை விட இலகுவானதே!

அரசியன்: மு.காவை மீட்டெடுப்பதின் அடிப்படை நோக்கமாக எதை முன் வைத்துள்ளீரகள்

வபா பாறுக்: முஸ்லிம்களின் தேசிய விடுதலை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட மு.கா எனும் பேரியக்கம் ஒரு சில்லறை அரசியல் செய்யும் மிககேவலமான மூன்றாம் தர அரசியல் கட்சியாகிவிட்டது. அதை மீட்டெடுத்து மீண்டும் முஸ்லிம்களின் தேசியப்பேரியக்கமாக மாற்றியமைப்பதே அடிப்படை நோக்கம்.

அரசியன்: சேகு இஸ்ஸதீனின் ‘முஸ்லிம் தேசியம்’ கோட்பாடு பற்றி உங்கள் கருத்து?

‘தேசியம்’ என்ற கோட்பாடு சர்ச்சைகள் நிறைந்த மாற்று வியாக்கியானங்கள் மலிந்த ஒரு கோட்பாடு. இக்கோட்பாட்டின் எல்லைகள் தனித்தேச நிறுவல் வரை வியாபித்துள்ளது. சேகு இஸ்ஸதீன் அவர்கள் சில தினங்களுக்கு முன் கூறியுள்ளது போல் தமிழ்த்தேசியத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் அரணாகவே முஸ்லிம் தேசியம் கருத்துக்கொள்ளப்பட வேண்டும். அந்நிலைப்பாட்டுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.

அரசியன்: உங்ககளின் காங்கிரஸ் மீட்பு முயற்சிக்கான மக்கள் ஆதரவு எவ்வாறுள்ளது?

வபா பாறுக்: எதிர்பார்த்த அளவு பிரமிக்க்த்தக்க ஆதரவு கிடைத்துக்கொண்டு வருகிறது

அரசியன்: இம்முன்னெடுப்பும் செயல்பாடுகளும் உங்கள் கவிதை ப்படைப்பில் பாதிப்பை ஏற்படுத்தவில்லையா? தமிழ் கவிதைகளுக்கு புது எழுத்து நடையை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த உங்களின் தனித்துவத்தை விட்டும் ஒரு விடுதலைக்கவிஞனாக மாறிக்கொண்டு வருகிறீர்கள் என்ற எனது கணிப்பு சரியா?

வபா பாறுக்: பாதிப்பு என்பதைவிட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
ஆண்மீகம் கலந்த ஆழ் ஆத்மதேடலை எழுதிக்கொண்டிந்த பரீட்சனுக்கு ஓய்வு கொடுத்து சமூக விடுதலையை எழுதும் வபா பாறுக்கின் கைகளுக்கு பேனை மாறியுள்ளது.

இம்மாற்றம் எனக்கு திருப்தியையே தருகிறது. என்றாலும் சக கவிஞர்களில் ஒரு பகுதியினருக்கும் ஆர்வலர்களுக்கும் ஒரளவு ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். அதை என்னால் உணர முடிகிறது. ஆனபோதும், இது தவிர்க்க முடியாததும் தவிர்க்கக்கூடாததும் என்றே நான் கருதுகிறேன்.

அரசியன்: தர்ம சங்கடமான கேள்வி ஒன்று
இக்காலத்தில் வாழ்பவர்களில் நீங்கள் மிகவும் விரும்பும் கவிஞர் யார்?
உங்களை மிகவும் கவர்ந்த புரட்சித்தலைவர் யார்?

வபா பாறுக்: இதில் எந்த தர்ம சங்கடமும் இல்லை.
வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் நான் விரும்பும் கவிஞன் பரீட்சன்
என்னைக்கவர்ந்த புரட்சியாளன் வபா பாறுக்

அரசியன்: முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை தாங்கள் வலிந்து கேட்பதற்கு தேர்ந்தெடுத்த இந்தக்கால கட்டத்துக்கு ஏதாயினும் விஷேட தொடர்பு இருக்கிறதா? அதாவது பின் புலன்கள் இருக்கிறதா என அறிய விரும்புகிறேன்

வபா பாறுக்: ஆம் மிக முக்கியமான காரணமாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலியின் அதிகாரக்க்குறைப்பை கருதலாம்.
கிழக்கைச் சேர்ந்த ஒருவரின் தலைமையின் இருக்கவேண்டிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு கிழக்கைப் பிரநிதி ப்படுத்துவற்கு ஓரளவாயினும் தட்டிக்கேட்கும் அதிகாரத்துடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை நோக்கங்களை அறிந்த ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான ஹசன் அலியின் அதிகாரத்தையும் பறித்ததென்பது என்னைப்பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரசின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளைப்பேசுபவர்களுக்கு எதிரான ஒட்டு மொத்த நடவடிக்கையாகவே கருதுகிறேன்.

முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை இலட்சியங்களை துளியேனும் அறிந்திராத ஹகீமைப்போன்றோரின் அருகில் இருந்த ஹஸனலி போன்ற முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை கொள்கை இலட்சியங்களை அறிந்த, அவற்றை விட்டுக்கொடுக்காத ஒருவரின் அதிகாரங்களும் பறிக்கப்பட்டதை கிழக்குச்சிந்தனையை முற்றாக புறக்கணிக்கும் அல்லது முற்றாக இல்லாதொழிக்கும் செயல்பாடாகவே நான் காண்கிறேன். இது மிக ஆபத்தான இறுதிக் கட்டமாகவே நான் உணர்கிறேன்.

