மையத்து குழிக்குள் படுத்துக்கொண்டும், Live போடுவார்கள்..! - Sri Lanka Muslim

மையத்து குழிக்குள் படுத்துக்கொண்டும், Live போடுவார்கள்..!

Contributors

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

இருபதுக்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மையத்து குழிக்குள் படுத்துக்கொண்டும் நேரலை போடுவார்கள் என திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.இன்று(06) கிண்ணியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாஸா அடக்க போராட்டம் என்பது 2020 ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டம்.இன்று பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் பிரச்சார மேடைகளில் இதை பேசியே வாக்கு கேட்டனர்.பொதுஜன பெரமுனவுக்கு  ஏசி வாக்கு கேட்காத யாரும் இங்கில்லை.

ஆனால் இவ்வாறு தேர்தல் காலம் முழுவதும் இந்த அரசுக்கு ஏசி வாக்கு கேட்டவர்கள் இருபதாம் திருத்தசட்டத்துக்கு ஆதரவு அளித்து அரசுடன் இணைந்து கொண்டபின் ஜனாஸா எரிப்புக்கான எந்த போராட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.ஏன் இதுவரை இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் பேசாத உறுப்பினர் ஒருவர் கூட உள்ளார்.

மக்கள் மத்தியில் இவர்கள் தொடர்பாக விமர்சனங்கள் அதிகரிக்க தாம் ஜனாஸா அடக்க அனுமதி வேண்டியே இருபதுக்கு ஆதரவு அளித்ததாகவும் ஆனால் அரசாங்கம் தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் அதனால் மக்கள் முன் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். 

ஆனால் இருபதுக்கு ஆதரவு தெரிவித்த  அடுத்தவாரமே இவர்களுக்கு வேலைவாய்ப்புக்களும் காபட் வீதி ஒப்பந்தங்களும் அரசினால் வழங்கப்பட்டன.ஆகவே இவர்கள் ஜனாஸா தொடர்பாக அரசுடன் ஒப்பந்தம் செய்திருந்தால் ஜனாஸா அடக்கம் செய்வதுக்கான அனுமதியும் உடன் கிடைத்திருக்கும். 

இந்த வேலைவாய்ப்புக்களுக்காகவும் காபட் வீதி ஒப்பந்தங்களுக்காகவும் இதுவரை காலமும் எந்தவித போராட்டங்களிலும் கலந்துகொள்ளாது மௌனமாக ஒளிந்துகொண்டிருந்த இவர்கள் 330 க்கு மேற்பட்ட ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட பின்னர் சர்வதேச அழுத்தத்தாலும் தொடர்ச்சியான போராட்டத்தாலும் அனுமதி கிடைத்த பின் ஒவ்வொருவராக தாம்தான் இதற்கு அனுமதி எடுத்துத்தந்தது என வெளியில் வர ஆரம்பித்திருக்கிறார்கள். 

அதிலும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய தாம்தான் இடத்தை தெரிவுசெய்து கொடுத்தது என கூறி ஜனாஸா குழிகளை முகப்புத்தகத்தில் நேரலை போடுமளவுக்கு கீழ்த்தரமாக சென்றுவிட்டனர்.விட்டால் மையத்து குழிக்குள் படுத்துக்கொண்டும் நேரலை போடுவார்கள் என தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team