யாழில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் - Sri Lanka Muslim

யாழில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மற்றும் தென்மராட்சி வேம்பிராய் ஆகிய பகுதிகளில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இன்றையதினம் (13) இடம்பெற்றது.

 

இதன்போது வடமராட்சியின் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் நீர் விநியோகத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது.

 

அதன்பிரகாரம் வல்வெட்டித்துறையில் 1000 குடும்பங்களுக்கு விநியோக இணைப்பு வழங்கக்கூடியதாக இருந்தபோதிலும் இதுவரையில் 150 குடும்பங்களுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று பருத்தித்துறையில் 1500 குடும்பங்களுக்கு இணைப்பு வழங்கக்கூடியதாக உள்ளபோதிலும் இதுவரையில் 20 குடும்பங்களுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டது.

 

இதனிடையே கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

 

இதேபோன்று மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் குறித்த சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர் விநியோக திட்டத்தின்போது பொது மக்கள் எதிர்நோக்கிவருகின்ற இடர்பாடுகள் பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் பொதுமக்களினதும் துறைசார்ந்த அரச அதிகாரிகளினதும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

 

இதன்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ்.பிராந்திய முகாமையாளர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட துறைசார்ந்தோர் உடனிருந்தனர்.

 

01

 

02

 

03

Web Design by Srilanka Muslims Web Team