யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிய தடை? - Sri Lanka Muslim

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிய தடை?

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிவரும் காலங்களில் நிகாப் எனப்படும் இஸ்லாமிய ஆடை அணிவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீட  பீடாதிபதி எஸ்.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

 

மருத்துவ பீடத்திலுள்ள மருந்தகவியல் கற்கை நெறியினை தொடரும் முஸ்லீம் மாணவி ஒருவர் கடந்த கல்வியாண்டு இடம்பெற்ற பரீட்சை ஒன்றிற்கு நிகாப் அணிந்த நிலையில் தோற்றியிருந்தார்.இந்நிலையில் பரீட்சை மேற்பார்வையாளராக கடமையாற்றியவர் இனி வரும் காலங்களில் பரீட்சைக்கு வரும்போது நிகாப் அணிந்து வர வேண்டாம் என அறிவித்துள்ளார்.

 

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி இவ்விடயம் குறித்து மருத்துவ பீட பீடாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.இக்கடிதத்தின் பிரகாரம் கடந்த ஜுலை 16 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி நிகாப் அணிய தடை விதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் குறித்த கற்கை நெறியின் இரண்டாம் அரையாண்டு பரீட்சை தற்போது ஆரம்பமான நிலையில் குறித்த மாணவிற்கு பல்கலைக்கழகத்தில் நிகாப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கடிதம் மருத்துவ பீடாதிபதியினால் அக்கடிதத்திற்கான  பதிலுடன்  குறித்த மாணவிக்கு ஆகஸ்ட் 22 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது.இதனால் இம்மாணவி உளரீதியாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்விடயம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி தனது கருத்தில்
 
 இவ்விடயம் தொடர்பாக கடிதம் மூலம் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார பிரிவின் பொறுப்பாளர் ,இணைந்த சுகாதார விஞ்ஞான பிரிவின் உதவிப்பதிவாளர் மற்றும் மருந்தகவியல் கற்கை நெறியின் இணைப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

இத்தீர்மானம் முஸ்லீம் மாணவர்களின் நலன் கருதியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதாவது கடந்த காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு அம்மாணவி நிகாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.எனினும்  அவரது ஆள் அடையாளத்தை பரீட்சை நிலையத்திற்கு வெளியே அழைத்து  சென்று மேற்பார்வையாளரினால்  தனியறை ஒன்றில் வைத்து குறித்த மாணவி தான்  என உறுதிப்படுத்தப்பட்டது.

 

இவ்வாறான செயலினால் குறித்த மாணவியின் உள ரீதியாக பாதிப்படைய வாய்ப்புள்ளது.இதனை கருத்திற்கொண்டு தான் மருத்துவ பீட சபை நிகாப் அணிய தடைவிதிப்பது என தீர்மானித்துள்ளது .
இது தவிர ஏனைய பல்கலைக்கழகங்களில் குறித்த பிரச்சினை தொடர்பாக பின்பற்றப்படும் விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

குறித்த நிகாப் தடை குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி  தொடர்பாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்திடம் வினவியபோது,
 
இவ்விடயத்தை அரசியல் ஆக்கும் நோக்கில் சிலர் ஈடுபடுகின்றனர்.இது தவறு.நான் உள்ள பீடத்தில் இப்பிரச்சினை எழுந்துள்ளது.ஆகவே இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் என தனது கருத்தில் தெரிவித்தார்.

 

இவ்விடயம் தொடரபில் மருத்துவ பீட பதிவாளர் ஆர்.சர்வேஸ்வரா தனது கருத்தில் முஸ்லீம் மாணவர்களின் நலனை அடிப்படையாக வைத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.இக்கற்கை நெறியை தொடரும் மாணவர்கள் நோயாளர்களுடன் பணியாற்றுபவர்கள்.கட்டாயமாக அவர்கள் ஆளடையாளம் இங்கு முக்கியம் பெறுகிறது.இது நோயாளர்களின் பாதுகாப்பிற்கு உதவும்.ஆகவே தான் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது என நம்புவதாக தெரிவித்தார்.

 

இம்மாணவியின் விடயத்தை சுமூகமாக தீர்க்கும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் முஸ்லீம் மஜ்லீஸ் அமைப்பு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக அதன் தலைவர் எச.எம்.எம். ஹலீம் தெரிவித்தார்.
 

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் கல்வியினை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

17

Web Design by Srilanka Muslims Web Team