முஸ்லிம் சமூகம் தமது இருப்பையும் வாழ்வியலையும் பெரும் இன்னல்களுக்கூடே கொண்டு செல்கின்றது » Sri Lanka Muslim

முஸ்லிம் சமூகம் தமது இருப்பையும் வாழ்வியலையும் பெரும் இன்னல்களுக்கூடே கொண்டு செல்கின்றது

2-KALEEL MUSTHAFA-26-01-2018

Contributors
author image

P.M.M.A.காதர்

இலங்கை தேசம் மூன்று தசாப்தங்கள் பயங்கரவாத தீக்கங்குகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகி அல்லல்பட்டுக் கொண்டிருந்த வேளை முஸ்லிம் சமூகம் தமது இருப்பையும் வாழ்வியலையும் பெரும் இன்னல்களுக்கூடே கொண்டு செல்கின்றது. தொன்றுதொட்டு நாங்கள் ஜனநாயக வழியில் போராடியே எமது இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறோம்.பயங்கரவாதத்திலிருந்து மீண்டெழுந்தபோதும் இனவாதத் தீ முஸ்லிம் சமூகத்தை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மருதமுனை அமைப்பாளரும்,மேலதிக பட்டியல் வேட்பாளருமான கலீல் முஸ்தபா தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியன் சார்பாக மருதமுனையில் நான்கு வட்டாரங்களிலும் போட்டியிடும்  வேட்பாளர்களான ஏ.நெய்னா முகம்மட்,வை. கே.றகுமான், ஏ.எச்.ஏ.ழாஹிர்,சிபான் பஹூறுத்தீன் ஆகியோரை ஆதரித்து மருதமுனை அல்மனார் வீதியில் வெள்ளிக்கிழமை(26-01-2019)நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:-கிழக்கின் இருப்பும்,வாழ்வும் கேள்விக்குறியாக்கப்படப்போகிறது.எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான தருணமொன்றிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.மறைந்த மாமனிதர் அஷ்ரப்; விட்டுச் சென்றவைகள் எல்லாம் சின்னாபின்னமாகியிருக்கின்றது.கொள்கைகளும், கோசங்களும் குறுங்கதையாகியிருக்கிறது.இருந்தாலும் இன்று எமது அகில மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட்  பதியுதீன்; ஆளுமைமிக்க ஒரு தலைவராக எமது தேசத்தில் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்.முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் தனிமனிதனாக கர்ச்சித்துக் கொண்டிருக்கிறார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடைய தலைமைத்துவ பண்புகளால் கவரப்பட்ட நான் இந்தக் கட்சியை எமது மண்ணுக்கு அறிமுகப்படுத்தி எங்கள் மக்களின் சுதந்திர உணர்வுகளையும், உரிமைகளையும்,அரவணைத்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.மருதமுனை வாழ் மக்களே எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்.எதிர்கால நிஜத்திற்காக கைகோர்த்துக் கொள்ளுங்கள்.வரலாற்று மாற்றத்திலே நீங்களும் பங்காளியாகுங்கள்.எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் இதற்கான பரிசும் வெற்றியும் எமக்குக் கிடைக்கும்.வல்ல அல்லாஹ் எப்போதும் நம்மோடு துணையாய் இருப்பான்.

ஆமைச்சர் றிஷாட் பதியுதீன் பயங்கரவாத பொறிக்குள்ளிருந்து இன்னல்பட்டு, துயர்பட்டு வெளியேறியவர்.பஞ்சுமெத்தை வாழ்க்கை இவருக்கு பழக்கமானதொன்றல்ல. ஏழைகளின் துயர் அறிந்தவர். அந்த மக்களின் துயர் துடைப்பதற்காகவே இன்று தேசிய நீரோட்டத்தில் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.இன்றும் கூட அகதிகளாக அல்லல்படுகின்ற தமிழ்,முஸ்லிம் சமூகத்தை மீள்குடியேற்றுவதற்காக கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது கரங்களை இத்தேர்தலிலே நாம் பலப்படுத்த வேண்டும்.

