மோர்சியின் ஆதரவாளர்களாக கைதான 21 பெண்கள் பொது மன்னிப்பில் விடுதலை - Sri Lanka Muslim

மோர்சியின் ஆதரவாளர்களாக கைதான 21 பெண்கள் பொது மன்னிப்பில் விடுதலை

Contributors

எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்நாட்டு அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் முகமது மோர்சி.

அதன்பின் 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று எகிப்தின் அதிபரான முகமது மோர்சி, முபாரக்கின் அரசியல் கட்டமைப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு தன்னிடம் வரம்பற்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டார். இந்த அதிகாரங்கள் நீதித்துறையின் மேற்பார்வை அல்லது பரிசீலனை இல்லாமல் சட்டம் இயற்றும் சக்தியை அவருக்கு அளித்தது.

அத்துடன் பத்திரிகையாளர்களும், வன்முறையற்ற ஆர்ப்பாட்டக்காரர்களும் தாக்கப்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். தொடர் போராட்டங்களின் விளைவாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி எகிப்து ராணுவத்தால் அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். எகிப்து தலைமை நீதிபதி தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டது.

பதவி இறக்கம் செய்யப்பட்ட முகமது மோர்சி ரகசிய இடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவு இயக்கமான இஸ்லாமிய சகோதரத்துவம் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மோர்சியின் ஆதரவாளர்களுக்கும், அரசுத் தரப்புகளுக்கும் இடையிலான மோதல்கள் குறைந்தபாடில்லை. அலெக்ஸாண்டிரியா நகரில் மோர்சியை ஆதரித்து போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 21 பெண்களும் இடம் பெற்றுள்ளனர். விசாரணைக்காக அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் அலெக்ஸாண்டிரியா கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 21 பெண்களும் சிறை சீருடையில் கைவிலங்குடன் நின்ற பரிதாப காட்சி எகிப்து மக்களை கொதிப்படைய வைத்தது.

அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த சட்டப்பிரிவின் கீழ் 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை கேட்டு ஆவேசப்பட்ட பலர் அந்த பெண்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

கெய்ரோ பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். எகிப்தில் முன் அனுமதியின்றி போராட்டம் நடத்த கூடாது என இடைக்கால அதிபர் கடந்த வாரம் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த புதிய சட்டத்தை பொருட்படுத்தாமல் மக்கள் முன் அனுமதியின்றி போராட்டத்தில் குதித்தனர். போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் கெய்ரோ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

இந்நிலையில், நீதிமன்ற நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் தண்டனை அளிக்கப்பட்ட 21 பெண்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாக எகிப்து தற்காலிக அதிபர் அட்லி மன்சூர் அறிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team