முஸ்லிம் சமூகம் தற்போது பேரம் பேசும் நிலையை இழந்து வருகின்றது - அமைச்சர் உதுமாலெப்பை - Sri Lanka Muslim

முஸ்லிம் சமூகம் தற்போது பேரம் பேசும் நிலையை இழந்து வருகின்றது – அமைச்சர் உதுமாலெப்பை

Contributors
author image

சலீம் றமீஸ்

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இலங்கை முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படுத்தி முஸ்லிம்களை பேரம் பேசும் நிலைமைக்கு கொண்டு வந்தார். தற்போது நமது முஸ்லிம் சமூகம் பேரம் பேசும் நிலையை படிப்படியாக இழந்து வருகிறது என்பதனை நாம் எல்லோரும் எண்ணி கவலைப்படவேண்டியவர்களாக உள்ளோம் என அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச சபைகளில் நீண்ட காலமாக தற்காலிக அடிப்படையில் கடமைபுரிந்த உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது மெரிடியன் ஹோட்டலில் நடை பெற்ற போது கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

 

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் உதுமாலெப்பை  நாங்கள் எப்போதும் அரசியலில் தலைமைத்துவ விசுவாசத்துடன் இருந்து செயல்பட்டு வந்துள்ளோம். தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கிய போது தலைவர் அஷ்ரப் அவர்களின் மீது பூரண நம்பிக்கை வைத்து விசுவாசத்துடன் செயல்பட்டோம், தலைவர் அஷ்ரப் என்ற அந்த தலைமை என்ன சொன்னாலும் கண்களை மூடிக் கொண்டு செயல்பட்டு முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தோம்.

 

இந்த மேடையில் கலந்து கொண்டிருக்கும் அரசியல் பிரமுகர்களைப் பார்க்கும் போது நாம் எல்லோரும் தலைவர் எம்;.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்ட நிகழ்வுகள் என் கண் முன்னே வருகின்றது. முஸ்லிம் காங்கிரஸை வளர்த்த உரிமை எங்களுக்கும் இருப்பதால் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே நமது சமூக நலனுக்காக குரல் கொடுத்துள்ளேன்.

 

சிலர் அரசியலுக்காக நான் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை பழி வாங்குவதாக சொல்வார்கள். நான் ஒரு போதும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை பழி வாங்கவில்லை. மாறாக கிழக்கு மாகணம் முழுவதும் முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்த கிராமங்களுக்கு எங்களால் முடிந்தளவு அபிவிருத்திப் பணிகளை அரசியல் வேறுபாடுகள் இன்றி பணி புரிந்து வருகின்றோம்.

 

நான் எப்போதும் வெளிப்படையகா ஒருவிடயத்தை கூறி வருகின்றேன். நான் எப்போதும் முஸ்லிம் காங்கிரஸ்தான். ஆனால் தேர்தல்கள் நடைபெறும் தினத்தில்  மாத்திரம் நான் முஸ்லிம் காங்கிரஸ் இல்லை. அதற்கு காரணம் உண்டு. தேர்தல்கள் முடிந்தவுடன் தலைவர் அஸ்ரப் அவர்களின் கொள்கையை பின் பற்றி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்த விடயத்தின் உண்மைத் தன்மை அறிவதற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்று நடாத்திப்பார்த்தால் யதார்த்தம் வெளியே வரும் என நம்புகின்றேன்.

 

பெருந் தலைவர் அஷ்ரப் மரணித்த பின் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவிக்கு, றஊப் ஹக்கிமா? தலைவர் அஷ்ரப் அவர்களின் மனைவி பேரியலா? என்ற நிலைமை வந்த போது வெளிப்படையாகவே எங்கள் கருத்துக்களை முன்வைத்தோம். அமைச்சர் பதவியில் தலைவரின் மனைவி பேரியல் இருக்கலாம், ஆளும் கட்சியின் தலைவராக றஊப் ஹக்கிம்தான் செயல்பட வேண்டும் என சாய்ந்தமருது மண்ணில் இருந்துதான் பிரகடனப் படுத்தினோம். எப்போதும்  நாம் சார்ந்திருக்கின்ற அரசியல் தலைமையுடன் விசுவாசம் வைத்து செயல்படும் போதுதான் நமது செயல்பாடுகள் வெற்றி அடையும்.

 

இந்த மேடையில் நானும், பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்களும் நமது முஸ்லிம் சமூகம் தொடர்பான சில விடயங்களை பேசிக் கொண்டிருக்கும் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்கள் தனது உரையில் கரையோர மாவட்டம் தொடர்பான விடயத்தை திடீர் என பேசினார். முஸ்லிம் சமூகம் தற்போது பேரம் பேசும் நிலைமையை படிப்படியாக இழந்து வருவதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

 

நமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் உள்ளுராட்சி அமைச்சராக அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில்தான் பெருந் தொகையான நிதி ஒதுக்கப்பட்டு, உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு நிரந்தரமான நவீன கட்டிடங்கள், வாகனங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள், 10,15 வருடங்களாக தொடர்ச்சியாக தற்காலிகமாக உள்ளுராட்சி நிறுவனங்களில் கடமை புரிந்தவர்களுக்கு நிரந்தர நியமணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ் நியமணத்தை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நமது ஜனாதிபதி, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்கும், கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம அவர்களுக்கும், முதலமைச்சர் அப்துல் மஜீத், உயர் அதிகாரிகளுக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

