முஸ்லிம் தனியார் சட்ட திருத்த குழு உறுப்பினர்களுக்கு ஒரு அவசர திறந்த மடல். » Sri Lanka Muslim

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த குழு உறுப்பினர்களுக்கு ஒரு அவசர திறந்த மடல்.

urgent

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஷ்-ஷைக் எந். அஸ்மீர்
நியாய சஹாயர் (காழி கோர்ட் ஜுரி)
புத்தளத்தில் வசிக்கும் இடம் பெயர்ந்தோர்களுக்கான காழி நீதி மன்றம்


1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது முன்னோர்களால் உருவாக்கி தரப்பட்ட விவாக, விவாகரத்து சம்பந்தமான முஸ்லிம் தனியார் சட்டம் இந் நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கப் பெற்ற மாபெரும் பாக்கியமாகும். இதனால் எமது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

காலத்தின் தேவையைக் கவனித்து இச்சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த முயற்சிப்பது சிறந்த விடயம். இதற்காக உழைக்கும் அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக!

புத்தளத்தில் வடமாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்து வசிக்கும் பகுதியில் சுமார் எட்டாண்டுகாலம் காழி கோர்ட்டில் ஜுரியாக பணிபுரிந்து கொண்டிருக்கும் அனுபவத்தை வைத்து முக்கிய ஒரு விடயத்தினை முஸ்லிம் சமூகத்திற்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

அதாவது, புத்தளத்தில் வடமாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்து வசிக்கும் ஒரு சில மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை காரணம் காட்டி குறிப்பிட்ட இச்சட்டதில் ஷரீஆவினுடைய பகுதியில் சில திருத்தங்களை கொண்டு வர முயற்சிப்பதாக சில தகவல்கள் அடிபடுகின்றன. ஆதலால் முதன்மையாக நான் வேண்டிக் கொள்வது யாதெனில் தயவு செய்து வடமாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்களை பலிக்காடாக வைத்து குளிர்காய விரும்புவதைப் போல் உங்கள் நடவடிக்கைகள் இருக்கின்றது. தயவு செய்து இச்சட்டத்தில் ஆழம் அறியாமல் ஷரீஆப் பகுதியில் கைவைக்க வேண்டாம்.

காழி கோட் முகாமைத்துவத்தின் தராதரத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது சாலச் சிறந்தது. ஷரீஆ விடயத்தில் உலமாக்களின் வழிகாட்டல் இல்லாமல் மாற்றங்களை கொண்டுவர முயற்சிப்பதானது அல்லாஹ்வின் சட்டத்தில் குறை காண்பதற்கு சமமானதாகும். இவ்விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.

குறிப்பாக, எமது பகுதியில் சிறு வயது திருமணங்கள் நடை பெறுவதாக குளிர்காய விரும்பும் சிலரால் கூறப்பட்டு வருகின்றது. அது உண்மைக்கு புறம்பானது. இப்பகுதிகளில் சீதனப் பிரச்சினை இருப்பதால் பெண்களின் திருமண வயது 20 வயதைத் தாண்டுகின்றது. அதை விட குறைந்த வயதில் நடந்திருந்தால் அது காதல் பிரச்சினையாகத்தான் இருக்குமே தவிர முறையாக பேசி செய்யப்படுகின்ற திருமணங்கள் அல்ல. எனவே பெண்களில் திருமண வயது வந்தும் திருமணம் முடித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் பெண்களின் பிரச்சினைதான் அதிகமாக இருக்கின்றது.

ஆண்களினால் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் பொருளாதாரம். இதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஆண்கள் எமக்கு பொருளாதார பிரச்சினை இருப்பதாக கூறி நாம் திருமணம் முடிக்கமாட்டோம் என்ற ஒரு முடிவெடுத்தால் எம் சமூகத்தின் நிலைமை என்னவாகும் என்று சற்று நிதானமாக சிந்துத்துப் பாருங்கள்.

பெண்களின் திருமண வயது
தற்பொழுது சட்டத்தில் உள்ள வயதெல்லை விவகாரம் அது எமக்குள்ள ஒரு அருளே தவிர ஒரு துர்ப்பாக்கியம் கிடையாது. இதனை நான் விரிவாக கூறவேண்டிய தேவையில்லை. உதாரணத்திற்கு மேற்கத்திய நாடுகளில் பெண்கள் சீரழிந்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் அதிகமானவர்கள் திருமணம் முடிக்கும் பொழுது தமது கன்னித் தன்மையை இழந்துள்ள நிலையில் தான் முடிக்கின்றார்கள்.
நம் நாட்டிலும் பிற மத சகோதரர்கள் கூட அவர்களின் திருமண சட்டத்தின் பிரகாரம் வயதெல்லைப் பிரச்சினையால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியான கேவலமான நிலைமைகளை எம் சமூகத்திலும் உருவாக்க சில விஷமிகள் முயற்சிக்கின்றார்கள். அதற்கு நாம் உடந்தையாகக் கூடாது.

