மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் பதிவான ஆகக்கூடிய மரணங்கள்..! - Sri Lanka Muslim

மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் பதிவான ஆகக்கூடிய மரணங்கள்..!

Contributors

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று பிற்பகல் 1 .30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 837 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிழக்கில் ஆகக் கூடுதலாக அம்பாறை பிராந்திய சுகாதார சேவை பிரிவில் 227 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பில் 342 பேரும், ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 163 பேரும் மூன்று மரணங்களும், கல்முனையில் 105 பேரும் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையாகும். மூன்றாவது அலையில் மொத்தமாக 20 ஆயிரத்து 204 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 393 மரணங்களும் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு லட்சம் தடுப்பூசிகளும் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பிரிவில் 188743, மட்டக்களப்பு 301281, அம்பாறை மாவட்டத்தில் 129590 தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.

கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் இரண்டாவது முறையும் வழங்கி 4 அல்லது 5 கிழமைகளின் பின்பு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு உடலில் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே தடுப்பு மருந்துகள் பெற்று விட்டோம் என நினைத்து அலட்சியமாக நடந்துகொள்வதை பொதுமக்கள் முற்றாகத் தவிர்க்க வேண்டுமெனவும் விஷேடமாக பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்கள் திருமண வைபவங்கள், பொழுதுபோக்கு, ஒன்றுகூடல்கள், முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.

ஒரு சில இடங்களுக்கு தவிர்க்க முடியாதளவு பொதுமக்கள் வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் இரண்டு மீட்டர் தூரத்தை பேணுவதுடன், முறையாக முகக்கவசம் அணிவதும் அடிக்கடி மணிக்கட்டு உட்பட கைகளை நன்றாக தேய்த்து கழுவுவதும் அவசியமாகும் எனவும் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ ஆர்.எம்.தௌபீக் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team