யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய விசா சேவைகளுக்கான விண்ணப்ப மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது - Sri Lanka Muslim

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய விசா சேவைகளுக்கான விண்ணப்ப மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது

Contributors

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் 13ஆம் திகதியிலிருந்து மூடப்பட்ட இல. 145, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய விசா சேவைகளுக்கான (IVS) விண்ணப்ப மையமானது 2021 மார்ச் 3ஆம் திகதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய விசா சேவைகளுக்கான (IVS) விண்ணப்ப மையத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் முற்பகல் 09.00 மணி முதல் 13.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா விசா தவிர்ந்த ஏனைய அனைத்து வகை விசா விண்ணப்பங்களும் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் IVS விண்ணப்ப மையத்தில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்துவதன் மூலம் தங்களது விசா வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களை (பாஸ்போட்) தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது IVS விண்ணப்ப மையத்தில் புதன்கிழமைகளிலும் அல்லது தூதரகத்திலிருந்து வேலை நாட்களில் 17.00 முதல் 17.30 மணி வரை நேரடியாக தமது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அவசர தேவைகளுக்கான விண்ணப்பதாரர்கள் புதன்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் முற்பகல் 09.00 – 1200 மணி வரை நேரடியாக யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இலத்திரனியல் விசா விண்ணப்பம், மற்றும் பல்வேறு வகை விசாக்களுக்கு தேவையான ஆவணங்கள் மேலும் பிற தேவைகள் குறித்த தகவல்களுக்கு துணைத் தூதரகத்தின் இணையத்தளமான “cgijaffna.gov.in” இல் உள்ள “விசா” மெனுவைப் பார்வையிடவும்.

Web Design by Srilanka Muslims Web Team