பெண் காழி
அதே போன்று இன்னொரு விடயம் தான், பெண்கள் காழியாக வர வேண்டும் என்பதாக பெண்கள் தரப்பால் முன்வைக்கப்படக் கூடிய ஒன்று. ஷரீஆவின் கண்ணோட்டத்தில் இது அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, என்னுடைய அனுபவ அடிப்படையில் நான் கூறுவதாக இருந்தால் பெண்கள் காழியாக வரக் கூடாது. வந்தால் அந்தப் பொறுப்பை அவர்கள் சுமக்கவும் மாட்டார்கள்.

உதாரணத்திற்கு ஒன்று கூறுவதாக இருந்தால் அண்மையில் ஒரு பெண்ணை விசாரிக்கக் கூடிய நேரத்தில் அந்த பெண்ணினால் எமது காழியாருடன் ஏற்பட்ட ஒரு முரண்பாடினால் அவள் அந்தக் காழியாரையே பொய்யாக, அவதூறாகக் கூறி பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கு குறித்த சிலர்கள் உதவியாகவும் இருந்திருக்கின்றார்கள். அந்த முறைப்பாட்டின் காரணமாக காழியார் இன்று வரை நீதிமன்றம் அலைந்துக் கொண்டிருக்கிறார். இது சம்பந்தமாக (Quazi Board )க்கு அறிவித்தும் எந்த வித பலனும் இதுவரை அவருக்கு கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இதே ஒரு பெண் காழியாக இருந்தால் அவள் எவ்வளவு சிரமத்துக்கும், பிரச்சினைக்கும் முகங் கொடுக்க வேண்டி வந்திருக்கும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் குறிப்ப புத்தளம் உலமாக்களிடம் அவசர வேண்டுகோல்
எனவே, இச்சட்டத் திருத்த குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்பும் உள்ளதாக அறிகின்றேன். அவர்களிடம் பணிவாக வேண்டிக் கொள்வது குறிப்பிட்ட இச்சட்ட திருத்தத்தின் விடயங்களை உலமாக்களிடம் பகிரங்கமாக முன்வைத்து ஆலோசனையைப் பெற முயற்சி செய்யுங்கள். ஷரீஅத்திற்கு மாற்றமான விடயங்களை உட்புகுத்துவதற்கு உடந்தையாக நீங்கள் மாறவேண்டாம். இது உங்களின் தார்மீகப் பொறுப்பாகும். அதே சமயம் புத்தளம் மாவட்ட உலமாக்களும் அவசரமாக இது விடயத்தில் கவனம் செலுத்தி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன் வரவேண்டும்.

பொதுவாக முஸ்லிம் சமூகமும் இது விடயத்தில் வாய்மூடி இருக்க வேண்டாம். எம் சமூகத்தின் புத்தி ஜீவிகள் இவ் விடயத்தில் ஈடுபடுபவர்களை இனங்கண்டு அவர்களிடம் இது விடயமான கருத்துக்களைப் பெற்று சரியான வழிகாட்டல்களை வழங்குங்கள். குறித்த திருத்தங்களை வெளிப்படுத்தி சில காலம் சென்றதன் பின் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை மேற்கொள்வது சாலச் சிறந்தது. இது இரகசியமாக செய்யப்படுவது நல்லதல்ல. நம் நாட்டு அரசாங்கத்தின் யாப்பு திருத்தம் செய்வதற்கே பல இடங்களின் பொதுவான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன என்பதும் நாம் அறிந்த விடயமே.

நான் இங்கு அடக்கி எழுதியுள்ளேன். முஸ்லிம்களே இவ்விடயத்தில் விழித்தெழுங்கள்! விழித்தெழுங்கள்! விழித்தெழுங்கள்!. குறித்த குழுவிற்குப் பின்னால் சில மேற்கத்திய விஷமிகள் செயற்படுவதுபோல் இவர்களின் காரியம் அமைந்துள்ளது. அமைதியாக இருந்து விட்டு இறுதியில் கைசேதப்பட வேண்டாம் என வலியுறுத்திக் கூறிக்கொள்கின்றேன்.

Web Design by The Design Lanka