மேலதிக கொடுப்பனவை வழங்காவிட்டால் கம்பனிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் - வடிவேல் சுரேஷ் - Sri Lanka Muslim

மேலதிக கொடுப்பனவை வழங்காவிட்டால் கம்பனிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் – வடிவேல் சுரேஷ்

Contributors

எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை மாத்திரமே தம்மால் வழங்க முடியும் என்றும், மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் கம்பனிகள் தெரிவித்துள்ளன. அவ்வாறு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் கம்பனிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குமாறு அறிவித்து வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கம்பனிகள் வழக்கு தாக்கல் செய்திருந்தன. எனினும் நீதிமன்றத்தினால் கம்பனிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

எனவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட தினமான மார்ச் 5 ஆம் திகதி முதல் நாளாந்த சம்பளம் 1000 ரூபா என்ற அடிப்படையில் நிலுவைக் கொடுப்பனவையும் இணைத்து இம்மாதம் 10 ஆம் திகதி முழுமையான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய 22 கம்பனிகளும், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்ற தோட்ட முகாமைத்துவமும் 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை நிச்சயம் வழங்க வேண்டும். எனினும் 1000 ரூபாய் சம்பளத்தை மாத்திரமே தம்மால் வழங்க முடியும் என்றும், மேலதிக கொடுப்பனவு ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என்றும் கம்பனிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பின் மூலம் கம்பனிகள் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை மீறுவதற்கு முயற்சிக்கின்றனவா ? அல்லது நீதிமன்றத்தை அவமதிக்கின்றனவா? கம்பனிகளின் இவ்வாறான வஞ்சித்தல்களை முறியடிக்க சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும்.

இது கம்பனிகளால் தொடப்பட்ட வழக்கிற்கு கிடைத்துள்ள தீர்ப்பாகும். எனவே அவை நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய செயற்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்ல வேண்டியேற்படும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team