யாசர் அராபத் அணிந்திருந்த உடையில் விஷம் - சுவிட்சர்லாந்து நிபுணர்கள் உறுதி செய்தனர் - Sri Lanka Muslim

யாசர் அராபத் அணிந்திருந்த உடையில் விஷம் – சுவிட்சர்லாந்து நிபுணர்கள் உறுதி செய்தனர்

Contributors

பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், அணிந்திருந்த உடையில், ‘பொலோனியம்’ என்ற, விஷத்தின் தடயங்கள் இருந்ததை, சுவிட்சர்லாந்து நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம், பாரீசுக்கு அழைத்து செல்லப்பட்டார். 2004ம் ஆண்டு, நவ., 11ம் தேதி பாரீஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். அராபத் மரணம் குறித்து, பாலஸ்தீன தலைவர்கள் சந்தேகப்பட்டனர். கோமா நிலையில் அராபத் இறந்ததால், பிரேத பரிசோதனை ஏதும் செய்யப்படாமல், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

‘பொலொனியம்’:

இதற்கிடையே, அராபத் இறக்கும் போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை சுவிட்சர்லாந்து நாட்டு நிபுணர்கள், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெளியிட்டனர். அராபத் இறக்கும் போது அவரது உடலில் கொடிய விஷமான ‘பொலொனியம்’ இருந்து உள்ளது. ரஷ்ய உளவாளியான, அலெக்சாண்டர் லிட்வினென்கோ என்பவர், லண்டன் ஓட்டலில், தேனீர் கோப்பையில் தடவப்பட்ட ‘பொலொனியம்’ விஷத்தால் கொல்லப்பட்டார்.

இதே முறையில் தான், அராபத் உடலிலும் ‘பொலோனியம்’ இருந்துள்ளது, என ஆய்வக அறிக்கையில் கூறப்பட்டது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள, ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட, யாசர்அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பரிசோதனை செய்ய, பாலஸ்தீன நிர்வாகமும், அராபத்தின் மனைவி சுகாவும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, சுவிட்சர்லாந்து நாட்டின், லூசானே பல்கலைக்கழக கதிர்வீச்சு துறை நிபுணர்கள், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், ரமலாவுக்கு சென்று, அராபத்தின் உடலை வெளியே எடுத்து பரிசோதித்தனர். அராபத் சமாதியில் சில எலும்புகளையும், துணி இழைகளையும் சேகரித்தனர். இந்த ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது: அராபத், கடைசி நேரத்தில் அணிந்திருந்த உடைகளை, அவரது மனைவி சுகா, ஆய்வுக்காக அளித்திருந்தார். ‘புளுடோனியம்-210’ இந்த உடை மற்றும் அவரது உடல் ஆகியவற்றிலிருந்து, 75 சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டன. அவரது உள்ளாடை, டூத் பிரஷ், தொப்பி, உள்ளிட்டவைகளில் மேற்கொண்ட ஆய்வில், ‘புளுடோனியம்-210’ தடயங்கள் இருந்தன. இதன் மூலம், அவருக்கு இந்த விஷம் செலுத்தப்பட்டிருக்கலாம், என சந்தேகம் உள்ளது. இவ்வாறு இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team