மேல் கொத்மலை, லக்ஷபான, கனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு! - Sri Lanka Muslim

மேல் கொத்மலை, லக்ஷபான, கனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு!

Contributors

மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

அதற்கமைய, மேல் கொத்மலை, லக்ஷபான மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று மதியம் மேலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டன.

இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. அத்துடன், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமை தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், கனியன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

இரண்டு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால், களனி கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்தார்.

இதேவேளை, ஹட்டன் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பெய்துவரும் அடை மழை காரணமாக, பாதுகாப்பு பக்க சுவர் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில், இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் மண்மேடுகளும் மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team