முஸ்லிம் கூட்டணிக் கட்சிகளை நம்பி ஏமாந்து விடக் கூடாது என்று எண்ணி அம்மக்களே ஏமாந்து விட்டார்கள் - Sri Lanka Muslim

முஸ்லிம் கூட்டணிக் கட்சிகளை நம்பி ஏமாந்து விடக் கூடாது என்று எண்ணி அம்மக்களே ஏமாந்து விட்டார்கள்

Contributors
author image

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்

பதுளை மக்களுக்கு ஊவா மாகாண சபை தேர்தல் பிரச்சாரங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் பற்றி முஸ்லிம் கூட்டணிக் கட்சியால் சரியான முறையில் விளிப்புணர்வுகள் வழங்கப்படவில்லை.

 

ஊவா மாகாண சபையின் வரலாற்றில் மறைந்த எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் காலத்தில் 1987 களில் அஷ்ரப் அவர்கள், காலம் சென்ற ஓசி அபேகுணசேகர, சானக்க அமரதுங்க ஆகியவர்களது சிங்கள கட்சியை இணைத்து போட்டியிட்டு பதுளையைச் சேர்ந்த ஜனாப்  சித்திக் என்பவர் மாகாணசபை உறுப்பிணராக முஸ்லீம் காங்கிரசில் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

அதன் பின்னர் கடந்த 27 வருடகாலமாக ஊவா மாகாணத்துக்கு  இதுவரை ஒரு முஸ்லீம் மாகாணசபை உறுப்பிணரும் தெரிவாகவில்லை. இதனால் ஊவா வாழ் முஸ்லீம் மக்கள் அரசியலில் அநாதைகளாகவும் மிகவும் பின்தங்கிய நிலையில் தமக்கென கிடைக்கும் அரசியல் அபிவிருத்திகளைக் கூட பெறமுடியாமல் உள்ளனர்.  அடிப்படை வசதிகள் அற்று பாதை, நீர், மற்றும் முஸ்லீம் பாடசாலைகளில் எவ்வித பௌதீக வசதிகள் இன்றி கல்வியில் பெரிதும் பின்தங்கிய சமுகமாக இருந்து வருகின்றனர்.

 

37 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட மக்கள் கடந்த 27 வருட காலமாக எவ்வித முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக் கொள்ளாது இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் அவர்களிடம் இது தொடர்பான விளிப்புணர்வும், தமக்கான பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவமும் உணரப்படாமையும் ஒரு காணரமாகலாம்.

 

இவ்வாறாக அரசியலில் அநாதையாக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தேர்தல் பிரச்சாரங்களே தேவை. அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம், அந்த பிரதிநிதியினுாடாக எவ்வாறு அவர்களுக்கான அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வது மற்றும் அவற்றுக்காக இரு கட்சிகளின் கூட்டணி ஏற்படுத்தப்பட்ட அவசியம் போன்றன பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரமே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

 

சுருங்கக் கூறின் அம் மக்கள் மத்தியில் கூட்டணிக் கட்சி படம் காட்டியிருக்காமல் பாடம் புகட்டியிருக்கலாம்.

 

மாறாக சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போது அவர்களது பேசு பொருளாக இருந்த விடயங்களாக பள்ளிவாசல் தாக்குதல்களும், இனவாதிகளின் தாக்குதல்களும், ஹிஜாப், ஹலால், பொதுபலசேனா மற்றும் அரசாங்கத்தின் மீதான குற்றச் சாட்டுக்களுமே இருந்தன. இவைகளே பிரச்சார கருப்பொருளாக இருந்தன. இவற்றை கருவாகக் கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டால் மக்களது மனங்களை வென்று வாக்குகளை அள்ளலாம் என்று கூட்டணிக் கட்சி எண்ணியிருந்தது.

 

ஆனால் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான அடக்கு முறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தோடு றவூப் ஹக்கீம் அவர்களும் மற்றும் றிசாத்பதியுத்தீன் அவர்களும் நட்போடு இருந்து கொண்டு வாக்குப் பெறுவதற்காக இங்கு வந்து அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை கூறி படம் காட்டுகிறார்கள் என்ற எண்ணத்தையே அம் மக்கள் மீது இவர்களது தேர்தல் பிரச்சாரங்கள் விதைத்தது.

 

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் இவர்களது போக்கு இவ்வாறுதான் இருந்தது என்ற எண்ணம் ஊவா முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாக பதிந்து இருந்தது என்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

 

இரட்டை இலை கூட்டணிக் கட்சியானது பழி உணர்வு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளாது விளிப்புணர்வு தேர்தல் பிரச்சாரங்களை மேற் கொண்டிருந்தால் மக்கள் அதன் மூலம் சிந்திக்கத் தொடங்கி முஸ்லிம் கூட்டணிக் கட்சியினுாடாக தமக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றிக்கக் கூடும். இரண்டை இலையும் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.

 

எது எவ்வாறினும் தேர்தலில் முஸ்லிம் கூட்டணிக் கட்சிகளை நம்பி ஏமாந்து விடக் கூடாது என்று எண்ணி அம்மக்களே ஏமாந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை இதுவே எனது கருத்தும் மற்றும் அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களுமாகும்.

Web Design by Srilanka Muslims Web Team