மௌன விரதம் இருந்தவர்கள் தம்பட்டம் போடத் தேவையில்லை - இம்ரான் ஆவேசம்..! - Sri Lanka Muslim

மௌன விரதம் இருந்தவர்கள் தம்பட்டம் போடத் தேவையில்லை – இம்ரான் ஆவேசம்..!

Contributors

கொரோனா காரணமாக மரணித்தவர்களது ஜனாஸாக்களை இந்த நாட்டுக்குள் எங்காவது அடக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்த உரிமைக்காக நாம் பங்குகொண்ட எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடடிக்கையிலும் பங்கேற்காதவர்கள, ஜனாஸாக்களை எரிக்காமல் அடக்கும் உரிமை கிடைத்தபின் அந்த ஜனாஸாக்களை அடக்க மையவாடியை பெற்றுத்தந்ததாக பீற்றிக்கொள்வது நகைப்புக்கிடமானது என ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை, கிண்ணியா – மஹமாறு கிராமத்தில் நல்லடக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணியகம் கடந்த 25ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளது எனவும் இதை வைத்து சில அரசியல்வாதிகள் ஜனாஸாக்களை அடக்க மையவாடியை பெற்றுத்தந்ததாகச் கூறி அரசியல் செய்ய முனையும் விடயம் வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – கிண்ணியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாஸாக்களை அடக்கும் அனுமதி இரணைமடுவில் மட்டும் என்ற போது கூட இத்தகையவர்களது குரல்களை கேட்க முடியவில்லை. எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் எண்ணிக்கை பற்றி சோரம்போன சிலர் கயமைத்தனமாக கருத்துக் கூறியபோது அத்தகையவர்களுடன் கூட்டணியமைத்து மௌன விரதம் இருந்தவர்கள் தான் இன்று மரணங்களிலும் மண்ணறைகளிலும் அரசியல் லாபம் தேடுகின்றார்கள்.

ஜனாஸா அடக்கம் என்பது எம் ஒவ்வொருவரதும் கனவாக காணப்பட்ட விடயமாக இருந்து. கடந்த நாட்களில் நாங்கள் அந்த அனுமதிக்கான அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றோம். வெள்ளைத்துணி போராட்டம் முதல் ஆர்ப்பாட்டங்கள், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியமை என்று பல போராட்டங்களை மேற்கொண்டோம்.

கடைசியாக கொரோனா ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் அடக்க அனுமதி கிடைத்தது. ஆயினும் எமக்கு அதிலும் பல சிரமங்கள் இருந்தன. எரிப்பிலிருந்து அடக்குவதற்கு போராடிய எம்மால் இது குறித்தும் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

ஓட்டமாவடி தவிர இன்னும் ஓரிரு இடங்களில் இந்த ஜனாஸாக்களை அடக்குவதற்கான அனுமதி கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது. இதற்காக கிண்ணியா மக்களதும் பிரதிநிதி என்ற வகையில் நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்திருக்கின்றோம்.

கிண்ணியாவில் ஜனாஸாக்களை அடக்க அனுமதி கோரி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம், உரிய அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். கிண்ணியா மக்களுக்கு கிண்ணியாவிற்குள் ஜனாஸாக்களை அடக்கும் வாய்ப்பு கிடைப்பதை இல்லாமலாக்க கூடிய வகையில், பொறுப்பற்ற முறையில் ஒரு சுகாதாரத்துறை அதிகாரி வெளியிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்கு எதிராக குரல் எழுப்பி கிண்ணியாவிற்குள் அடக்க வேண்டிய அவசியம் குறித்த கவனஈர்ப்பை செய்துள்ளோம்.

எமது இந்த முயற்சிகள் தவிர இந்த முடிவு எட்டப்படுவதற்கு ஏதுவாக கிண்ணியா பிரதேச செயலாளர், உலமா சபையினர் உள்ளிட்ட சிவில் அமைப்பினர், சக நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் என்று பலரும் தம்மாலான முயற்சிகளை, பங்களிப்புகளை செய்துள்ளனர்.

எனவே எங்களது முயற்சியால் மட்டுமே இந்த உரிமை கிடைத்தது என்று எங்கேயும் நாம் சொல்லிக்கொள்ளப்போவதில்லை இந்த விடயத்தை அரசியலாக்கி லாபம் தேடும் சிலரது நடவடிக்கைளுக்கு எதிராக எமது ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் அவ்வாறு பதிவுளையிட்ட போதிலும் கூட நாம் தான் இந்த அனுமதிக்கு முழுச் சொந்தக்காரர்கள் என்று தம்பட்டம் அடிக்கமாட்டோம்.

இது ஒரு சமூகத்தின் ஒற்றுமையான செயற்பாட்டின் விளைவு. அதற்கு நாங்கள் எங்களது முழுமையான பங்களிப்பை நல்கியுள்ளோம். யாரவது இதற்கு முழுமையாக உரிமை கோரினால் அதன் காரணமாக அடுத்த அனைவரது முயற்சிகளும் மறுதலிக்கப்படும்.

எனவே நாம் தான் இதனை நூறுவீதம் சாதித்தோம் என்று நாங்கள் சொல்ல மாட்டோம். கிண்ணியாவில் ஜனாஸாக்களை அடக்குவதில் எங்களது பங்களிப்புகளும் உள்ளன. அதனை மக்களும் அறிவார்கள்.

கிண்ணியா மக்களுக்கு இருக்கின்ற பலநூறு பிரச்சினைகளில் இது ஒன்று மட்டுமே. இன்னும் இருக்கின்ற ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய தார்மீக பொறுப்பு எமக்கிருக்கின்றது.

எனவே இந்த ஒரு விடயத்தை மட்டும் சாதனையாக சொல்லிக்கொண்டிருக்காமல் நாம் அடுத்த பணிகளை பார்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team