 

 

உள்ளுராட்சி நிறுவனங்களில் வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு போதும் தலையிடவில்லை என்பதனை இந்த பகிரங்க மேடையில் முதலமைச்சர் , செயலாளர்கள், உயர் அதிகாரிகள் மத்தியில் சொல்ல விரும்புகின்றேன். 20,15,10 வருடங்களாக தற்காலிகமாக கடமை புரிந்து வரும் உத்தியோகத்தர்கள் எந்த இனமாக, அல்லது எந்தக் கட்சி ஆதரவாளர்களாக இருந்தாலும் உண்மைக்குண்மையாக தற்காலிகமாக கடமை புரிந்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி விட்டு மிகுதியை நீங்கள் யாருக்கும் வழங்கலாம் நாங்கள் ஒரு போதும் இந்த விடயத்தில் தலையிடமாட்டோம் .

 

அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் பாலமுனை வாசிகசாலையில் 14 வருடகாலமாக தற்காலிக ஊழியர்களாக கடமை புரிந்து வரும் பாயிசா, 6 பிள்ளைகளின் ஏழைத் தாய்க்கு நூலகர் நியமனம் வழங்காமல் விட்ட விடயத்தினை மாண்புமிகு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு இந்த ஏழை பெண் மணிக்கு நியமனம் வழங்குமாறு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார்.

 

பல மாதங்கள் சென்றும் நியமனம் தொடர்பாக எந்த விதமான பதிலும் கிடைக்காத காரணத்தினால் அந்த கடிதத்தின் பிரதியுடன் முதலமைச்சரை நான் சந்தித்து நிலைமைய விளங்கப்படுத்தி  இந்த ஏழைப் பெண் மணிக்கு நியமனம் வழங்குமாறு முதலமைச்சர் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சிபார்சு செய்து கடிதம் ஒன்றினை வழங்கி அந்தக் கடிதத்தினை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் முதலமைச்சரின் செயலாளரிடம் நேரடியாக சென்று கையளித்துள்ளார்.

 

உண்மைக்கு உண்மையாக உள்ளுராட்சி சேவையில் 14 வருடங்கள் கடமை புரிந்து வரும் பாலமுனை கிராமத்தினைச் சேர்ந்த ஒரே ஒரு பெண்ணின் நூலகர் நியமனத்தை வழங்குமாறு உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சுக்கு பொறுப்பான முதலமைச்சர், கிழக்கு மாகாண சபையின் அமைச்சருமான நானும் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாக நேற்றுத்தான் கிழக்கு மாகாண ஆளுனர் இடம் முறையிட்டேன் . இது சம்பந்தமான விசாரனைகளுக்காக ஆளுனர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதிகள், முதலமைச்சர், நமது அதிகாரிகள் நீதி நியாயமாக செயல்பட்டால் பிரச்சினைகள் இல்லை. நீதி, நியாயமற்ற முறையில் செயல்படும் போது நாம் கிழக்கு மாகாண ஆளுனர் இடம் நீதி கேட்க வேண்டிய சூழ் நிலையை சில அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றமை கவலைக்குறிய விடயமாகும்.

 

சிலர் பதவிகள், பட்டங்கள் இந்த உலகில் நிரந்தரமானவை என எண்ணி தர்மங்களை மறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது கூட நான் மரணித்து விடலாம். மரணம் எம் தோல்களில் சுமந்து உள்ளதை நாம் மறந்து செயல்படுகின்றோம்.

 

முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் இந் நிகழ்வில் நான் ஒரு சம்பவத்தை உங்களுக்கு சொல்ல வேண்டும். மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் சம்மாந்துறை அல்- மர்ஜான் மகளிர் மகா வித்தியாலயத்தில் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்;ற உறுப்பினர்கள், உள்ளுராட்;சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச காரியாலய உத்தியோகத்தர்கள் எல்லோரையும் அழைத்து விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து உரையாற்றும் போது ஒரு முக்கியமான விடயத்தினை எங்களுக்குச் சொன்னார். பெரும் தலைவரின் அந்த வசனங்கள் இன்றும் எம் மனதில் நிலைத்து இருக்கின்றது.

 

நீங்கள் அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக,உள்ளுராட்சி மன்றத்தின் தலைவர்களாக, உறுப்பினர்களாக, அரச உயர் அதிகாரிகளாக பதவி வகிக்கும் போது நீங்கள் உயர்ந்தவர்களாக, ஆங்கிலம் தெரிந்தவர்களாக, பொறியியலாளர்களாக, டாக்டர்களாக மக்கள் மத்தியில் கடமை புரியும் போது ஒரு ஏழையின் மனம் நொந்து விடாமல் கவனமாக நீங்கள் செயல்பட வேண்டும் . ஏழையின் மனம் நொந்து விட்டால் இறைவனின் தண்டனை நமக்கு கிடைத்துவிடும் என்று தலைவர் அஷ்ரப் அவர்கள் கூறினார்கள்.

 

எனவே பதவிகள், பட்டங்கள் வரும் போது தலைவர் அஷ்ரப் அவர்களின் அறிவுரைகளை நாம் மதித்து நடக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team