இன்னும் தாமதித்தால் காங்கிரஸின் அடையாளத்தையும் கண்டு பிடிக்க இயலாமலாகிவிடும். அதற்கு முன் முஸ்லிம் காங்கிரஸை கைப்பற்றியாக வேண்டும் என்ற தேவைப்பாடே இந்தக்காலகட்டத்தில் என்னை உந்தியதற்கு முக்கிய காரணம் என்று கூறலாம்.

அரசியன்: அண்மையில் உங்களை மு.கா செயலாளர் ஹஸனலி அவர்கள் சந்தித்த புகைப்படத்தை சில முகநூல் பதிவுகளினூடாக காணக்கிடைத்தது, உங்களுடலான அவரது தொடர்பை ஹக்கீமின் தலைமைத்துவத்துக்கு எதிரான ஹஸனலியின் நிலைப்பாடாக கொள்ளலாமா?

வபா பாறுக்: இல்லை, அப்படி கொள்ள முடியாது. ஹக்கீமின் தலைமைத்துவத்தை நிராகரிக்கும் நிலைக்கு இன்னும் ஹஸனலி வந்து விட்டதாய் நான் உணரவில்லை. ஹஸன் அலி எப்போதுமே விசுவாசமாய் செயல் படுபவர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அதன் அடிப்படை இலக்குகளிலிருந்து விலகிச்சென்று கொண்டு இருப்பதை தான் வெகுகாலமாய் உணர்ந்து வருவதாயும் என்ன செய்யலாம் என புரியாத பரிதாப நிலையில் இருப்பதாயும் மனம் நொந்து கொண்டார்.

அரசியன்: முஸ்லிம் காங்கிரஸை உங்கள் தலைமையில் கீழ் கொண்டுவருவதை அவர் ஆதரிக்கின்றாரா?

வபா பாறுக்: முஸ்லிம் காங்கிரஸை அதன் அடிப்படை கொள்கையை முன்னெடுக்க செய்யப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் தமது உறுதியான ஆதரவை தெரிவித்தார். அந்த வகையில் எனது முன்னெடுப்புக்கு அவரது பூரண ஆதரவு உண்டென்றே நம்புகிறேன்.

அரசியன்: மு.காவிலிருந்து இதற்கு முன்னர் முரன்பட்டு பிரிந்து சென்று தனிக்கட்சிகள் அமைத்து செயல்படும் அமைச்சர் ரிஷாட்,.முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்குமா?

வபா பாறுக்: இதை அவர்களிடமே கேட்க வேண்டும். இருந்தாலும் சில விடயங்களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நீங்கள் பெயர் குறிப்பிட்டவர்கள் என்ன நோக்கங்களுக்காக மு. காவிலிருந்து முரன்பட்டுச் சென்றார்கள் என்பதை அவர்களது பிந்தியகால நடவடிக்கைகளை வைத்து இனம் கண்டு கொள்ள முடியும்.

தவிரவும் நீங்கள் குறிப்பிட்டவர்களில் அதாவுல்லாஹ்வைத்தவிர மற்றவர்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டேரே தவிர ஸ்தாபகர்கள் அல்ல. அத்துடன் அவர்களுக்கு என்னையோ எனக்கு அவர்களையோ தனிப்பட்ட முறையிலும் தெரியாது. இந்நிலையில் எனது தலைமையின் கீழ் மு.காவை மீட்க முன்வாருங்கள் எனும் அழைப்பு எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் அமையும் என்பது முக்கியாமான விடயம்.

என்றாலும், மு.கா. வின் ஆரம்ப காலங்களில் என்னுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், மக்கள் காங்கிரஸ் செயலாளர் YLS ஹமீத் போன்றோரைத்தொடர்பு கொண்டு பேசினேன். கொள்கை மட்டத்தில் ஆதரவு தெரிவித்தார்கள் எந்தக்கட்டத்தில் இணைந்து செயல்படுவார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஏற்கனவே மாற்று அரசியல் வழிமுறைகளை தேர்ந்து கொண்டவர்கள் என்பதால் பல வகையான விடயதானங்கள் பற்றி ஆராய்ந்தே முடிவு செய்வார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

அரசியன்: உங்களது இந்த முன்னெடுப்பு இன்னும் பெயரிடப்பட்ட அமைப்பு மயமாக்கப்படாமலிருப்பது பற்றி?

வபா பாறுக்: முன்னெடுப்பு பத்துப்பேருக்கு மேற்ப்பட்ட தலைமைத்துவ சபை Leaders Council கொண்ட ஒரு அமைப்பாகவே செயல் படுகிறது ஆனால் பெயரிடுவதில் மிகுந்த எச்சரிகை கொள்கிறோம். ஏனனில் இன்னுமொரு கட்சியாக மக்கள் இதனை தவறாக புரிந்து கொள்ள இடமளித்து விடக்கூடாது என்பதால். என்றாலும் நாம் இச்செயல்பாட்டை’கிழக்கின் எழுச்சி’ என்றே அழைக்க விரும்புகின்றோம்.

அரசியன்: முகநூலுக்கு அப்பாலான உங்கள் முன்னெடுப்புகள் எந்த மட்டத்துக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது?

வபா பாறுக்: முகநூலுக்கு அப்பால் விரிவு படுத்துவதில் தற்போது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் அதை அறிந்து கொள்வீர்கள்!

அரசியன்: நேரம் ஒதுக்கி நேர்காணலில் கலந்து கொண்டமைக்கு மிகுந்த நன்றிகள்

Web Design by The Design Lanka