எமக்கான எதிர்காலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலேயே தங்கியிருக்கிறது என்பது வெள்ளிடை மலை.அன்று மாமனிதர் அஷ்;ரப் அவர்களையும் முஸ்லிம் காங்கிரஸையும் அழிக்க அலைந்தவர்கள் இன்று எமது தலைவர் றிஷாத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் அழிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

பேரன்பிற்குரிய வாக்காளப் பெருமக்களே…! உண்மையின் அடையாளமாய் தேசிய தலைமைத்துவம் உன்னதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.நமது மக்களுக்காகவே அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.எமது சத்தியப்பாதையை குன்றும் குழியுமாக்குவதற்கு ஏராளமான கழுத்தறுப்புக்கள்,காட்டிக் கொடுப்புக்கள், அவதூறுகள்,கட்டுக்கதைகள் ஆங்காங்கே இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் கண்டு நாங்கள் சோர்வடைய மாட்டோம்.இறுதி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்போம்.

எமது தேசியத் தலைவரின் வர்த்தக கைத்தொழில் அமைச்சுக்கூடாக கைத்தறி நெசவுக்கிராமம் ஒன்றை மருதமுனைப் பிராந்தியத்திலே அமைப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.யுவதிகளுக்கான அதி நவீன தையல் பயிற்சி நிலையங்கள் பலவற்றை நிறுவுவதற்கு எண்ணியிருக்கிறோம்.அதன் ஆரம்பக்கட்ட வேலைகள் நிறைவடைந்திருக்கிறது.மேலும் அமைச்சின் கீழ் வருகின்ற கைத்தொழில் வலயங்கள் மினி ஆடைத் தொழிற்சாலைகளை இப்பிரதேசத்திலே உருவாக்கி வேலையற்றிருக்கின்ற இளைஞர்கள் யுவதிகளை தொழிற் புலமையுடைய முயற்சியாளர்களாக மாற்றுவதற்கு கங்கணம் கட்டியிருக் கிறோம்.

மேலும் கைத்தறி நெசவு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பல காட்சியறை கடைத் தொகுதிகளைக் கொண்ட பொருளாதார மத்திய நிலையம் ஒன்றையும் இப்பிராந்தியத்தில் உருவாக்கு வதற்கு அடித்தளமிட்டிருக்கின்றோம். நேசத்திற்குரியவர்களே, பன்னிரெண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் இருந்தும் அரசியல் உச்ச அதிகாரத்தைப் பெறத் தவறியிருக்கிறோம்.அரசியல் அதிகாரமற்றவர்களாய் வீழ்ந்திருக்கிறோம். எதிர்காலத்தில் எமது கிராமமும் வாக்காளர்களும் பேரம் பேசுகின்ற அதிகார சக்திகளாக மாற்றம் பெறவேண்டும். வீழ்ந்து போகின்ற விட்டில் பூச்சிகளாக நாம் வரலாறு நெடுகிலும் வாழ்ந்து மரணிக்க முடியாது. விழ விழ விதைகளாக விழுவோம். தீப்பொறிக்குள் பறக்கும் பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுவோம்.

புத்திஜீவிகளே, உலமாக்களே, தாய்மார்களே, சகோதரிகளே, இளைஞர்களே, போராளிகளே! பாரம்பரிய அரசியல் பரம்பரை அரசியலை வேரறுத்து மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியில் இணைந்து கொள்ளுங்கள்.சிந்தியுங்கள் துடித்தெழுங்கள். சுதந்திர வேட்கையும் அபிவிருத்திப் புரட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் குவிந்திருக்கிறது.தேசிய தலைமையைப் பலப்படுத்தி பயணிப்போம் வாருங்கள்.

ஊள்ளுராட்சிக்களம் வளம் பெற்றிருக்கின்றது.எமது நான்கு வட்டார வேட்பாளர்களும் வெற்றி பெறுகின்ற பிரகாசமான வாய்ப்பு எமக்கு கிடைத்திருக்கிறது.இந்த அற்புதமான வாய்ப்பை பயன்டுத்திக் கொள்ளுங்கள். துடித்தெழுந்து இப்புரட்சியில் எம்மோடு தோள் கொடுங்கள். மாற்றம் காணுவோம்…. மக்கள் எழுச்சியில் மாற்றம் காணுவோம்…. மயிலுக்கு வாக்களியுங்கள். மாட்சிமை பொருந்திய வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்துவோம்.வாக்களிக்கும் மக்கள் வாழ்வில் வசந்தம் பிறக்க மருதமுனையிலிருந்து புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவோம். வெற்றிபெறுவோம்! என அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka