முஸ்லீம்கள் மீதான அடாவடித்தனங்கள் ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவரப்படவேண்டும் » Sri Lanka Muslim

முஸ்லீம்கள் மீதான அடாவடித்தனங்கள் ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்

beruwala attack1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 -ஸபர் அஹமத்-


2014 ஜுன் 15 .அளுத்கம கலவரம் நடந்த தினத்தில்…மன்னிக்கவும்.. ..’கலவரம்’ என்ற சொல்லை உபயோகிக்கக் கூடாது.கலவரம் என்பது இரு தரப்புகள் மோதிக் கொள்வது.ஆகவே இன அழிப்பு ( GENOCIDE) நடை பெற்ற தினத்தில் அல்ஜஸீரா தொலைக்காட்சி சேவை எப்படியோ சம்பவத்தை மோப்பம் பிடித்து கள நிலவரங்களை ஒளிபரப்ப இந்த இன அழிப்பு சர்வதேச கவனம் பெற்றது.அல்ஜஸீராவைத் தொடர்ந்து பீபீஸின் வாகனங்களும் படை எடுத்தன.

இலங்கை அரசு வெட்கித் தலை குனிந்து முந்தானையைப் போட்டுக் கொண்டு அடுப்பங்கரைக்குச் சென்றது….சம்பிக்க ரணவக்க , அளுத்கமைக் கலவரத்தின் பின்னணியில் ஜிஹாத் க்ரூப் ஒன்று இருந்ததாகவும் சிங்கள வீடுகள் எல்லாம் இந்த தீவிரவாத குழுவால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டதாகவும் கண்டுபிடித்துவிட்டு சர்வதேச ஊடகங்களை கூட்டி வந்தவர்கள் எல்லாம் தேச துரோகிகள் என்று பட்டம் சூட்டினார்..இதெல்லாம் நடந்தது ரிச்சட் நிக்ஸன் அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அல்ல.இதே சமூக வலைதளங்கள் கோலோச்சிய காலத்தில்.

இந்நிலையில் அளுத்கம கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முழு நேர விவாதம் ஒன்றை ஜே.வீ.பீ இன் அநுரகுமார திஸாநாயக்க கோர அந்த விவாதமும் நடைபெற்றது..ஆனால் துரதிர்ஷ்டம்.முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இருக்கவில்லை..எல்லா ஜீவாரசிகளும் கிங்ஸ்பரி ஹோட்டலில் இப்தார் சாப்பிட சென்று இருந்தன..

டிஸ்கவரி சேனலில் மான் கூட்டத்தை வேட்டையாடும் சிங்கம் போல தனியாளாய் கர்சித்து விட்டு ஓய்ந்தார் அநுரகுமார.அதன்பின்னர் அடுத்த 6 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் வந்தது.. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மைத்திரி உடன் முஸ்லிம் தலைவர்கள் சேர்ந்து கொண்டார்கள்.  அனைவரும் புனித நீரால் கழுவப்பட்ட சுத்தமான பக்தர்களானார்கள்..கடைசியில் யாரும் அநுரகுமார திஸாநாயக்கவை கண்டு கொள்ளவில்லை.. சமூகமும் ‘ ஹேப்பி, இன்று முதல் ஹேப்பி’ என்று கீதம் பாடிவிட்டு தூங்கச் சென்றது..

2014 இல் ஆவது அளுத்கம இன அழிப்பு ஒரே நாளில் முடிந்துவிட்டது..ஆனால் இங்கே மெல்ல கொல்லும் விஷம்..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவலம்..இதற்கு இந்த முஸ்லிம் சமூகத்தின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லும் கூட்டம் சொல்வதை தலையாட்டி பொம்மை போல கேட்டுக் கொண்டு இருந்தால் மியன்மாரை விட கேவல நிலை ஏற்படும்…தலைமைகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி பாதுகாப்பான வலயத்தில் இருக்கிறார்கள்.அவர்களின் உடமைகள் எரிக்கப்படுவதில்லை..அவர்களின் வாகனங்கள் சேதமாக்கப்படுவதில்லை.அவர்களின் பெண் பிள்ளைகள் மானபங்கப்படுத்தப்படுவதில்லை.எல்லாமே எம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத்தான்..நாம்..என்ன செய்யலாம்..எப்படி செய்யலாம்..

1 கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முஸ்லிம்களுக்க் எதிராக நடந்த வன்முறைகள், பொருளாதார இழப்புகள் பற்றிய ஒரு புள்ளிவிபரத்தை திரட்டுதல்..மேலும் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்று திரட்டுதல்

2 இதுவரை எரிக்கப்பட்ட பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் பற்றிய ஒரு டாக்குமெண்டரி தயாரித்தல்.ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற பண்டிதர்களை அதில் பேசவைத்தல்

3 மியன்மார் அவலங்களை வெளிக் கொணர்ந்து மியன்மார் அரசையே கிடுகிடுக்க வைத்த அல்ஜஸீரா போன்ற ஊடகங்களை வரவழைத்து குறித்த டாக்குமெண்டரியை வழங்குதல்..இலங்கை விவகாரத்தை பேசு பொருளாக்க கூறுதல்..

4 மகிந்த காலத்தில் போலல்லாது இதுவரை கொஞ்ச நஞ்ச ஊடக சுதந்திரமாவது மிச்சம் உள்ளதால் சர்வதேச ஊடகங்களை எல்லாம் அழைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தல்..அதில் மேற்படி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவைத்தல்

5 அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தல்..இதில் எந்தவித கோஷங்களும் தேவை..இல்லை..சுலோகங்களை ஏந்திக் கொண்டு நிற்கலாம்..சர்வதேச கவனம் முக்கியம்

6 ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இலங்கை விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கை சமர்ப்பித்தல்.சிவில் அமைப்புகள் இது பற்றி உடன் கவனம் செலுத்தலாம்

7 எமது அரசியல் கோமாளிகளுக்கும் , மார்க்க புரோகிதர்களுக்கும் ,முல்லா கூட்டத்திற்கும் கூஜா தூக்குவதை விட்டுத் தொலைத்துவிட்டு, சிங்கள சமூகத்தில் இருக்கும் புத்திஜீவிகள், விக்டர் ஐவன் போன்ற பிரபல ஊடகவியலாளர்களுடன் இறுக்கமான நட்பைப் பேணி அவர்கள் மூலமாகவே பிரச்னையில் சீரியஸ்தனத்தை பெரும்பான்மையினருக்கு எத்திவைத்தல்.

8 கடைசியாக ஒரு முக்கிய விசயம் 2009 இல் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் அப்பாவிப் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவே இல்லை என்று பெருங்குரல் எழுப்பியவாறு பிஸ்னஸ் க்ளாஸில் ஜெனீவாவுக்கு இலவச பயணம் மேற்கொண்டு இன்னொரு சிறுபான்மை சமூகத்தில் வயிற்றில் அடித்த ஆத்மாக்கள் எல்லாம் செய்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் பெறல்….

Web Design by The Design Lanka