யாழ்ப்பாணத்தில் அமையவுள்ள குதிரைகள் சரனாலயம் - Sri Lanka Muslim

யாழ்ப்பாணத்தில் அமையவுள்ள குதிரைகள் சரனாலயம்

Contributors
author image

Artist Shan

இலங்கையிலேயே காட்டுக் குதிரைகள் வாழும் ஒரேயொரு இடமாக யாழ்ப்பாணத்தின் தீவுக்கூட்டங்களுள் தலையாயதான நெடுந்தீவு விளங்குகின்றது. தீவின் தென்பகுதியெங்கணும் இக்குதிரைகள் பரந்துவாழ்கின்றன. இருப்பினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்குதிரைகளைப் பாதுகாப்பதற்கான முனைப்புக்கள் இதுவரை மேற்கொள்ளப்படாமலேயே இருந்துவந்துள்ளன.

 

இரு வாரங்களின்முன் இலங்கையின் வன ஜீவராசிகள் திணைக்களம் முதற்கட்ட முனைப்பாக இக்குதிரைகள் பற்றிய ஆய்வினை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களோடு இணைந்து மேற்கொண்டிருந்தது. அதன்படி நெடுந்தீவில் மொத்தம் 503 குதிரைகள் வாழ்வதாகவும் அவற்றினைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் நேற்று அறிவித்துள்ளது. இதன்படி தீவின் தென்பகுதியில் பாரிய நீர்த்தேக்கமொன்றும் அமைக்கப்படவுள்ளது.

 

ஆக நெடுந்தீவின் தென்பகுதியினை குதிரைகள் சரணாலயமாக அறிவித்து குதிரைகள் பாதுகாக்கப்படுவது வரவேற்கத்தக்கதும் யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்க்கத்தக்கதுமான விடயமாகும். ஏனெனில் நெடுந்தீவுக் குதிரைகள் வெளிமாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக நெடுந்தீவின் காவல்த்துறை அதிகாரியொருவர் ஐந்து குதிரைகள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளாரென்று முல்லைத்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

அந்த வகையில் இலங்கையின் புதிய சரணாலயமாகவும் யாழ்ப்பாணத்தின் இரண்டாவது சரணாலயமாகவும் நெடுந்தீவு குதிரைகள் சரணாலயம் அமையவுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ஏற்கனவே வடமராட்சி கிழக்கின் தென்பகுதியில் ‘சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம்’ அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team