முஸ்லிம் பல்திருமண அனுமதி: இனங்களிடையே முரண்பாடு ஏற்படாத வகையில் தீர்மானம்! - Sri Lanka Muslim

முஸ்லிம் பல்திருமண அனுமதி: இனங்களிடையே முரண்பாடு ஏற்படாத வகையில் தீர்மானம்!

Contributors

பல்திருமணம் தொடர்பில் முஸ்லிம் தரப்பிலிருந்து இருவேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, மதம் சார்ந்த விடயம் என்பதால் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படாத வகையில் தேவையான திருத்தம் செய்யப்படுமென நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம்,தேச வழமை சட்டம் மற்றும் கண்டிய சட்டம் என்பன தனியார் சட்டங்கள். இவை நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரிலிருந்து உள்ளவை. அவர்களின் சமய கலாசார மற்றும் சொத்துரிமை தொடர்பில் அவை உருவாக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் விவாக,விவாகரத்து சட்டம் தொடர்பில் சலீம் மர்சூப் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்தது. அலி சப்ரி அமைச்சராக இருந்த போதும் சில திருத்தங்கள் நடந்தன. சட்டமூலம் கூட தயாரிக்கப்பட்டது. காதி நீதிமன்ற முறையை இரத்து செய்தல்,பெண்ணின் அனுமதியை பெறல்,திருமண வயது போன்றன தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டது. பல்திருமண அனுமதி தொடர்பில் இரு வேறு கருத்துகள் உள்ளன. அதற்கு அனுமதி வழங்கக் கூடாதென ஒரு தரப்பும் முதல் மனைவியின் விருப்பம் மற்றும் கணவனின் வசதி என்பவற்றுக்கு அமைய வரையறையுடன் அனுமதிக்குமாறு மற்றொரு தரப்பும் கோருகின்றன. முஸ்லிம் சமூகத்துடன் பேசி முரண்பாடு ஏற்படாதவாறு இறுதி முடிவு எட்டப்படும் என அமைச்சர்விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team